கடன் தவணை சலுகையை தவறாக பயன்படுத்திய பைனான்ஸ் நிறுவனம் சிக்கியது… ரூ.40 ஆயிரம் இழப்பீடு, தினமும் ரூ.1,000 அபராதம்

நெல்லை , ஜூன் 20 : நெல்லையில் வாடிக்கையாளரின் சம்மதமின்றி கொரோனா கால சலுகையை வழங்கி முறைகேடாக வட்டி வசூலித்து அலைக்கழித்த தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபாருக்கு 40 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டதோடு வீட்டு ஆவணங்களை ஒப்படைக்கத் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆணையம் தனது தீர்ப்பில் எச்சரித்துள்ளது.

Finance Company Penalised for Misusing Loan EMI Relief Scheme, Ordered to Pay Rs 40,000 Compensation and Rs 1,000 Daily Fine
Finance Company Penalised for Misusing Loan EMI Relief Scheme, Ordered to Pay Rs 40,000 Compensation and Rs 1,000 Daily Fine

நெல்லை மாவட்டம் கருங்குளம் பீடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் (39). இவர் தனது குடும்பத் தேவைக்காக நெல்லை முருகன்குறிச்சியில் செயல்பட்டு வரும் ‘வி ஸ்டார்’ பைனான்ஸ் நிறுவனத்தில் தனது வீட்டை அடமானம் வைத்து 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். இந்த கடனுக்கான மாத தவணைத் தொகையை அவர் எவ்வித நிலுவையுமின்றி தொடர்ந்து முறையாகச் செலுத்தி வந்துள்ளார்.

also : ரூ.2.18 லட்சம் சம்பள பாக்கி தராவிட்டால் குமரி ஊராட்சி பொருட்கள் ஜப்தி: நீதிமன்றம் அதிரடி

இந்த நிலையில் கடந்த கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் தவணை சலுகையை (மொரடோரியம்), வாடிக்கையாளரான வீரபுத்திரன் எந்தவொரு கோரிக்கையும் வைக்காத சூழலில் பைனான்ஸ் நிறுவனம் தானாக முன்வந்து அவருக்கு வழங்கியுள்ளது. அதுமட்டுமன்றி அந்த மூன்று மாத கால அவகாசத்திற்கு 23 சதவீத வட்டியைக் கணக்கிட்டு, கூடுதலாக 12 மாதங்கள் தவணை செலுத்த வேண்டும் என வீரபுத்திரனை பைனான்ஸ் நிறுவனம் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மறுபுறம் சலுகை காலம் என்று அறிவித்துவிட்டே அவரது வங்கி கணக்கில் இருந்து மாத தவணைத் தொகையையும் அந்த பைனான்ஸ் நிறுவனம் தொடர்ந்து முறைகேடாக வசூலித்து வந்துள்ளது. கடன் உதவி என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் மேற்கொண்ட இந்த நியாயமற்ற வணிக நடவடிக்கையாலும், ஆவணங்களைத் திருப்பித் தராமல் இழுத்தடித்ததாலும் வீரபுத்திரன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதையடுத்து தனக்கு நேர்ந்த அநீதிக்கு நீதி கேட்டு நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வீரபுத்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக வழக்கறிஞர் பிரமநாயகம் ஆஜராகி நிதி நிறுவனத்தின் விதிமுறை மீறல்களையும் வாடிக்கையாளருக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளையும் விரிவாக எடுத்துரைத்து வாதாடினார்.

வழக்கின் இருதரப்பு வாதங்களையும் முழுமையாக விசாரித்த நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் பிளசட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் அடங்கிய அமர்வு, தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் செயல் அப்பட்டமான சேவைக் குறைபாடு மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறை என்பதை உறுதி செய்தது.

இதனடிப்படையில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 30 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 40 ஆயிரம் ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் வி ஸ்டார் பைனான்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவிட்டது. நிர்ணயிக்கப்பட்ட இந்த காலக்கெடுவிற்குள் தொகையை வழங்கத் தவறினால் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து அந்த நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்க வேண்டும் எனவும் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில் வாடிக்கையாளர் வீரபுத்திரன் செலுத்த வேண்டிய இரண்டு மாத நிலுவைத் தொகையான 30 ஆயிரத்து 60 ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் பைனான்ஸ் நிறுவனத்திடம் அவர் செலுத்த வேண்டும் என்றும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

வாடிக்கையாளரிடமிருந்து இந்த நிலுவைத் தொகையைப் பெற்றுக் கொண்ட 15 நாட்களுக்குள் வீரபுத்திரனின் வீட்டு அடமான ஆவணங்களை ரத்து செய்து அதற்கான தடையின்மை சான்றிதழை (NOC) பைனான்ஸ் நிறுவனம் கட்டாயம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட 15 நாட்களுக்குள் ஆவணங்களை வழங்கத் தவறினால் அதன்பின்னர் ஏற்படும் தாமதத்திற்கு, ஆவணங்களை முழுமையாக ஒப்படைக்கும் வரை ஒவ்வொரு நாளுக்கும் தலா 1,000 ரூபாய் வீதம் அபராதமாக வாடிக்கையாளருக்கு பைனான்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் தனது தீர்ப்பில் மிகவும் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *