ரூ.2.18 லட்சம் சம்பள பாக்கி தராவிட்டால் குமரி ஊராட்சி பொருட்கள் ஜப்தி: நீதிமன்றம் அதிரடி

நெல்லை , ஜூன் 20 : கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்சாலை ஊராட்சி நிர்வாகம், துப்புரவு தொழிலாளி ஒருவருக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி மற்றும் வட்டித் தொகையான ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 443-ஐ அடுத்த 25 நாட்களுக்குள் வழங்காவிட்டால் அந்த ஊராட்சி அலுவலகத்தின் அசையும் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் என்று நெல்லை தொழிலாளர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Court Orders Seizure of Kanyakumari Panchayat Assets Over ₹2.18 Lakh Salary Arrears Dispute

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா கீழாற்றுகோணம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான லீலா என்பவர் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புலியூர்சாலை ஊராட்சியில் கடந்த 1986ஆம் ஆண்டு முதல் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2001ஆம் ஆண்டு முதல் ஊராட்சி நிர்வாகம் திடீரென வேலை வழங்க மறுத்தது. பின்னர் சில காலம் தற்செயல் பணியாளராக மட்டுமே வேலை வழங்கி வந்த நிர்வாகம் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் எந்தவிதமான முன்னறிவிப்போ அல்லது முகாந்திரமோ இன்றி இவரை பணியில் இருந்து முழுமையாக நீக்கியது.

also : NEET தேர்வு குளறுபடி: மகாராஷ்டிர மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்!

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக லீலா சட்டப் போராட்டத்தில் இறங்கினார். அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு பணித் தொடர்ச்சியுடன் கூடிய சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து தனது பணியை நிரந்தரம் செய்யக் கோரி அவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்து அங்கேயும் தனக்கு சாதகமான உத்தரவை பெற்றார்.

உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தனக்கு சேர வேண்டிய சம்பள நிலுவைத் தொகையை பெற்றுத்தரக் கோரி லீலா நெல்லை தொழிலாளர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லீலாவுக்கு சேர வேண்டிய சம்பள பாக்கி தொகையை உடனடியாக வழங்குமாறு கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மதிக்காத புலியூர்சாலை ஊராட்சி நிர்வாகம் அவருக்கான நிலுவைத் தொகையை வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலந்தாழ்த்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த லீலா, தனக்கு சேர வேண்டிய தொகையை மீட்பதற்காக ஊராட்சி அலுவலகத்தின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிடக் கோரி நெல்லை தொழிலாளர் நீதிமன்றத்தில் நிறைவேற்றுகை மனு (Execution Petition) ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு நெல்லை தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி அ. பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விரிவாக விசாரித்து இருதரப்பு ஆவணங்களையும் முந்தைய நீதிமன்ற உத்தரவுகளையும் பரிசீலித்த நீதிபதி தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் அதிரடியான தீர்ப்பை வழங்கினார்.

நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுப்படி துப்புரவு தொழிலாளி லீலாவுக்கு வழங்க வேண்டிய அசல் தொகையான ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 50 மற்றும் அதற்கான வட்டித் தொகையான ரூ.73 ஆயிரத்து 526 என மொத்தம் ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 443-ஐ 25 நாட்களுக்குள் ஊராட்சி நிர்வாகம் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி அ. பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.

மேலும் நீதிமன்றம் விதித்துள்ள இந்த 25 நாட்கள் கெடுவுக்குள் குறிப்பிட்ட தொகையை லீலாவிடம் செலுத்தத் தவறினால், புலியூர்சாலை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் சொந்தமான நாற்காலிகள், மேசைகள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய நேரிடும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 2026ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *