பூமியின் இறுதி அத்தியாயத்தை எழுதப்போகும் ‘பிளாக் பாக்ஸ்’: மனித குலத்தின் சாட்சியமா ,தோல்வியின் சின்னமா?

சிறப்பு செய்தி , ஜூன் 22: விமானம் ஒன்று விபத்துக்குள்ளானால் அது எதனால் நிகழ்ந்தது என்பதை அறிந்துகொள்ள அதன் ‘பிளாக் பாக்ஸ்’ எனப்படும் கருப்புப் பெட்டியைத் தேடுவது வழக்கம். தற்போது அதே போன்றதொரு அதிநவீன அழியாத பேழை ஒன்றை ஒட்டுமொத்த பூமிக்காகவும் விஞ்ஞானிகளும் கலைஞர்களும் இணைந்து உருவாக்கி வருகின்றனர். காலநிலை மாற்றத்தின் (Climate Change) கோரப்பிடியில் சிக்கி, ஒருவேளை மனித இனம் எதிர்காலத்தில் முற்றிலும் அழிய நேரிட்டால், நாம் செய்த தவறுகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் நோக்கில் ஆஸ்திரேலியாவில் இந்த ‘பூமியின் பிளாக் பாக்ஸ்’ (Earth’s Black Box) கட்டமைக்கப்பட்டு வருகிறது.

Earth's Final Chapter? The Global Black Box That Could Record Humanity's Collapse Forever

மனித குலம் தனது தவறுகளால் உலகை அழிவை நோக்கி இட்டுச் செல்கிறதா என்ற அச்சம் உலகளாவிய ரீதியில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில் இந்தத் திடீர் நடவடிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விமானப் பெட்டிக்கும் பூமியின் பேழைக்கும் உள்ள ஒற்றுமை

பொதுவாக, ஒவ்வொரு வணிகரீதியிலான விமானத்திலும் ‘பிளாக் பாக்ஸ்’ எனப்படும் விமானத் தரவுப் பதிவுக்கருவி (Flight Recorder) பொருத்தப்பட்டிருப்பது கட்டாயமாகும். விமானிகள் தங்களுக்குள் பேசிக்கொண்ட உரையாடல்கள், விமானம் பறந்த உயரம், காற்றின் வேகம் மற்றும் என்ஜினின் செயல்பாடுகள் போன்ற அத்தனை விவரங்களையும் இந்தச் சாதனம் நொடிக்கு நொடி துல்லியமாகப் பதிவு செய்துகொண்டே இருக்கும். எதிர்பாராத விதமாக ஏதேனும் விபத்து நேர்ந்தால் கடுமையான தீவிபத்து அல்லது ஆழ்கடலின் அதீத அழுத்தத்தைத் தாங்கி சிதையாமல் தப்பும் திறன் கொண்டது இது. இதற்காக தடிமனான இரும்பு அல்லது டைட்டானியம் உலோகக் கலவையால் இது செய்யப்படுகிறது.

also : TN Assembly : தொழிற்சாலை விபத்து: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அமைச்சர் பர்வேஷ்  விளக்கம்

இதன் பெயர் ‘கருப்புப் பெட்டி’ என்றிருந்தாலும் காடுகளிலோ அல்லது கடலிலோ விபத்து நேரிடும்போது மீட்புக் குழுவினரின் கண்களில் எளிதில் பட வேண்டும் என்பதற்காக இது பிரகாசமான ஆரஞ்சு (Orange) நிறத்திலேயே பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும்.

பெயருக்குப் பின்னால் உள்ள சுவாரசியம்: இரண்டாம் உலகப்போர் சமயத்தில், விமானத் தரவுகளைப் பதிவு செய்யும் கருவிகளின் உட்பகுதியில் ‘கேமரா ஃபிலிம்கள்’ பயன்படுத்தப்பட்டன. அந்த ஃபிலிம்களில் வெளிச்சம் பட்டுப் பதிவுகள் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக பெட்டியின் உள்பகுதியில் கருப்பு வண்ணம் பூசப்பட்டது. இதனால் இதற்கு ‘பிளாக் பாக்ஸ்’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. மேலும் ராணுவ மற்றும் அறிவியல் துறைகளில் மிகவும் ரகசியமாக வைக்கப்படும் கருவிகளைப் பொதுப்படையாக ‘பிளாக் பாக்ஸ்’ என்று அழைக்கும் வழக்கமும் இதற்கு மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது. இந்தச் சிந்தனையின் நவீன வடிவமே இப்போது பூமிக்காக உருவாக்கப்படும் பேழை.

