சேலத்தில் பிறந்து 7 நாள் ஆன பெண் குழந்தை ₹2 லட்சத்திற்கு விற்பனை

சேலம் , ஜூன் 26: சேலம் அரியனூர் அருகே வறுமை மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பிறந்து ஏழு நாட்களேயான தங்களது நான்காவது பெண் குழந்தையை பெற்றோரே இரண்டு லட்சம் ரூபாய்க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நலக் குழுவினர் மற்றும் கொண்டலாம்பட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

image 359

சேலம் மாவட்டம் அரியனூர் அடுத்த சந்தனக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி கவிதா. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். சீனிவாசன் தனியாக தொழில் செய்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாகவே போதிய வருமானம் இன்றி அவரது குடும்பம் கடுமையான வறுமையில் வாடி வந்துள்ளது. அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே பெரும் பொருளாதார நெருக்கடியை இந்த தம்பதியினர் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆன்மாக்களுக்கு கல்யாணம்..! கர்நாடகாவில் விருந்து வைத்து கொண்டாடப்பட்ட வினோத பிரேத திருமணம்

இந்தச் சூழலில் கடந்த ஜூன் 19ஆம் தேதியன்று கவிதாவுக்கு அரியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே உள்ள மூன்று குழந்தைகளையும் போதிய வருமானம் இன்றி வளர்க்க முடியாமல் தவித்து வந்த நிலையில் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது தம்பதியினருக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது. குழந்தையை வளர்க்க தங்களுக்கு வழியில்லை என முடிவெடுத்த பெற்றோர் தங்களுக்குப் பிறந்த ஏழு நாட்களேயான அந்தப் பச்சிளம் குழந்தையை விற்கத் துணிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினரைத் தொடர்புகொண்டு, தங்களது பெண் குழந்தையை இரண்டு லட்சம் ரூபாய்க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர். இதற்கிடையே பச்சிளம் குழந்தை ஒன்று சட்டவிரோதமாக விற்கப்பட்டது குறித்து 1098 என்ற குழந்தை உதவி மையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட குழந்தைகள் நலக் குழுவினர் விபரங்களைச் சேகரித்து சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த கொண்டலாம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீனிவாசன் மற்றும் கவிதா தம்பதியினரிடம் அதிரடி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வறுமை காரணமாக குழந்தையை ராமநாதபுரம் தம்பதியினருக்கு விற்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து குழந்தையை விலைக்கு வாங்கிச் சென்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பதியினரையும் காவல் துறையினர் உடனடியாகத் தொடர்புகொண்டு எச்சரித்தனர்.

காவல் துறையினரின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து தங்களது செயலால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து, தங்களால் வாங்கப்பட்ட குழந்தையை மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைத்துவிடுவதாக ராமநாதபுரம் தம்பதியினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையை எடுத்துக் கொண்டு அவர்கள் உடனடியாகச் சேலம் நோக்கிப் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகக் காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோதக் குழந்தை விற்பனையின் பின்னணியில் வேறு ஏதேனும் புரோக்கர் கும்பல் செயல்படுகிறதா அல்லது இடைத்தரகர்கள் எவருடைய தலையீடும் இன்றி பெற்றோர்கள் நேரடியாகவே ராமநாதபுரம் தம்பதியினரைத் தொடர்புகொண்டு குழந்தையை விற்றார்களா என்பது குறித்து காவல் துறையினரும் குழந்தைகள் நலக் குழுவினரும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பச்சிளம் குழந்தை மீட்கப்பட்ட பிறகு அடுத்தகட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *