சிதம்பரம், ஜூன் 8: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, தனது ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்ததோடு, அவரது தந்தையையும் இரும்புப் பைப்பால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய முதியவரை அண்ணாமலைநகர் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகிலுள்ள மீதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் காமாட்சி என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு காமாட்சி தனது கணவரைப் பிரிந்து வாழத் தொடங்கினார். அதன்பின் மீதிக்குடி செங்கமேட்டுத் தெரு பகுதியில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்குச் சென்று குழந்தையுடன் காமாட்சி வசித்து வந்துள்ளார்.
கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த காமாட்சியை அதே கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் (65) என்ற முதியவர் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்துள்ளார். எப்படியாவது காமாட்சியைத் தன்வசப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தனது ஆசைக்கு இணங்குமாறு அவரிடம் தொடர்ந்து வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. முதியவரின் இந்தச் செயலை காமாட்சி கடுமையாக எதிர்த்து வந்துள்ளார்.
Also read : நெல்லை : போலி நகையை மாற்றி 5 பவுன் திருடிய தம்பதி உள்பட 3 பேர் கைது!
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் காமாட்சி சென்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த மகேந்திரன் அவரைத் வலுக்கட்டாயமாகத் தனது காரில் ஏறுமாறு கூறி கையைப் பிடித்து இழுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த காமாட்சி பொது இடத்தில் தனது கையைப் பிடித்து இழுத்த மகேந்திரனைத் தனது காலணி (செருப்பு) யால் அடித்துள்ளார். மேலும் இந்த அநாகரிகச் செயலைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துகொண்ட காமாட்சி ‘இதை உனது குடும்பத்தினருக்கு அனுப்பிவிடவா?’ என்று கேட்டு மகேந்திரனை எச்சரித்துள்ளார்.
பொது இடத்தில் இளம்பெண் தன்னைச் செருப்பால் அடித்ததாலும் குடும்பத்தினருக்கு வீடியோவை அனுப்பிவிடுவேன் என்று மிரட்டியதாலும் மகேந்திரன் கடுமையான ஆத்திரமடைந்தார். இதனால் காமாட்சியைப் பழிவாங்கவும், அவரைத் தீர்த்துக்கட்டவும் அவர் திட்டமிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று காலையில் காமாட்சி தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்த மகேந்திரன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காமாட்சியைச் சரமாரியாக வெட்டினார். இதில் உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயமடைந்த காமாட்சி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அப்போது மகேந்திரனைத் தடுக்க முயன்ற காமாட்சியின் தந்தை பாண்டுரங்கனை அங்கிருந்த இரும்புப் பைப்பால் மகேந்திரன் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பாண்டுரங்கனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. காமாட்சி உயிரிழந்ததை உறுதி செய்துகொண்ட மகேந்திரன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அண்ணாமலைநகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த காமாட்சியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை) அனுப்பி வைத்தனர். மேலும் இரும்புப் பைப்பால் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்த பாண்டுரங்கனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் குறித்து அண்ணாமலைநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய 65 வயது முதியவர் மகேந்திரனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடும்பப் பிரச்சினை காரணமாகக் கணவரைப் பிரிந்து குழந்தையுடன் வாழ்ந்து வந்த இளம்பெண் முதியவரின் ஆசைக்கு இணங்காததால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.