டாஸ்மானியாவில் அமையும் பிரம்மாண்டMonolith

காலநிலை மாற்றத்தால் பூமி பேரழிவைச் சந்தித்தால் மனித இனம் ஏன் அழிந்தது, நாம் எங்கு தவறிழைத்தோம் என்பதை எதிர்காலச் சந்ததியோ அல்லது மாற்று உயிரினங்களோ அறிந்துகொள்ளும் வரலாற்றுச் சாட்சியாக இது அமையவுள்ளது. இந்த ‘பிளாக் பாக்ஸ்’ ஆஸ்திரேலியாவின் தீவு மாநிலமான டாஸ்மானியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ‘குயீன்ஸ்டவுன்’ (Queenstown) என்ற தொலைதூரப் பகுதியில் நிறுவப்பட்டு வருகிறது.

இந்தக் குறிப்பிட்ட இடத்தை விஞ்ஞானிகள் தேர்வு செய்ததற்கு மிக முக்கியமான புவியியல் மற்றும் அரசியல் காரணங்கள் உள்ளன. குயீன்ஸ்டவுன் பகுதி நிலநடுக்க அபாயங்கள் அற்ற கடுமையான இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படாத நிலப்பரப்பைக் கொண்டது. அதே சமயம் அரசியல் ரீதியாக மிகவும் அமைதியான, உலகப் போர்கள் அல்லது பிராந்திய மோதல்களின் தாக்கம் அண்டாத தொலைதூரப் பகுதியாகவும் இது பார்க்கப்படுகிறது. பழங்காலப் பனிப்பாறைகளால் செதுக்கப்பட்ட இந்த கரடுமுரடான பாறை நிலப்பரப்பு, நகர விரிவாக்கத்தாலும் அழிய வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் இப்பகுதியை ஒரு சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக (Tourist Spot) மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் பெட்டி அளவில் மிகவும் பிரம்மாண்டமானது. இது சுமார் 16 மீட்டர் (52 அடி) நீளமும், 4 மீட்டர் (13 அடி) உயரமும் கொண்டது. தடிமனான இரும்பு மற்றும் கான்கிரீட் சுவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பெட்டியின் கூரையில் 36 சோலார் பேனல்கள் (Solar Panels) பொருத்தப்பட்டுள்ளன. இவை தடிமனான கண்ணாடியால் மூடிப் பாதுகாக்கப்படுகின்றன. இதன் மூலம் மின்சாரக் கட்டமைப்பு முற்றிலும் முடங்கினாலும், சூரிய ஒளியின் உதவியோடு பல நூறு ஆண்டுகள் இந்தச் சாதனம் தானியங்கி முறையில் இயங்கும்.

பெட்டியில் பதியும் ‘பூமியின் ஆரோக்கியம்’

பூமியின் வளிமண்டல மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை உள்ளடக்கிய ‘பூமியின் முக்கியக் குறியீடுகளை’ (Earth’s Vital Index) இந்தப் பெட்டி தொடர்ந்து சேகரிக்கும். உலகளாவிய வெப்பநிலை உயர்வு கடல் மட்ட மாறுபாடுகள், பெருங்கடல்களின் அமிலத்தன்மை மற்றும் காற்றில் கலக்கும் பசுமைக்குடில் வாயுக்களின் (Greenhouse Gases) அளவு ஆகியவை இதில் நொடிக்கு நொடி பதிவாகும்.

பசுமைக்குடில் வாயுக்களின் எதார்த்தம்: இயற்கையாகவே வளிமண்டலத்தில் இருக்கும் சில வாயுக்கள் பூமிக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். சூரியனிடமிருந்து வரும் வெப்பத்தை இவை ஓரளவிற்குப் பிடித்து வைப்பதால்தான் பூமி பனிக்கட்டியாக உறைந்துவிடாமல் மனிதர்கள் வாழ ஏதுவான கதகதப்போடு இருக்கிறது. ஆனால் மனிதர்களின் செயல்பாடுகளால் இந்த வாயுக்களின் அளவு இப்போது மிதமிஞ்சிவிட்டது. ஒரு போர்வையின் மேல் மேலும் பல போர்வைகளைப் போர்த்தினால் ஏற்படும் புழுக்கத்தைப் போல பூமியின் வெப்பம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இதையே நாம் ‘புவி வெப்பமயமாதல்’ (Global Warming) என்கிறோம்.

இவற்றுடன் காடழிப்பு, பல்லுயிர் பெருக்க பாதிப்பு (Biodiversity Loss) ஆகியவையும் இதில் பதிவாகும். பூமியில் மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள், விலங்குகள், பூச்சிகள் எனப் பல கோடிக்கணக்கான உயிரினங்கள் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட வலையமைப்பில் வாழ்கின்றன.

