நெல்லை , ஜூன் 19 : நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி ,பாலியல் தொல்லை கொடுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியரை பணகுடி போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள செண்பகலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (28). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரிடம் சமீபகாலமாகத் தொடர்ந்து அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணிடம் நேரில் ஆபாசமாகப் பேசியதுடன் நில்லாமல் ,சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலமாகவும் தொடர்ந்து ஆபாசக் குறுந்தகவல்களை அனுப்பி பாலியல் ரீதியாக கடுமையான மன உளைச்சலையும் தொந்தரவையும் கொடுத்து வந்துள்ளார்.
ALso : விளையாட்டில் ஏற்பட்ட மோதல்: சென்னையில் 15 வயது சிறுவன் கடத்தி சித்ரவதை, இளைஞர் கைது
சிவகங்கையில் நீடிக்கும் தென்மேற்கு பருவமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி ,சாலையோர வியாபாரிகள் கவலை
பாதிக்கப்பட்ட பெண் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு ,சுபாஷின் இந்த அநாகரிகமான செயலை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் ,இந்த விவகாரம் குறித்து யாரிடமாவது வெளியில் சொன்னாலோ அல்லது பெற்றோரிடம் தெரிவித்தாலோ உன்னைக் கொலை செய்து விடுவேன் என்று அந்தப் பெண்ணுக்குப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் கடும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்த அந்த இளம்பெண் ,இந்தத் தொடர் தொல்லை குறித்து பணகுடி காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட பணகுடி போலீசார் ,சுபாஷ் மீது பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இளம்பெண்ணுக்குச் சமூக வலைத்தளம் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதை அடுத்து ,சுபாஷை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.





