சிறப்பு செய்தி , ஜூன் 7: உலகப் பெரும் பணக்காரர்களின் வரிசையில் முதலிடத்தில் நீடித்து வரும் எலான் மஸ்க், நிதி உலக வரலாற்றில் இதுவரை எவரும் எட்டாத புதிய சாதனை ஒன்றைப் படைக்கவுள்ளார்.உலகின் முதல் ‘டிரிலியனர்’ (Trillionaire – நூறு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக சொத்து மதிப்புடையவர்) என்ற பெருமையை அவர் விரைவில் பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த அசாத்திய வளர்ச்சி மற்றும் அவரது சொத்து மதிப்பின் பின்னணியில் உள்ள கணக்கீடுகள் குறித்து நமது செய்தியாளரின் விரிவான விளக்கம்.

மஸ்க் அவர்களின் இந்த அசுர வளர்ச்சிக்கு, உலக அளவில் வாகன உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்திய அவரது மின்சார வாகன நிறுவனமான ‘டெஸ்லா’ (Tesla) மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ (SpaceX) ஆகிய இரண்டுமே முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.
Tesla மற்றும் Space X பங்குகளின் அசுர வளர்ச்சி
தற்போதைய நிலவரப்படி, டெஸ்லா நிறுவனத்தில் எலான் மஸ்க்கிற்கு உள்ள பங்குகளின் சந்தை மதிப்பு மட்டும் சுமார் 25.9 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் மின்சார வாகனத் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் டெஸ்லாவின் பங்குகள் தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளன.
இதனைத் தொடர்ந்து, விண்வெளித் துறையில் அமெரிக்க அரசு நிறுவனமான நாசாவின் (NASA) ஏகபோக ஆதிக்கத்திற்கு மாற்றாகத் தொடங்கப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தற்போது அத்துறையில் கொடிகட்டிப் பறக்கிறது.இந்நிறுவனம் பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (IPO – Initial Public Offering) வரும்பட்சத்தில், அதில் மஸ்க்கிற்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு மட்டும் சுமார் 79.8 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Also read : உக்ரைன் மீது ரஷ்யா உக்கிரத் தாக்குதல்: 70 ஏவுகணைகள், 650 ட்ரோன்கள் ஏவப்பட்டு பேரழிவு
தற்போது ஒரு சில குறிப்பிட்ட பெரும் முதலீட்டாளர்கள் மட்டுமே முதலீடு செய்யக்கூடிய நிலையில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் பங்குகள், பொதுமக்களின் வர்த்தகத்திற்குத் திறக்கப்படும்போது அதன் மதிப்பு இந்த எல்லையைத் தொடும்.அதன்படி, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் ஒட்டுமொத்த பங்குகளின் மதிப்பு 105.4 லட்சம் கோடி ரூபாயை எட்டும்.இதுவே அமெரிக்க டாலர் மதிப்பில் 1.1 டிரில்லியன் டாலராகும்.
‘டிரிலியன்’ என்றால் என்ன? நேரடி ஒப்பீடு
பொதுவாக டிரிலியன் டாலர் என்ற சொத்து மதிப்பு என்பது, மஸ்க் அவர்களின் கையில் இருக்கும் ரொக்கப் பணம் அல்ல.அது முழுக்க முழுக்க அவரது நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பாகும்.உதாரணத்திற்கு, ஒருவரிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு இருந்தால், அவர் ஒரு கோடீஸ்வரர் தான்.ஆனால் அந்த ஒரு கோடி ரூபாய் அவரது கையில் பணமாக இருக்காது, வீட்டின் மதிப்பாகவே இருக்கும்.அதே போன்றதுதான் இந்த பங்குகளின் மதிப்பும்.
இந்த 1 டிரில்லியன் என்ற எண்ணிக்கையின் பிரம்மாண்டத்தை நேரத்தைக் கொண்டு எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்:
- நாம் ஒவ்வொரு வினாடியாக (1, 2, 3 என) எண்ணத் தொடங்கினால், 1 மில்லியன் (Million) வினாடிகளை எண்ணி முடிக்க 11 நாட்கள் ஆகும்.
- அதுவே 1 பில்லியன் (Billion) வினாடிகளை எண்ணி முடிக்க 32 ஆண்டுகள் தேவைப்படும்.
- ஆனால், 1 டிரில்லியன் (Trillion) வினாடிகளைத் தொடர்ந்து எண்ணி முடிக்க வேண்டுமானால், நமக்குச் சரியாக 31,700 ஆண்டுகள் ஆகும்.
