டிமென்ஷியா: 20 ஆண்டுகள் முன்பே தொடங்கும் மூளை பாதிப்பு – புதிய ஆய்வு அதிரடி

மருத்துவ தொகுப்பு , ஏப்ரல் 17  : டிமென்ஷியா எனப்படும் நினைவிழப்பு நோய் மருத்துவர்களால் கண்டறியப்படும் தருணத்தில்தான் தொடங்குகிறது என்ற பொதுவான நம்பிக்கையை சமீபத்திய சர்வதேச மற்றும் உள்நாட்டு மருத்துவ ஆய்வுகள் முற்றிலும் முறியடித்துள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகம் (Texas A&M University) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு முடிவுகளும் மும்பையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களின் விளக்கங்களும் இந்த நோய் குறித்த ஒரு புதிய எச்சரிக்கையை உலகிற்கு உணர்த்தியிருக்கின்றன.

பொதுமக்கள் நினைப்பது போல டிமென்ஷியா என்பது திடீரென ஒரு நாளில் ஏற்படும் பாதிப்பு அல்ல என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், மூளையில் செல்கள் சேதமடைவதும் தேவையற்ற புரதங்கள் குவிந்து மூளையின் செயல்பாட்டை முடக்குவதும் நபர் ஒருவருக்கு நோய் கண்டறியப்படுவதற்கு 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பே மெதுவாகத் தொடங்கிவிடுவதாகக் குறிப்பிடுகின்றனர். மருத்துவமனையில் இந்த நோய் உறுதி செய்யப்படுவது அதன் இறுதி நிலைகளில் ஒன்று மட்டுமே தவிர அதுவே ஆரம்பப்புள்ளி அல்ல என்பதை டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Also read : 2 நாட்களில் கெட்ட கொலஸ்ட்ராலை 10% குறைக்கும் ஓட்ஸ்: புதிய ஆய்வுத் தகவல்

இந்த விவகாரத்தில் இருக்கும் ஆகப்பெரிய சவாலே இந்த நோயின் தொடக்கப் புள்ளியைப் பெரும்பாலானோர் சாதாரணமாகக் கடந்துவிடுவதுதான். ஆரம்பக்கட்டத்தில் ஏற்படும் சிறிய அளவிலான நினைவிழப்பு, கவனக்குறைவு அல்லது அன்றாடச் செயல்பாடுகளில் ஏற்படும் தடுமாற்றங்களை வயதான காலத்தில் ஏற்படும் இயல்பான மாற்றங்கள் என்று குடும்பத்தினரும் சம்பந்தப்பட்ட நபர்களும் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். இதன் காரணமாகவே நோயின் ஆரம்பக்கட்டத்திலேயே வழங்கப்பட வேண்டிய மிக முக்கியமான சிகிச்சைகளுக்கான வாய்ப்புகள் த கைநழுவிப் போகின்றன என்று மும்பையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒருவருக்கு டிமென்ஷியா முழுமையாகப் பாதிப்பதற்கு முன்பாகவே அவரது நடத்தையிலும் பேச்சிலும் சில நுணுக்கமான மாற்றங்கள் தோன்றும் என மருத்துவர்கள் பட்டியலிடுகின்றனர். அடிக்கடி விஷயங்களை மறந்துவிடுவது, தினசரி பழகிய வழக்கமான செயல்களைச் செய்வதில் திடீரென குழப்பம் அடைவது, எளிய முடிவுகளை எடுப்பதில் கூட சிரமத்தை எதிர்கொள்வது, பேசும்போது சரியான வார்த்தைகள் கிடைக்காமல் மொழி தொடர்பான சிக்கல்களில் தவிப்பது மற்றும் காரணமில்லாமல் ஏற்படும் மனநிலை மாற்றங்கள் ஆகியவை இதன் முக்கிய ஆரம்ப அறிகுறிகளாகும். இந்த மாற்றங்கள் மிக மெதுவாகவும் படிப்படியாகவும் நுகர்வோர் அறியாத வண்ணமும் நிகழ்வதால் இவற்றைத் தொடக்கத்திலேயே கண்டறிவது பெரும் சவாலாக மாறுகிறது.

இந்தச் சூழலில், இந்தியாவின் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் வயதானவர்களின் மக்கள் தொகை விகிதம் கணிசமாக அதிகரித்து வரும் வேளையில், இந்த ஆய்வு முடிவுகள் தமிழகத்திற்கு ஒரு மிக முக்கிய எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இயற்கையாகவே டிமென்ஷியா பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கையும் உயரும் என உள்ளூர் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுமட்டுமன்றி தற்கால நவீன வாழ்க்கை முறையில் காணப்படும் அதீத மன அழுத்தம், முறையற்ற தூக்கமின்மை மற்றும் சத்துக்கள் இல்லாத உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவை மூளையின் ஆரோக்கியத்தை மிக மோசமாகப் பாதிக்கும் முக்கியக் காரணிகளாக உருவெடுத்துள்ளன.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி உலகம் முழுவதும் டிமென்ஷியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. இது வரும் காலங்களில் உலகளாவிய மருத்துவக் கட்டமைப்புக்கே ஒரு பெரும் சுகாதார சவாலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முறையான வாழ்வியல் மாற்றங்கள் மூலம் இதன் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்பதே இதில் இருக்கும் ஒரே ஆறுதலான விஷயமாகும்.

ஆரம்பக்கட்டத்திலேயே விழிப்புணர்வுடன் இருந்து இந்த நோயைக் கண்டறிந்தால் அதன் தீவிரத்தை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் வழிகாட்டுகின்றனர். அதற்குப் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி, மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் மற்றும் வாசிப்பு போன்ற பயிற்சிகள், தனிமையில் இருக்காமல் சமூகத் தொடர்புகளைத் தொடர்ச்சியாகப் பேணுதல் மற்றும் மூளை செல்கள் புதுப்பிக்கப்படுவதற்குத் தேவையான போதிய தூக்கம் ஆகியவற்றைத் தங்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என மருத்துவ உலகம் வலியுறுத்துகிறது. டிமென்ஷியா என்பது வயோதிகத்தின் தவிர்க்க முடியாத சாபம் அல்ல; அது பல ஆண்டுகளாக மூளையில் வளரும் ஒரு நோய் என்பதைப் புரிந்து கொண்டு அதன் ஆரம்ப அறிகுறிகளைக் கவனிப்பதே எதிர்காலப் பேரழிவிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரே வழியாகும்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *