சென்னை , ஜூன் 8 : தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் க.சந்திரமோகன் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக அண்மையில் வெளியான அரசிதழ் (கெசட்) பல்வேறு விவாதங்களை எழுப்பியிருந்த நிலையில் இந்த அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை கடந்த ஜூன் 3ஆம் தேதி ஆசிரியர்களுக்கான புதிய பணி விதிமுறைகள் அடங்கிய அரசாணையை அரசிதழாக வெளியிட்டது. அதில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பணியிடங்களின் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. அதே நேரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு பதவி உயர்வு பெற டெட் தேர்ச்சி கட்டாயம் என்று நேரடியாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அரசிதழ் வெளியானதைத் தொடர்ந்து ஆசிரியர் சமூகத்தினர் மத்தியில் பெரும் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட பிரிவு ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு டெட் தேர்வு தேர்ச்சி தேவையில்லை என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இந்த விவகாரம் ஆசிரியர் சங்கங்கள் மத்தியிலும் விவாதப் பொருளாக மாறியது.
இந்த நிலையில் நிலவி வரும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் விரிவான விளக்கம் அளித்துள்ளார். கடந்த மே மாதம் 29ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் இன்னும் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் அந்த வழக்கின் தீர்ப்பில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Also read : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘TET’ தேர்வு கட்டாயம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் பதவி உயர்வு பெற வேண்டும் எனில் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது முற்றிலும் கட்டாயமாக்கப்படுகிறது என்றும் இந்த விதிமுறை அனைத்துப் பிரிவு ஆசிரியர்களுக்கும் பொதுவானது என்றும் முதன்மைச் செயலாளர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் டெட் தேர்ச்சியிலிருந்து எந்தவொரு பிரிவு ஆசிரியருக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை என்பது பள்ளிக்கல்வித்துறை தரப்பில் திட்டவட்டமாகப் பதிவாகியுள்ளது.








