நெல்லை,May 26 : நெல்லை மாவட்டத்தின் ஒரே அதிமுக சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா தனது பதவியை இன்று ராஜினாமா செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அண்மைக்கால அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், நெல்லை மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, கடுமையான போட்டிக்கு இடையே வெற்றி பெற்று அதிமுகவின் ஒரே பிரதிநிதியாக இம்மாவட்டத்தில் நீடித்து வந்தார். மற்ற நான்கு தொகுதிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே கைப்பற்றின.
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் இசக்கி சுப்பையா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்ய உள்ளதாக அவரது தரப்பில் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளன.
Also Read : நெல்லை: சிறுமிக்கு ஆபாச சைகை காட்டிய வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி போக்சோ சட்டத்தில் கைது
அரசியல் பின்னணி மற்றும் காரணங்கள்
அதிமுக தலைமை, திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக வெளியாகும் தகவல்களே இந்த திடீர் முடிவுக்கு முதன்மைக் காரணம் என்று கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்த அரசியல் நகர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே, இசக்கி சுப்பையா தனது பதவியைத் துறக்கத் துணிந்துள்ளதாகத் தெரிகிறது.
தலைமையின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்துள்ள அவர், தனது அரசியல் எதிர்காலம் மற்றும் தொண்டர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னரே இந்த இறுதி முடிவை எடுத்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது .
நெல்லை அதிமுகவிற்குப் பின்னடைவு
இசக்கி சுப்பையாவின் இந்த ராஜினாமா முடிவு, நெல்லை மாவட்ட அதிமுகவிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள எஞ்சிய தொகுதிகளை இழந்திருந்த நிலையில், தற்போது கைவசமிருந்த ஒரே ஒரு தொகுதியையும் அக்கட்சி இழக்க நேரிட்டுள்ளது. இதன் மூலம் நெல்லை மாவட்ட சட்டமன்றப் பிரதிநிதித்துவத்தில் அதிமுகவின் இருப்பு தற்காலிகமாக முற்றிலும் இல்லாத ஒரு சூழல் உருவாகியுள்ளது.
இந்த திடீர் ராஜினாமா குறித்து அதிமுக தலைமை தரப்பிலோ அல்லது இசக்கி சுப்பையா தரப்பிலோ இன்னும் அதிகாரப்பூர்வமான விரிவான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், தென் மாவட்ட அதிமுக அரசியலில் இந்த நகர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-நெல்லை செய்தியாளர்








