அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தியது ஈரான்: லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்; உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு

டெஹ்ரான், ஜூன் 1: லெபனான் தலைநகர் பெய்ரூட் (Beirut) மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவுடன் நடத்தி வந்த மிக முக்கியமான தூதரகப் பேச்சுவார்த்தைகளை ஈரான் அதிகாரப்பூர்வமாக நிறுத்திவைத்துள்ளது.
இஸ்ரேலின் இந்த ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் (ceasefire) அனைத்து முனைகளுக்கும் பொருந்தும் என்றும் ஏதேனும் ஒரு பகுதியில் விதிமீறல் நடந்தால் அது ஒட்டுமொத்த ஒப்பந்தத்தையும் மீறிய செயலாகவே கருதப்படும் என்றும் ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பெய்ரூட் மீது புதிய தாக்குதல்: இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை இதற்கிடையே, லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியான மற்றும் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் வலுவான கோட்டையாகக் கருதப்படும் தஹியா (Daha) பகுதியிலிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) ஆகியோர் இணைந்து பாதுகாப்புப் படையினருக்கு (IDF) நேரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.
“ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய நகரங்கள் மற்றும் குடிமக்கள் மீது தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும்போது பெய்ரூட்டில் உள்ள அவர்களின் தஹியா தலைமையகம் மட்டும் பாதுகாப்பாக இருக்க முடியாது.அங்குள்ள பயங்கரவாத இலக்குகளைத் தாக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது”என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
முறியடிக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்: முன்னதாக அமெரிக்காவின் டிரம்ப் (Trump) நிர்வாகம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பெய்ரூட் நகரின் மீதான நேரடித் தாக்குதல்களை இஸ்ரேல் தவிர்த்து வந்தது.தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கு (Bekaa Valley) ஆகிய பகுதிகளில் மட்டுமே இஸ்ரேல் தனது தாக்குதல்களைக் கட்டுப்படுத்தியிருந்தது.ஆனால் தற்போது பெய்ரூட்டை இலக்கு வைப்பதன் மூலம் இந்த மோதல் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது.மறுபுறம் குவைத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை (ballistic missiles) ஏவியதாகவும் அவை அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளால் நடுவானில் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்தத் தாக்குதலைத் தொடர்ந்தே அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஈரான் ரத்து செய்துள்ளது.
தூதரக முயற்சிகளுக்குப் பின்னடைவு: 12 லட்சம் மக்கள் இடம்பெயர்வு வாஷிங்டனில் இஸ்ரேல் மற்றும் லெபனான் தூதர்களைத் திரட்டி, நான்காம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்த சூழலில் இப்போதைய சூழல் அதற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.லெபனானில் நிலவி வரும் தொடர் போர் காரணமாக இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து லெபனான் அதிபர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் “இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை ஒன்றே வழி.பேச்சுவார்த்தை என்பது தோல்வியோ அல்லது சரணடைவதோ அல்ல.இதற்குச் சில காலம் பிடிக்கும் என்றாலும் லெபனான் அரசு இதற்கு முழுமையாகக் கட்டுப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் ஹிஸ்புல்லா நடத்தும் ஏவுகணைத் தாக்குதல்களும் இஸ்ரேலின் தொடர் ஊடுருவல்களும் அமைதிப் பேச்சுவார்த்தையை மேலும் கடினமாக்குவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Hormuz ஜலசந்தியை முடக்க ஈரான் திட்டம்? ஈரானின் இந்த அதிரடி முடிவு குறித்து சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் CNN அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பெத் ஜென்னர் கூறுகையில்,
“அமெரிக்காவுடனான 60 நாட்கள் தற்காலிக ஒப்பந்தம் மற்றும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய அம்சங்கள் விடுபட்டுள்ளன.அக்டோபர் 27-க்குள் இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் நெதன்யாகு இந்த ஒப்பந்தத்தை விரும்பவில்லை.ஈரான் தற்போது தனது முழு பலத்தையும் பயன்படுத்தி அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்கப் பார்க்கிறது.”
மேலும் உலக வர்த்தகத்தின் முக்கியப் பகுதியான ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) முழுமையாக முற்றுகையிடப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது கடந்த மூன்று வாரங்களில் வெறும் 70 கப்பல்களை மட்டுமே அமெரிக்கா இதன் வழியே பாதுகாப்பாகக் கடத்தியுள்ளது. போருக்கு முன்பு இங்கு நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் சென்று வந்தன.அத்துடன் ஹூதி (Houthis) கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) ஜலசந்தியையும் முடக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இது நடந்தால் சூயஸ் கால்வாய் வழியிலான உலக வர்த்தகம் முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு :-மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் (Crude Oil) விலை ஒரே நாளில் கணிசமாக உயர்ந்துள்ளது.சர்வதேச அளவீடான பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 97 டாலராக அதிகரித்துள்ளது. அதேபோல் அமெரிக்காவின் டபிள்யூடிஐ (WTI) கச்சா எண்ணெய் விலை 7.5 சதவீதம் உயர்ந்து 93 டாலராக வர்த்தகமாகி வருகிறது.இது குறித்து எரிசக்தி பொருளாதார நிபுணர் இமான் நாசேரி (Iman Naseri) கூறுகையில் “கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட முற்றுகைக்குப் பிறகு சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் குறைவாகவே இருந்தது.ஆனால் அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கையில் விலை கட்டுக்குள் இருந்தது. தற்போது பேச்சுவார்த்தை முறிந்திருப்பது அந்த நம்பிக்கையை உடைத்துள்ளது.அமெரிக்க அரசு உடனடியாக இதில் தலையிடாவிட்டால் அடுத்த சில மணிநேரங்களில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டும்” என்று எச்சரித்துள்ளார்.








