நெல்லை , ஜூன் 29 : மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற காவல்துறை காவலர் ஒருவருக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அரசு மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு அனுப்பி டிஐஜி விநோத முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வு நெல்லை காவல்துறையினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்ட காவல்துறையில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் வெங்கடேஷ். இவர் அண்மையில் தனது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் மாநகரச் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு தலைக்கவசம் அணியாமல் சென்ற வெங்கடேஷைக் கண்டு தனது வாகனத்தை நிறுத்தினார். தொடர்ந்து தனது பாதுகாப்பு அதிகாரி மூலம் வெங்கடேஷை உடனடியாகத் தனது அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறு உத்தரவிட்டுவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.
Also : மும்பையில் 30,000 உயிர்களைப் பறிக்க சதி? மொஹரம் ஊர்வலத்தில் பரபரப்பு பின்னணியில் ஈரான் சதியா ?
காவல்துறையினர் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று உயர் அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில் டிஐஜியிடம் நேரடியாகவே பிடிபட்டதால் தனக்குக் கடுமையான துறை ரீதியான தண்டனை கிடைக்கக்கூடும் என்ற அச்சத்துடன் வெங்கடேஷ் டிஐஜி அலுவலகத்திற்குச் சென்றார். அச்சத்துடன் நின்றிருந்த அவரிடம் டிஐஜி திருநாவுக்கரசு கோபப்படாமல் மிகவும் கனிவான முறையில் உரையாடினார். உடனடியாக நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையின் தலைக்காயப் பிரிவுக்குச் செல்லுமாறு அவரிடம் கூறினார். அங்கு தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை இயக்கி விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நபர்களை நேரில் சந்தித்து அவர்களது நிலைமையைக் கேட்டறிந்து வந்து தன்னிடம் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வெங்கடேஷ் நெல்லை அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் விபதிக்காளான நபர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது விபத்தினால் அவர்கள் அனுபவிக்கும் கடுமையான வேதனைகளையும் அவர்களது குடும்பத்தினர் படும் துயரங்களையும் கண்டு அவர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். தலைக்கவசம் அணியாமல் சென்றது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் ஒருவேளை தனக்கு ஏதேனும் விபத்து நேர்ந்திருந்தால் தனது குடும்பத்தின் நிலை என்னவாகியிருக்கும் என்பதையும் அவர் அந்த இடத்தில் உணர்ந்துகொண்டார்.
இதன் தொடர்ச்சியாக மருத்துவமனையின் முன்பாக நின்றுகொண்டே தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து வெங்கடேஷ் ஒரு காணொளியைப் பதிவு செய்தார். அதில் தனக்குத் தண்டனை வழங்காமல் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்திய டிஐஜி திருநாவுக்கரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த சம்பவம் விதிகளை மீறும் காவலர்களுக்குத் தண்டனை வழங்குவதைத் தாண்டி அவர்கள் தவறை முழுமையாக உணரச் செய்த உயர் அதிகாரியின் இந்த அணுகுமுறை காவல்துறை வட்டாரத்தில் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.





