புதுக்கோட்டை , ஜூன் 30: திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் கட்சியின் பொதுக்குழு முடிவின்படி தங்களது பதவிகளை ராஜினாமா செய்யாமல் தடுத்தது யார் என்றும், இதன் பின்னணியில் உள்ள பேரம் குறித்து திமுக தலைமை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ காரசாரமாக வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை பாலநகர் பகுதியில் இன்று பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் முகாமில் பங்கேற்ற துரை வைகோ, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். மதிமுக பொதுக்குழுவில் அவர் பங்கேற்காதது குறித்து எழுந்த பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவர், தமக்கு வேறு சில முக்கிய பணிகள் இருந்ததால் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
Also : தவெக கூட்டத்தில் விசிக பங்கேற்பு – 5 ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும் என திருமாவளவன் நம்பிக்கை
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவிலிருந்து உறுப்பினர்கள் விலகும்போது அதனை ‘குதிரை பேரம்’ என்று மிகக் கடுமையாகச் சாடியவர்கள், இன்று மதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவுக்கு எதிராகச் செயல்படும் நிலையை உருவாக்கியிருப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பினார். மதிமுக உறுப்பினர்கள் இருவர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய விடாமல் தடுத்ததன் பின்னணியில் என்ன விதமான குதிரை பேரம் அல்லது அரசியல் கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது என்பதை திமுகதான் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய அரசியல் மாற்றங்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி குறித்துப் பேசிய துரை வைகோ, கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக சுமார் 6,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்தும் அவர்களால் ஆட்சியைத் தக்கவைக்கவோ அல்லது நினைத்த வெற்றியைப் பெறவோ முடியவில்லை என்றார். ஆனால் எந்தவிதப் பணபலமும் இன்றி, எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் சூழலிலும் இல்லாத தவெக 35 சதவீத வாக்குவங்கியப் பெற்று புதிய ஆட்சி அமைத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றம் வர வேண்டும் என்பதற்காகவே பொதுமக்கள் இத்தகைய வாக்குகளை அளித்து தவெகவை வெற்றி பெறச் செய்துள்ளனர் என்றும் அவர் விவரித்தார்.
மேலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைவதற்கு முன்பாகவே திமுகவும் அதிமுகவும் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்ட அவர் அது என்ன வகையான பேரம் என்ற அதிர்ச்சியூட்டும் கேள்வியையும் முன்வைத்தார். தமிழகத்தை கடந்த 30 ஆண்டுகாலமாகப் பாழாக்கியது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என்று சாடிய அவர் வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் மதிமுக போட்டியிடுகிறதா என்பது தற்போதைய முக்கிய விவாதம் அல்ல என்றும் மாறாக தமிழக வெற்றிக் கழகம் எத்தனை தொகுதிகளில் போட்டியிட்டாலும் அத்தனை தொகுதிகளிலும் அதன் வெற்றி உறுதி என்றும் துரை வைகோ கணித்துள்ளார்.
இறுதியாக திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தமக்குப் கிடைத்த வெற்றி குறித்துப் பேசிய அவர் தமது வெற்றிக்கு திமுக மட்டுமே முழுமுதற் காரணம் அல்ல என்று திட்டவட்டமாகக் கூறினார். கூட்டணியில் இருந்த அனைத்துக் கட்சிகளின் வாக்குகளையும், மதிமுகவிற்கான தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் பாரம்பரிய வாக்கு வங்கியையும் இணைத்தே தாம் வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்ட அவர் அதே வேளையில் தமது வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாக விளங்கிய திமுகவிற்கு என்றென்றும் நன்றியோடு இருப்பேன் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் துரை வைகோ தெரிவித்தார்.