உதாரணமாக தேனீக்கள் வெறும் தேன் எடுப்பதோடு மட்டுமன்றி ஆண் பூவிலிருந்து பெண் பூவுக்கு மகரந்தத் தூளைக் கடத்தும் ‘மகரந்தச் சேர்க்கை’ (Pollination) என்னும் அத்தியாவசியப் பணியைச் செய்கின்றன. தாவரம் ஒரு இடத்திலிருந்து நகராமல் அடுத்த தலைமுறையை உருவாக்க இந்தத் தேனீக்கள், வண்டுகள், பறவைகளே இயற்கை காரணிகளாக உள்ளன. நாம் இன்று உண்ணும் தக்காளி, கத்தரி முதல் நெல், பருப்பு வரை மூன்றில் ஒரு பங்கு உணவுக்கு இத்தகைய பூச்சிகளின் மகரந்தச் சேர்க்கையே காரணமாகும். ஆனால் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் மற்றும் காடழிப்பால் தேனீக்கள் உள்ளிட்ட பூச்சியினங்கள் அழிந்தால், மனித குலத்திற்கான உணவுச் சங்கிலியே அறுந்துவிடும். சிங்கத்தில் இருந்து எறும்பு வரை காக்கும் இந்த இயற்கைச் சமநிலை (Ecological Balance) தற்போது மனிதனின் பேராசையால் உடைந்து வருகிறது. மற்ற உயிரினங்களை அழித்துவிட்டு மனிதன் மட்டும் தனியாக வாழ முடியாது; அவை அழிந்தால் இறுதி அழிவு மனிதனுக்கே என்பதை இத்தரவுகள் சுட்டிக்காட்டும்.

மக்களின் கருத்துகளும் கார்பன் வெளியேற்றமும்

மாசுபாட்டின் அளவு, மனிதர்களின் அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் கார்பன் வெளியேற்றம் (Carbon Emissions) ஆகியவற்றை இந்தப் பெட்டி உன்னிப்பாகக் கண்காணிக்கும். வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்றவற்றை எரிப்பதால் டன் கணக்கில் காற்றில் கலக்கும் கார்பன் டை ஆக்சைடு, மரங்கள் அழிக்கப்படுவதால் வளிமண்டலத்திலேயே தங்கிவிடுகிறது. இதுவே புவி வெப்பமயமாதலைத் தீவிரப்படுத்துகிறது.

இவற்றுடன் நின்றுவிடாமல் உலக நாடுகளின் மின்சாரப் பயன்பாடு, அரசாங்கங்களின் சுற்றுச்சூழல் கொள்கைகள், சர்வதேச காலநிலை ஒப்பந்தங்கள், சுற்றுச்சூழல் சார்ந்த மக்களின் போராட்டங்கள், சமூக ஊடக விவாதங்கள் மற்றும் தற்போதைய ஊடகச் செய்திகள் (இப்போது நாம் பேசும் செய்திகள் உட்பட) அனைத்தும் இந்த இணைய வழியிலான சேமிப்பகத்தில் சேகரிக்கப்படும். காலநிலை பேரழிவை நோக்கி மனித இனம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அதற்கு உலகத் தலைவர்கள் காட்டும் அலட்சியத்தையும் இந்தப் பெட்டி ஆவணப்படுத்தும்.

ஐந்து ஆண்டுகால மௌனமும் ‘அப்போகலிப்ஸ்’ விளக்கமும்

ஆஸ்திரேலியாவின் ‘ரவுசர் லேப்’ (Rouser Lab) என்ற சுற்றுச்சூழல் தகவல் தொடர்பு அமைப்பு பல்வேறு கூட்டமைப்புகளுடன் இணைந்து 2021-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற ஐநா காலநிலை மாநாட்டில் (COP26) இத்திட்டத்தை முதன்முதலில் அறிவித்தது. ஆனால் அதன்பின் ஐந்து ஆண்டுகளாக எந்தவொரு வெளிப்புறக் கட்டுமானப் பணிகளோ, சமூக ஊடகப் பதிவுகளோ இன்றி ஒட்டுமொத்தத் திட்டமும் கைவிடப்பட்டதாகக் கருதப்பட்டது.

இது குறித்து இத்திட்டத்தின் கலை இயக்குநர் ஜொனாதன் நீபோன் (Jonathan Kneebone) விளக்குகையில், “கடந்த ஐந்து வருடங்களாக எங்கள் குழுவினர் இதன் வடிவமைப்பு தரவுச் சேமிப்புத் திறன், இணையப் தளம் மற்றும் இதனைப் பல தசாப்தங்களுக்குப் பராமரிப்பதற்கான நிதி மாதிரிகளை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தோம்” என்று தெரிவித்துள்ளார். தற்போது பாகங்கள் அசெம்பிள் செய்யப்பட்டு வரும் டிசம்பர் மாதத்திற்குள் (2026) இந்த முழுக் கட்டமைப்பும் நிறுவப்படவுள்ளது.

இது ஒரு ‘அப்போகலிப்ஸ் பாக்ஸ்’ (Apocalypse Box) அல்லது பேரழிவுப் பெட்டி என்று அழைக்கப்படுகிறது. உலகம் முற்றிலும் அழியும் பட்சத்தில், விஞ்ஞானிகள் அன்றே எச்சரித்தும் அரசாங்கங்கள் எடுத்த தவறான முடிவுகளால் தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது என்பதை நிரூபிக்கும் வரலாற்றுச் சாட்சியாக இது நிலைத்திருக்கும்.

டூம்ஸ்டே கிளாக்கும் 85 வினாடிகளும்: ஜோசியமல்ல, எச்சரிக்கை!

விஞ்ஞானிகள் உலகம் அழியப்போவதாகக் கணித்துக் கூறும் ஜோசியக் கருவி அல்ல இது. மாறாக மனிதன் இந்த ஆபத்தைத் தடுக்கத் தவறினால் என்ன நேரிடும் என்பதைப் பதிவு செய்யும் ஓர் எச்சரிக்கைச் சாதனம். இதனை விபத்து ஏற்படுவதற்கு முன்னரே முன்னெச்சரிக்கையாக எடுக்கப்படும் ‘காப்பீடு’ (Insurance) போன்ற ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகக் கருதலாம்.

இதன் தீவிரத்தை உணர்த்தும் மற்றொரு குறியீடுதான் ‘டூம்ஸ்டே கிளாக்’ (Doomsday Clock – பேரழிவு கடிகாரம்). ‘புல்லட்டின் ஆஃப் தி அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ்’ என்ற அமைப்பால் பராமரிக்கப்படும் இந்த அடையாளக் கடிகாரத்தில் நள்ளிரவு 12 மணி என்பது உலகப் பேரழிவைக் குறிக்கும். தற்போதைய நிலவரப்படி இந்தக் கடிகாரம் நள்ளிரவுக்கு வெறும் 85 வினாடிகளுக்கு முன்னதாக நிறுத்தப்பட்டுள்ளது. இக்கடிகாரம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து மனித இனம் பேரழிவிற்கு இவ்வளவு நெருக்கமாக இருப்பது இதுவே முதல் முறையாகும். அணுஆயுத அச்சுறுத்தல்கள் தீவிரமடையும் காலநிலை மாற்றம் மற்றும் கட்டுப்பாடற்ற புதிய தொழில்நுட்பங்கள் இதற்கு முதன்மைக் காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.

மனித குலத்தின் வெற்றிச் சின்னமா?

ஒருவேளை உலக நாடுகள் விழித்துக்கொண்டு கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து, புவி வெப்பநிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்தால், இந்த ‘பிளாக் பாக்ஸ்’ நமது தோல்வியைப் பதிவு செய்யும் பெட்டியாக இருக்காது. மாறாக மனித இனம் எவ்வாறு ஒன்றிணைந்து இயற்கையைக் காத்து பேரழிவிலிருந்து தப்பியது என்பதைக் காட்டும் ‘வெற்றிச் சின்னமாய்’ மாறும்.

கடந்த காலங்களில் மனிதர்கள் தங்களின் அடையாளங்களாகக் கோட்டைகளையும், கோயில்களையும், கல்வெட்டுகளையும் விட்டுச் சென்றனர். ஆனால், நவீன நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் நாம், நமது அடுத்த வாரிசுகளுக்கு ஒரு ‘எச்சரிக்கைப் பெட்டியை’ அடையாளமாக விட்டுச் செல்லத் துணிந்திருப்பது மனித குலத்தின் சிந்தனைப் போக்கிற்கு ஏற்பட்டுள்ள ஆகப்பெரும் சவாலாகும். அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் அழிவுக்குப் பயன்படுத்தாமல் இயற்கையோடு இயைந்த வாழ்வியலை மேற்கொண்டால் மட்டுமே மனித இனம் இந்தப் பூமியில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்பதை இந்த இரும்புப் பேழை உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *