Kerala , May 27 : கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் இல்லம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து, கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், அமலாக்கத்துறையின் செயல்பாடுகளைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன: சிபிஐ(எம்)
ஆர்ப்பாட்டத்தின் இடையே செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்டச் செயலாளர் பத்மநாபன், கேரளாவில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் பின்னணியில் அரசியல் பழிவாங்கும் நோக்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
also read : 100 நாள் வேலை ஊதியம் தாமதமின்றி வழங்க வேண்டும்: அமைச்சர் திரு. என். ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவு
இது குறித்து அவர் பேசுகையில், “கேரளாவில் செயல்பட்டு வரும் சிஎம்ஆர்எஸ் (CMRS) நிறுவனத்திற்கும், பினராயி விஜயனின் மகள் பங்குதாரராக உள்ள எக்ஸாலாஜிக்கல் (Exalogic) நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2020-21 காலகட்டத்தில் வணிக ரீதியான ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட தொகை அதிகாரப்பூர்வமாக, வங்கிப் பரிவர்த்தனை மூலம் எக்ஸாலாஜிக்கல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த மறைமுகப் பரிவர்த்தனையும் இல்லை. ஆனால், முற்றிலும் சட்டப்பூர்வமாக நடைபெற்ற இந்த வணிக ஒப்பந்தத்தையே தற்போது ஒரு பெரும் முறைகேடு போல சித்தரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன,” என்றார்.
மேலும், “சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, மத்திய அரசின் பல்வேறு புலனாய்வு அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலின் பேரில் இது தொடர்பாகப் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டன. அப்போதே இந்த புகார்களில் எந்தவித உண்மையும் இல்லை என்பதும், எவ்வித முறைகேடுகளும் நிரூபிக்கப்படவில்லை என்பதும் உறுதியானது. இது முற்றிலும் ஒரு பொய்யான புகார் என்பது தெரிந்த பின்னரும், அரசியல் ஆதாயங்களுக்காக இந்த விவகாரம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய பத்மநாபன், “கேரளாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைக்கு இணங்கி, மத்திய பாஜாக அரசு பினராயி விஜயன் வீடு, அவரது மகளின் இல்லம் உட்பட கேரளா முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனையை அரங்கேற்றியுள்ளது. நாள் முழுவதும் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சட்டவிரோதமாக எந்தவொரு ஆவணமோ அல்லது பொருளோ கைப்பற்றப்படவில்லை.
தேர்தல் மற்றும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாததால், ஒன்றிய பாஜக அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி இந்த பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஜனநாயக ரீதியில் இயங்கும் ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மீது ஏவப்பட்டுள்ள இந்த அதிகார அத்துமீறலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது,” என்று தெரிவித்தார்.
இதே விவகாரத்தை முன்னிறுத்தி புதுடெல்லியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மத்திய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மத்திய அரசின் இத்தகைய அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், மக்கள் மன்றத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் கோவை மாவட்ட சிபிஐ(எம்) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