எகிப்தில் உள்ள புகழ்பெற்ற பிரமிடுகள் கட்டப்பட்டு வெறும் 4,500 ஆண்டுகளே ஆகின்றன எனும் பொது வரலாற்றோடு ஒப்பிடும்போது, 31,700 ஆண்டுகள் என்பது மனிதகுலம் கற்காலத்தில் வேட்டையாடித் திரிந்த காலகட்டத்திற்கும் முந்தையதாகும்.
அதேபோல், 1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட வேண்டுமானால், அதற்கு மொத்தம் 5 லட்சம் சரக்கு வாகனங்கள் தேவைப்படும்.அந்த 5 லட்சம் வாகனங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக நிறுத்தினால், அது சுமார் 3,000 கிலோமீட்டர் நீளத்திற்கு அசுரப் பாதையாக நீளும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளின் பொருளாதாரத்துடன் ஓர் ஒப்பீடு
ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை அதன் உள்நாட்டு உற்பத்தி (GDP – Gross Domestic Product) மூலமே கணக்கிடுவார்கள்.ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் (வாகனங்கள், உணவுப் பொருட்கள், ஆடைகள் போன்றவை) மற்றும் வழங்கப்படும் சேவைகள் (மருத்துவம், சுகாதாரம் போன்றவை) ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் மொத்தப் பணமதிப்பே ஜிடிபி ஆகும்.
உலகில் உள்ள 190-க்கும் மேற்பட்ட நாடுகளில், வெறும் 20 நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு (GDP) மட்டுமே 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது.அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன், இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட அந்த 20 நாடுகளின் வரிசையில், தற்போது தனிநபரான எலான் மஸ்க் இணையவுள்ளார்.
தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தைவான், சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு கூட 1 டிரில்லியன் டாலரை விடக் குறைவுதான்.ஏன், எலான் மஸ்க் பிறந்த நாடான தென்னாப்பிரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு மற்றும் அவர் பிறந்த நகரமான பிரிட்டோரியாவின் நிதி மதிப்பை விடவும் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பு பல மடங்கு அதிகமாக மாறவுள்ளது.
அமெரிக்க நகரங்கள் மற்றும் ஜாம்பவான்களை மிஞ்சும் மதிப்பு
அமெரிக்காவின் நிதி மற்றும் பொருளாதாரத்தின் இதயமாகக் கருதப்படும் மன்ஹாட்டன் (Manhattan) நகரத்தின் சொத்து மதிப்புகளுடனும், ஹூஸ்டன் (Houston) நகரத்துடனும் இதனை ஒப்பிடலாம்.ஹூஸ்டன் நகரத்தில் உள்ள ஒட்டுமொத்த வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டிடங்களையும் மொத்தமாகச் சேர்த்தாலும் அதன் மதிப்பு வெறும் 83.2 லட்சம் கோடி ரூபாய் தான்.ஆனால், மஸ்க்கின் சொத்து மதிப்போ அதைவிடப் பெரியது.
அமெரிக்கர்கள் கார் பிரியர்கள் என்பது உலகறிந்ததே.கடந்த ஓராண்டில் ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் புதிய கார்களை வாங்குவதற்காகச் செலவிட்ட மொத்தத் தொகையை விட மஸ்க்கின் சொத்து மதிப்பு அதிகம்.
தொழில்நுட்ப உலகின் பெரும் ஜாம்பவான்களான கூகுள் (Google) நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின், அதேபோல் ஆரக்கிள் (Oracle) நிறுவனத்தின் லாரி எலிசன் ஆகிய மூவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பைச் சேர்த்தாலும், அது மஸ்க் எட்டவிருக்கும் 1.1 டிரில்லியன் டாலருக்கு ஈடாகாது.
விளையாட்டுத் துறையோடு ஒப்பிடுகையில், உலகிலேயே மிக அதிக மதிப்புடைய டாப் 50 விளையாட்டு அணிகளின் (Sports Teams) மொத்த சொத்து மதிப்பை ஒன்றாகக் கூட்டினாலும், அதன் மதிப்பு வெறும் 33.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமேயாகும்.
திரைப்படங்களில் காட்டப்படும் கற்பனைக் கதைகளையும், உலகப் பெரும் பொருளாதாரக் கட்டமைப்புகளையும் விஞ்சும் வகையில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் பலத்தோடு, உலகின் முதல் ‘டிரிலியனர்’ என்ற வரலாற்றுச் சாதனைப் பக்கத்தை நோக்கி எலான் மஸ்க் நகர்ந்து கொண்டிருக்கிறார்.







