பிற நாடுகளின் குப்பைத் தொட்டியாக இந்தியா மாற அனுமதிக்க முடியாது: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி

மதுரை , ஜூன் 20 : பிற நாடுகளின் கழிவுகளைக் கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கழிவுக் காகிதங்கள் என்ற பெயரில் நகராட்சி திடக்கழிவுகள் இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுவதைத் தடுத்து அவற்றை வந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

image 296

சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீபதி பேப்பர் அண்ட் போர்ட்ஸ் மற்றும் ராஜராஜேஸ்வரி கிராப்ட்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. அந்த மனுக்களில் தாங்கள் கனடா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து கழிவுக் காகிதங்களை இறக்குமதி செய்ததாகக் குறிப்பிட்டிருந்தன. ஆனால் சுங்கத்துறை மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய கூட்டு ஆய்வில் அந்தச் சரக்குகளில் காகிதங்கள் மட்டுமன்றி பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், உடைந்த கண்ணாடித் துண்டுகள் மற்றும் அழுகிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நகராட்சி திடக்கழிவுகள் பெருமளவில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

விபத்தில்லா குமரி மாவட்டம்: புதிய ‘சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள்’ திட்டத்தைத் தொடங்கினார் எஸ்பி ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து சர்வதேச விதிமுறைகளை மீறியதாகக் கூறி அந்தச் சரக்குகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதமும் விதித்தனர். மேலும் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட இந்த முழுக் கழிவுகளையும் அவை எந்த நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டனவோ அந்த நாடுகளுக்கே உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் சுங்கத்துறை உத்தரவிட்டது.

சுங்கத்துறையின் இந்த உத்தரவை எதிர்த்தும், தங்களுக்குச் சாதகமான சில சலுகைகளைக் கோரியும் அந்த நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடின. தங்களால் இறக்குமதி செய்யப்பட்ட அந்தச் சரக்குகளைத் துபாய்க்கு மீள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அல்லது அந்தச் சரக்குகளில் உள்ள கழிவுகளைப் பிரித்தெடுத்து அழிக்கும் மற்றும் மறுசுழற்சி செய்யும் பணிகளை இந்தியாவிலேயே மேற்கொள்ளத் தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த நிறுவனங்கள் தங்களது மனுவில் கோரியிருந்தன.

இந்த மனுக்கள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விரிவான விசாரணைக்கு வந்தன. அப்போது நிறுவனங்களின் கோரிக்கைகளை முற்றிலும் நிராகரித்த நீதிபதி இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். ஒரு சட்டவிரோதச் செயலை மற்றொரு சட்டவிரோதச் செயலின் மூலம் ஒருபோதும் சரி செய்ய முடியாது என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, மீள் ஏற்றுமதி என்பது சரக்குகள் எந்த நாட்டில் இருந்து புறப்பட்டு வந்தனவோ, அந்த நாட்டிற்கே மீண்டும் திருப்பி அனுப்புவதை மட்டுமே குறிக்கும் என்றார். அதை விடுத்து துபாய் போன்ற மூன்றாவது நாட்டிற்கு அந்தச் சரக்குகளை அனுப்புவது இந்தியச் சட்டங்களுக்கும், அபாயகரமான கழிவுகளைக் கையாள்வது தொடர்பான ‘பேசல்’ (Basel Convention) எனப்படும் சர்வதேச உடன்படிக்கையின் நோக்கங்களுக்கும் முற்றிலும் முரணானது என்று தனது உத்தரவில் நீதிபதி திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

மேலும் வளர்ந்த நாடுகள் தங்களது சொந்த நாட்டு நிலப்பரப்பைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, தங்களின் அசுத்தமான கழிவுகளை இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் கொண்டு வந்து கொட்டும் இந்த அபாயகரமான நடைமுறை உலக அளவில் ‘கழிவு காலணித்துவம்’ என்று அழைக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கவலை தெரிவித்தார். இத்தகைய பேராபத்தை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்றும் பிற நாடுகளின் குப்பைகளைத் தேக்கி வைக்கும் இடமாக இந்தியா மாறுவதை வேடிக்கை பார்க்க முடியாது என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.

அதிகாரிகளின் சோதனையில் நகராட்சி திடக்கழிவுகள் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவற்றை இந்தியாவில் அழிக்கவோ அல்லது மாற்று நாடுகளுக்குக் கடத்தவோ எந்தவித அனுமதியும் வழங்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுற்றுச்சூழல் விதிகளையும் சர்வதேச ஒப்பந்தங்களையும் மதிக்காமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களில் எவ்வித முகாந்திரமும் இல்லை எனக் கூறி தனியார் நிறுவனங்களின் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து மதுரை உயர் நீதிமன்ற அமர்வு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *