உத்தரப் பிரதேம் , ஜூன் 29: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த கிரிதர் பிஸ்ட் என்ற நபர் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட நிலையில் மகனைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்தச் சூழலில் அப்பகுதியில் உள்ள மசூரி கால்வாயில் கிரிதர் பிஸ்ட்டின் உடலமைப்பை ஒத்த ஒரு ஆணின் சடலத்தைப் போலீசார் மீட்டனர். சடலத்தின் முகம் மற்றும் உடல் சிதைந்த நிலையில் இருந்ததால் அது தங்கள் மகனின் உடல் தான் என்று பெற்றோர் அடையாளம் காட்டினர்.

இதனைத் தொடர்ந்து உடற்கூறாய்வு முடிந்து ஒப்படைக்கப்பட்ட சடலத்திற்குப் பெற்றோர் தங்களது குடும்ப முறைப்படி இறுதிச்சடங்குகளைச் செய்து உடலைத் தகனம் செய்தனர். மேலும் தங்களுக்கு முன்பகை இருந்த நபர்கள் தான் தன் மகனைக் கொலை செய்திருக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் அவர்கள் புதிய புகாரை அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் ஏழு பேர் கொண்ட குழுவினர் மீது சந்தேகம் கொண்டு போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
மகன் இறந்துவிட்டதாகக் கருதி அவரது மறைவுக்கான 13 ஆம் நாள் காரியச் சடங்குகளை முடித்துவிட்டு குடும்பத்தினர் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது தங்களது வீட்டின் படுக்கையறையில் கிரிதர் பிஸ்ட் உயிரோடு அமர்ந்திருப்பதைக் கண்டு குடும்பத்தினரும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
மும்பையில் 30,000 உயிர்களைப் பறிக்க சதி? மொஹரம் ஊர்வலத்தில் பரபரப்பு பின்னணியில் ஈரான் சதியா ?
இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது சிறையிலிருந்து விடுதலையானதும் தனக்கு மன அமைதி தேவைப்பட்டதால், யாரிடமும் கூறாமல் பஞ்சாபில் உள்ள ஒரு தியான மையத்திற்குச் சென்றுவிட்டதாகத் தெரிவித்தார். அங்கு 15 நாட்கள் தங்கியிருந்துவிட்டு தற்போதுதான் வீட்டிற்குத் திரும்பியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இறந்துவிட்டதாக நினைத்து தகனம் செய்யப்பட்ட நபர் உயிரோடு திரும்பிய நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கிரிதர் பிஸ்ட் என நினைத்து தகனம் செய்யப்பட்ட அந்த அடையாளம் தெரியாத சடலம் யாருடையது என்பது குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





