டெல்லி , ஜூன் 23: வறுமையில் வாடும் ஏழைப் பெற்றோர்களைக் குறிவைத்து, அவர்களிடம் இருந்து மிகக் குறைந்த விலைக்குக் குழந்தைகளைப் பெற்று, பின்னர் குழந்தை இல்லாத பணக்கார தம்பதியினருக்குப் பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த பெரும் கடத்தல் நெட்வொர்க்கை டெல்லி காவல்துறை அதிரடியாக முறியடித்துள்ளது. இதுவரை இந்தச் கும்பலால் சுமார் 30 குழந்தைகள் வரை சட்டவிரோதமாக விற்கப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமீபகாலமாக டெல்லியில் குழந்தை இல்லாத தம்பதியினரை அணுகும் ஒரு கும்பல், மிகக் குறுகிய காலத்தில் சட்டப்பூர்வமான முறையில் குழந்தைகளை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறிப் பணம் பறிப்பதாக டெல்லி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு டெல்லி காவல்துறையினர் உடனடியாக ஒரு ரகசியக் கூட்டு நடவடிக்கைக்கான (Undercover Operation) திட்டத்தை வகுத்தனர்.
அதன்படி போலீசாரே தம்பதியினரைப் போல மாறுவேடமிட்டு தங்களுக்குக் குழந்தை தேவைப்படுவதாகக் கூறி அந்த இடைத்தரகர்களை அணுகினர். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரத் தயாராக இருப்பதாகக் கூறி இடைத்தரகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை உண்மை என்று நம்பிய கடத்தல் கும்பல் குழந்தையைக் கைமாற்றுவதற்காகக் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரவழைக்கப்பட்டபோது அங்கு மறைந்திருந்த போலீசார் கும்பலைச் சுற்றி வளைத்துத் தப்பியோட முடியாதவாறு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இவர்களது நெட்வொர்க் மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் இயங்கி வந்தது அம்பலமாகியுள்ளது. குழந்தைகளைப் பெறுவதற்காக இவர்கள் முக்கியமாக மூன்று வழிகளைக் கையாண்டுள்ளனர். முதற்கட்டமாக சாலையோரம் வசிக்கும் மற்றும் கடுமையான வறுமை நிலையில் இருக்கும் ஏழைப் பெற்றோர்களைக் குறிவைத்து, “உங்கள் குழந்தை இங்கு கஷ்டப்படுவதை விட, ஒரு பணக்காரக் குடும்பத்தில் சொகுசாக, நல்ல முறையில் வளரும்” என்று அவர்களின் மனதை மாற்றி மிகக் குறைந்த பணத்தைக் கொடுத்துக் குழந்தைகளைப் பெற்றுள்ளனர்.
இரண்டாவதாக அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக வரும் ஏழைப் பெண்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் தாய்மார்களைக் கண்காணித்து அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் மூலம் குழந்தைகளைக் கவர்ந்துள்ளனர். மூன்றாவதாக செயற்கை முறை கருத்தரிப்பு மையங்களுக்கு (IVF Centers) வரும் வசதி படைத்த தம்பதியினர் பற்றிய விவரங்களை அங்கு பணிபுரியும் சில நர்சுகள் மூலம் சேகரித்து அவர்களைத் தொடர்புகொண்டு குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர்.
குழந்தைகளின் வயது மற்றும் பாலினத்திற்கு ஏற்ப இந்தக் கும்பல் விலையை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு 5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரையிலும், ஆண் குழந்தைகளுக்கு அதிகத் தேவை (Demand) இருப்பதால் 10 லட்சம் ரூபாய் வரையிலும் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்துள்ளனர். ஏழைப் பெற்றோர்களுக்கு மிகக் குறைந்த தொகையைக் கொடுத்துவிட்டு வாங்கும் தம்பதியினரிடம் பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர்.
குழந்தைகளை வாங்கும் தம்பதியினருக்கு எந்தவித சந்தேகமும் வராதவாறு சம்பந்தப்பட்ட மாநகராட்சியின் போலி முத்திரைகளுடன் கூடிய போலி பிறப்புச் சான்றிதழ்களை இந்தக் கும்பல் தயாரித்து வழங்கியுள்ளது. மேலும் நீதிமன்றத்தின் மூலம் சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்கப்பட்டது போலக் காட்டுவதற்காகப் போலியான சம்மதக் கடிதங்களையும், ஆவணங்களையும் தயார் செய்து கொடுத்து நம்ப வைத்துள்ளனர். இதனால் குழந்தைகளை வாங்கிய தம்பதியினரும் இது சட்டவிரோதமான செயல் என்பதை அறியாமல் முறைப்படிதான் தத்தெடுக்கிறோம் என்று நம்பி ஏமாந்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஒரு பெண் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கடத்தப்பட்ட குழந்தைகளில் 5 குழந்தைகள் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 25 குழந்தைகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தம்பதியினருக்கு விற்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்தந்த மாநிலக் காவல்துறையினரின் உதவியுடன் மீதமுள்ள குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் டெல்லி போலீசார் இறங்கியுள்ளனர்.
குழந்தை இல்லாத தம்பதியினர் இது போன்ற சட்டவிரோத இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பினால் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் (CARA – Central Adoption Resource Authority) அதிகாரப்பூர்வ நடைமுறைகளின்படி மட்டுமே சட்டப்பூர்வமாக அணுக வேண்டும் என்றும் காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.





