இந்திய விமானப்படையில் இணையும் முதல் உள்நாட்டு C295 விமானம்!

புதுடெல்லி , ஜூன் 24: இந்தியப் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை எட்டுவதற்கான மிக முக்கிய மைல்கல்லாக முற்றிலும் உள்நாட்டிலேயே தனியார் துறையால் தயாரிக்கப்பட்ட முதலாவது ‘சி295’ (C295) ராணுவப் போக்குவரத்து விமானம் விரைவில் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட உள்ளது. ‘ மேட் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டுத் தயாரிப்பாக உருவெடுத்துள்ள இந்த அதிநவீன விமானம், இந்திய விமானப்படையின் பலத்தை பன்மடங்கு உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India's First Indigenous C295 Aircraft Joins the Indian Air Force, Boosting Defence Manufacturing and Self-Reliance

ஸ்பெயின் நாட்டின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான Airbus மற்றும் இந்தியாவின் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இந்த விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இந்தத் திட்டத்தின் கீழ் குஜராத் மாநிலம் வதோதராவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ஆலையில் விமானங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் சி295 விமானம் அனைத்துப் பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு விமானப்படையில் இணைவதற்குக் தயாராக உள்ளதாகப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையின் பயன்பாட்டிற்காக மொத்தம் 56 சி295 ரக ராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒட்டுமொத்த திட்டத்தின் மதிப்பு 21,935 கோடி ரூபாய் ஆகும். இந்த ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக 16 விமானங்கள் ஸ்பெயின் நாட்டிலேயே முழுமையாகத் தயாரிக்கப்பட்டு பறக்கும் நிலையில் இந்தியாவிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட வேண்டும். எஞ்சியுள்ள 40 விமானங்கள் தொழில்நுட்பப் பகிர்வு மற்றும் உள்நாட்டுத் தொழில் மேம்பாட்டின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும்.

TN மின்வாரியத்தில் ஒரே ஆண்டில் 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல்குமார்

இதன்படி டாடா மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களின் கூட்டுக் கூட்டுமுயற்சியின் கீழ், குஜராத்தின் வதோதராவில் உள்ள டாடா ஏர்கிராப்ட் ஆலையில் மீதமுள்ள 40 விமானங்கள் தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. தனியார் துறையின் பங்களிப்புடன் இந்தியாவில் இவ்வளவு பெரிய ராணுவ விமானத் தயாரிப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அண்மையில் கடந்த ஜூன் 10-ஆம் தேதி இந்த உள்நாட்டு விமானம் முதன்முறையாகச் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தச் சோதனை ஓட்டம் முழு வெற்றியைப் பெற்றுள்ளது.

விமானத்தின் செயல்பாடு மற்றும் பாதுகாப்புத் தரங்கள் திருப்திகரமாக அமைந்ததைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் 21 அல்லது 22 ஆகிய தேதிகளில் இந்த முதல் உள்நாட்டு சி295 விமானம் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படும் என பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த சி295 விமானம் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பன்முகத் தன்மைகளைக் கொண்ட ஒரு நடுத்தர ரக ராணுவப் போக்குவரத்து விமானமாகும். இந்த விமானம் அதிகபட்சமாக ஒன்பது டன் வரையிலான எடையுள்ள ராணுவ தளவாடங்களையும் பொருள்களையும் ஏற்றிச் செல்லும் பிரம்மாண்டமான திறன் கொண்டது. ஒரே நேரத்தில் 71 முழு கவச உடைகள் அணிந்த ராணுவ வீரர்களையோ அல்லது வான்வழியாகக் குதிக்கும் 48 பாராசூட் வீரர்களையோ ஏற்றிச் செல்லக்கூடிய உட்புறக் கட்டமைப்பில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சி295 விமானத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாகப் பார்க்கப்படுவது, இதன் நெகிழ்வுத்தன்மை ஆகும். மிகவும் கரடுமுரடான குறுகிய ஓடுதளங்களிலும், இந்தியாவின் எல்லைப் பகுதியில் உள்ள மிக உயரமான மலைப்பாங்கான பகுதிகளிலும் இந்த விமானத்தை மிக எளிதாகத் தரையிறக்கவும், அங்கிருந்து மீண்டும் இயக்கவும் முடியும். இதனால் நாட்டின் எல்லைப் பகுதிகளில் அவசரக் காலங்களில் ராணுவ வீரர்களையும், தேவையானப் பொருள்களையும் உடனுக்குடன் கொண்டு சேர்க்க இந்த விமானம் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

இந்திய விமானப்படையில் நீண்டகாலமாகப் பயன்பாட்டில் இருந்து வரும் பழமையான ‘ஆவரோ 748’ (Avro 748) ரக விமானங்களுக்கு மாற்றாக இந்த புதிய சி295 விமானங்கள் கொண்டுவரப்படுகின்றன. ஆவரோ விமானங்களுடன் ஒப்பிடுகையில் இது கூடுதல் வேகமும், நவீனக் கட்டுப்பாட்டு அமைப்புகளும், அதிக எரிபொருள் சிக்கனமும் கொண்டது. இந்தியாவின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும் தனியார் பாதுகாப்புத் துறை உற்பத்தியை உலகத் தரத்திற்கு உயர்த்துவதிலும் இந்த சி295 விமானத் தயாரிப்புத் திட்டம் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *