சென்னை , ஜூன் 8: நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற ‘நார்வே செஸ் 2026’ சர்வதேச சதுரங்கத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் இன்று வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது நார்வே செஸ் தொடரில் தான் வென்ற மதிப்புமிக்க கோப்பையை முதலமைச்சரிடம் காண்பித்து பிரக்ஞானந்தா வாழ்த்துப் பெற்றார். நார்வே செஸ் வரலாற்றில் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா இதன்மூலம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உயர்த்தும் நோக்கில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கேற்று முத்திரை பதிக்கத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும், பயிற்சிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வெல்லும் வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் உயரிய ஊக்கத்தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அசாத்திய திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ‘தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டத்தின்’ (ELITE) கீழ், அவருக்கு ஆண்டுதோறும் 30 லட்சம் ரூபாய் உதவித்தொகை தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
Also : தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தமா? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
ஆசிரியர் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தற்போதைய அரசு விளையாட்டை வெறும் பொழுதுபோக்காகவோ அல்லது போட்டியாகவோ மட்டும் பார்க்காமல் அதனை ஒரு சக்திவாய்ந்த சமூக மாற்றக் கருவியாகக் கருதி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தமிழக இளைஞர்களின் அசாத்திய ஆற்றலை ஆக்கப்பூர்வமான நல்வழியில் செலுத்துவதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதே இந்த அரசின் முதன்மை நோக்கமாகும். அதே வேளையில் தூய்மையான, நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த மேம்பட்ட விளையாட்டுக் கலாச்சாரத்தை இளைய தலைமுறையினரிடம் வளர்த்தெடுப்பதிலும் தமிழ்நாடு அரசு உறுதியான உத்திகளுடன் செயலாற்றி வருகிறது.
அரசின் இந்தத் தொலைநோக்குச் சிந்தனையைத் துரிதமாகச் செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் “ஹோம் ஆஃப் செஸ்” (Home of Chess) என்ற தனித்துவமான சதுரங்க அகாடமி பிரத்யேகமாக நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன அகாடமியின் வாயிலாக தமிழக சதுரங்க வீரர்களுக்கு முறைப்படியான உலகத்தரம் வாய்ந்த பயிற்சி முகாம்கள் நடத்தப்படுவதுடன் அவர்களின் சர்வதேச அளவிலான செயல்திறனும் கூர்மையாகக் கண்காணிக்கப்படுகிறது. வீரர்களுக்கு உலகளாவிய போட்டி அனுபவத்தை வழங்குவதோடு மட்டுமின்றி, அதிநவீன கருவிகள் மற்றும் சர்வதேச ஒத்திகை மென்பொருள்களின் (Advanced Training Software) உதவியுடன் மேம்பட்ட பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகின்றன.
இவற்றுடன் சதுரங்க ஆட்டத்திற்கு மிக அவசியமான மனவளப்பயிற்சி, ஆட்டத்தின் போக்கை மாற்றும் முறையான திட்டமிடல் மற்றும் வீரர்களின் முழுமையான அறிவுத்திறன் வளர்ச்சி ஆகிய அம்சங்களுக்கும் இந்த அகாடமியில் அதிக்க முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்தத் தொடர் முயற்சிகள் அனைத்தும், அனைத்து வயதினரையும், குறிப்பாக அடிமட்ட அளவில் இருக்கும் இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பதையும், அவர்கள் சர்வதேச மாஸ்டர் (IM) மற்றும் கிராண்ட்மாஸ்டர் (GM) போன்ற சதுரங்கத் துறையின் உயரிய உலகளாவிய பட்டங்களை எளிதாகப் பெறுவதற்கு வழிவகை செய்வதையும் நோக்கமாகக் கொண்டு முழு வீச்சில் இயங்கி வருகிறது.
தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற இந்த உயர் மட்டப் பாராட்டு விழாவில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் திரு. ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவின் பெற்றோர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு இளம் வீரருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.








