
மேட்டூர்,May 23: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாமூல் வாங்குவதற்காக வாகனத்தை விரட்டிச் சென்ற போக்குவரத்துத் துறை தலைமை காவலரின் கார் மோதியதில், மோட்டார் சைக்கிளில் வந்த கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தைக் கண்டித்து, சம்பந்தப்பட்ட காவலரை உரிய மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மாதையன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (32), கூலித்தொழிலாளி. இவருக்கு பவதாரணி என்ற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். ராஜ்குமார் இன்று மாலை பெருந்துறை பகுதிக்குச் சென்றுவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் மாதையன்குட்டை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். மேட்டூர் அருகே கருங்கரடு என்ற இடத்தில் அவர் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ராஜ்குமாரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாமூல் வேட்டை விபரீதம்: விபத்து குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையிலும், உயிரிழந்தவரின் உறவினர்கள் அளித்த புகாரிலும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேட்டூர் போக்குவரத்து காவல் பிரிவில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வரும் பூபதி என்பவர், இன்று மதிய உணவு இடைவேளையின் போது, சாதாரண உடையில் தனது சொந்த காரில் அப்பகுதிக்கு வந்துள்ளார்.
அவ்வழியாக எருமைகளை ஏற்றிச் சென்ற லாரிகளை மறித்து மாமூல் வாங்குவதற்காக, பூபதி தனது காரில் அந்த லாரிகளைத் துரத்திச் சென்றுள்ளார். லாரி ஓட்டுநர்களிடம் மாமூல் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர் காரைத் திருப்பி வேகமாக வந்தபோதுதான், நிலைதடுமாறி ராஜ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. மேலும், விபத்தை ஏற்படுத்திய காவலர் பூபதியின் காருக்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை .
காவலர் ஓட்டி வந்த கார் மோதி தொழிலாளி உயிரிழந்த தகவல் பரவியதைத் தொடர்ந்து, ராஜ்குமாரின் உறவினர்கள் மற்றும் மாதையன்குட்டை கிராம மக்கள் திரளாக மேட்டூர் காவல் நிலையத்தில் கூடினர். விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலர் பூபதி மதுபோதையில் இருந்தாரா என்பதைக் கண்டறிய, போலீஸார் அவரை மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு போதை நிலையைத் துல்லியமாகக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை வசதி இல்லை எனக் கூறி மருத்துவமனை ஊழியர்கள் அவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளனர்
Also Read : “கனடாவில் வேலை உறுதி” என நம்ப வைத்து ரூ.3.75 லட்சம் மோசடி: நெல்லை தம்பதி மீது போலீஸ் விசாரணை
இதையடுத்து, எவ்வித ரத்தப் பரிசோதனையும் செய்யாமல் பூபதியை மீண்டும் காவல் நிலையத்திற்கே போலீஸார் அழைத்து வந்தனர். இத்தகவலை அறிந்த உறவினர்கள், முறையான பரிசோதனை செய்யாமல் காவலரைக் காப்பற்ற போலீஸார் முயல்வதாகக் குற்றம் சாட்டினர். “நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்கிறோம், எங்களோடு காவலரை அனுப்புங்கள்” என்று கூறி, காவல் நிலையத்திற்குள் திரண்ட பெண்கள் திடீரென பூபதியின் சட்டையைப் பிடித்து வெளியே இழுக்க முயன்றனர். இதில் சிலருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு வெளியே வந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் வாசலை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, விபத்தை ஏற்படுத்திய காவலர் மீது ஏன் இன்னும் முறையான ரத்தப் பரிசோதனை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, சட்டப்படி உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு செய்த தலைமை காவலர் பூபதி மீது விபத்து மற்றும் மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உடனடியாகக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் உறுதியளித்தார்.
உயரதிகாரியின் இந்த உறுதியைத் தொடர்ந்து, காவல் நிலைய முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
–– செய்தியாளர் , மேட்டூர்:












