100 நாள் வேலை ஊதியம் தாமதமின்றி வழங்க வேண்டும்: அமைச்சர் திரு. என். ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை,May 27 : “இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குக் கிராமப்புறங்களின் பொருளாதார மேம்பாடே மிக முக்கியக் காரணியாக விளங்குகிறது. எனவே, ஊரகப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும், அடிப்படை வசதிகளைத் தொய்வின்றி வழங்குவதையும் அரசு அலுவலர்கள் தங்களின் முதன்மைக் கடமையாகக் கருதிச் செயலாற்ற வேண்டும்” என்று ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

image 544

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முக்கியத் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் இன்று (27.05.2026) சென்னையில் நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர் திரு. என். ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கிராமப்புற உட்கட்டமைப்பு, குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மிக விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர், திட்டங்களைச் செயல்படுத்துவதில் எவ்விதமான சுணக்கமும் இருக்கக் கூடாது என்றும், ஒவ்வொரு திட்டமும் உரிய காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

also read : சர்வதேச போட்டிகளில் பங்கேற்க செஸ் வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்!

தரக் கட்டுப்பாட்டில் சமரசம் இல்லை இக்கூட்டத்தின் போது உள்கட்டமைப்புப் பணிகளின் தரம் குறித்துப் பேசிய அமைச்சர், “கிராமப்புறங்களில் அமைக்கப்படும் சாலைகள் மற்றும் பாலங்களின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. பணிகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, அந்தந்த உள்ளூர் பகுதிகளில் உள்ள படித்த பெண்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதோடு, பொதுமக்களின் பங்களிப்பும் உறுதி செய்யப்படும். மேலும், மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணிகளையும் முறையாக வீடியோ பதிவு செய்து, அதனை பென்டிரைவில் (Pen drive) சமர்ப்பித்த பின்னரே இறுதி பில்கள் (Bills) தீர்வு செய்யப்பட வேண்டும்” என்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.

ஊதிய நிலுவையின்றி 100 நாள் வேலைத் திட்டம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் வேலை செய்ததற்கான ஊதியம் எவ்விதத் தாமதமும் இன்றி, உரிய நேரத்தில் வழங்கப்படுவதை மாவட்ட அதிகாரிகள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகள் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள அனைத்துக் குடியிருப்புகளுக்கும் விடுபடாமல் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தூய்மையான குடிநீர் தங்குதடையின்றிக் கிடைப்பதை அதிகாரிகள் கள ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

அதேபோல், ‘தூய்மை பாரத இயக்கம்’ திட்டத்தை அர்ப்பணிப்புடன் செயல்படுத்தி, கிராமப்புறத் தெருக்களைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். சேகரமாகும் குப்பைகளை 100 சதவீதம் தரம் பிரித்து அகற்றுவதோடு, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். கிராமங்களில் உள்ள தெருவிளக்குகள் அனைத்தும் தடையின்றி எரிவதையும், பழுதான விளக்குகளை உடனுக்குடன் சீரமைப்பதையும் உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வாய்ப்பு ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிறுசிறு பணிகளைச் செய்வதற்கான வாய்ப்புகளை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், அந்தப் பணிகளை அவர்கள் தொய்வின்றிச் செய்யத் தேவையான முறையான பயிற்சிகளையும் துறை ரீதியாக வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இலவச வண்டல் மண்: புகார்களுக்கு இடமளிக்கக் கூடாது விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு, ஊரகப் பகுதிகளில் உள்ள சிறுபாசன ஏரிகளை நல்ல முறையில் தூர்வாரிப் புதுப்பிக்க வேண்டும். “அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஏரிகளில் உள்ள வண்டல் மண் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகச் சிறப்பான அறிவிப்பைச் செய்துள்ளார்கள். இந்த அறிவிப்பின் பயன் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் எவ்விதச் சுணக்கமும் இன்றிச் சென்றடைய வேண்டும். இத்திட்டச் செயல்பாட்டில் முறைகேடுகளுக்கோ அல்லது புகார்களுக்கோ எவ்வித இடமும் அளித்துவிடக் கூடாது” என்று அமைச்சர் அதிகாரிகளை எச்சரித்தார்.

புதிய சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒருங்கிணைப்பு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தொகுதிக்குத் தேவையான மிக அவசியமான மற்றும் சிறப்பான பணிகளைத் தேர்வு செய்து செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இத்திட்டத்தின் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைத் தெளிவாக விளக்கி, அவர்களுடன் ஒருங்கிணைந்து மக்கள் நலப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

நிறைவாகப் பேசிய அமைச்சர், “நமது துறையை மாநிலத்திலேயே மிகச் சிறந்த துறையாக மாற்றுவதற்கு அனைத்து நிலை அலுவலர்களும், பொறியாளர்களும் ஒருங்கிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

உயர் அதிகாரிகள் பங்கேற்பு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசுச் செயலாளர் திரு. பிரசாந்த் எம். வடனேரே, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் திரு. பா. பொன்னையா, இ.ஆ.ப., மற்றும் இயக்ககத்தின் அனைத்துக் கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த கூடுதல் ஆட்சியர்கள் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர்கள், முதன்மைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களின் மாவட்ட திட்ட நிலவரங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 983

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »