சென்னை, ஜூன் 23: சென்னை பல்லாவரத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சார கேபிள்களை மர்ம நபர்கள் நள்ளிரவில் கிரேன் உதவியுடன் திருடிச் சென்ற துணிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மேலும் மூன்று பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை வழியாகப் பல்வேறு பகுதிகளுக்கு மின்சார கேபிள்கள் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. இதற்காகப் பல்லாவரம் மேம்பாலத்திற்கு அருகே உள்ள ஜிஎஸ்டி சாலையின் இரண்டு முக்கிய இடங்களில் பூமிக்கு அடியில் பதிப்பதற்காகப் பெரும் சுருள்களாக வைக்கப்பட்டிருந்த உயர் அழுத்த மின் கேபிள்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இதன் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலையில் கேபிள்களைப் பூமியில் புதைக்கும் பணிக்காக ஒப்பந்த ஊழியர்களும் தொழிலாளர்களும் குறிப்பிட்ட இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த மின்கேபிள் சுருள்கள் காணாமல் போயிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் வந்த ஒரு கும்பல், ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, கனரக கிரேன் வாகனத்தின் உதவியோடு சாலையோரம் இருந்த கேபிள் ஒயர்களைத் தூக்கி மற்றொரு சரக்கு வாகனத்தில் ஏற்றித் திருடிச் சென்ற அதிர்ச்சியூட்டும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. பொதுவெளியில் அரசுப் பணி நடக்கும் இடத்தில் கிரேன் கொண்டு இந்தத் திருட்டு அரங்கேறியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பல்லாவரம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கினர். சிசிடிவி காட்சிகளில் பதிவான வாகன எண்களை வைத்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருடப்பட்ட மின் கேபிள்கள் அனைத்தும் சென்னை செங்குன்றம் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக செங்குன்றம் விரைந்த தனிப்படை போலீசார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின் கேபிள்கள் முழுவதையும் மீட்டனர். மேலும் சட்டவிரோதமாக இந்தத் திருட்டு கேபிள்களை விலைக்கு வாங்கிய செங்குன்றத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைதான சண்முகத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் திட்டமிட்டு இந்தத் திருட்டுச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான மூன்று நபர்களைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அந்த மூன்று பேரையும் பிடிக்கத் தனிப்படையினர் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர்.





