சென்னை,ஜூன் 4: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) முறைகேடுகள் மற்றும் தேர்வு ரத்து விவகாரம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில் மத்தியப் பிரதேசத்தில் மருத்துவக் கனவோடு காத்திருந்த இளம் மாணவி ஒருவர் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தொலைதூர மாவட்டமான மௌகஞ்ச் பகுதியைச் சேர்ந்த அகான்ஷா என்ற மாணவியே மீண்டும் தேர்வு எழுத தனக்குத் தெம்பில்லை என்று உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.மருத்துவ நுழைவுத் தேர்வு முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களின் மனநலம் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு இந்தச் சோகச் சம்பவம் ஒரு சான்றாக மாறியுள்ளது.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அகான்ஷாவின் பெற்றோர் தங்களது மகளை மருத்துவராக்கப் பெரும் பொருளாதாரச் சுமைகளை எதிர்கொண்டுள்ளனர்.போபால் அல்லது இந்தூர் போன்ற பெரிய நகரங்களுக்கு அனுப்பிப் படிக்க வைக்கப் போதிய வசதி இல்லாததால் தங்களிடம் இருந்த மூன்று ஏக்கர் விவசாய நிலத்தை விற்றும் கிசான் கிரெடிட் கார்டு மூலம் நாக்பூரில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்க்க 3 லட்சம் ரூபாய் கடன்பெற்றும் மகளைப் படிக்க வைத்துள்ளனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான உழைப்பைச் செலுத்தி நீட் தேர்விற்கு அகான்ஷா தயாராகி வந்துள்ளார்.
ALso read : நெல்லையில் மதுபோதையில் தகராறு செய்த தந்தையை கம்பியால் தாக்கிக் கொன்ற மகன் கைது
மின்சார வாரிய தலைமை அலுவலக Hard Disk திருட்டின் பின்னணியில் உள்ளவர்கள் யார்?
தமிழ்நாட்டில் ரூ.18,600 கோடியில் L&Tமுதலீடு: 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி
சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வை எழுதிவிட்டுத் திரும்பிய அகான்ஷா தனது குடும்பத்தினரிடம் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாகவும் தனக்கு 650-க்கும் அதிகமான மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த சில நாட்களாகத் தனது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டாடியுள்ளார்.
ஆனால் நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்கள் வெடித்ததைத் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் மறுதேர்வு நடத்தப்படலாம் என்ற செய்திகள் வெளியாகின.இந்த அறிவிப்பு அகான்ஷாவை உலுக்கியுள்ளது.தான் இத்தனை காலம் கஷ்டப்பட்டுப் படித்த உழைப்பு வீணாகிவிட்டதே என்றும் மீண்டும் நடத்தப்படும் தேர்வு கடினமாக இருக்குமோ என்றும் அவர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.
மீண்டும் தேர்வு எழுத வேண்டுமானால் குடும்பத்தினர் மீண்டும் தமக்காகப் பணத்தைச் செலவழிக்க நேரிடும் என்பதும் அது குடும்பத்தின் மீதான பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கும் என்பதும் அவரைப் பெரிதும் வாட்டியுள்ளது.இதுகுறித்து அவர் தனது பெற்றோரிடமும் பலமுறை புலம்பியுள்ளார்.”மறுபடி தேர்வு எழுத எனக்குத் தைரியமும் இல்லை உடம்பில் தெம்பும் இல்லை” என்று அவர் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.பெற்றோர் அவருக்கு ஆறுதல் கூறித் தேற்றி வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போலீசார் கைப்பற்றிய அவரது தற்கொலை வாரண்ட் கடிதத்தில் “சாரி அம்மா, அப்பா…நான் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டேன்.மீண்டும் நீட் தேர்வு எழுத எனக்குத் துணிச்சல் இல்லை” என்று தனது பெற்றோரிடம் மன்னிப்புக் கோரி எழுதியுள்ளார்.தேர்வு ரத்து என்ற செய்தி வெளியான நாள் முதலே அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும் தங்களது மகள் இந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளாள் என்பதை உணராமல் அவளைத் தனியாக விட்டுவிட்டோம் என்றும் அவளது பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த என்.எஸ்.யு.ஐ (NSUI) மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.மேலும் அந்த அமைப்பின் சார்பில் குடும்பத்திற்கு உடனடியாக 2.5 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவும் தேர்வு ரத்தும் வெறும் நிர்வாக ரீதியிலான குளறுபடிகள் மட்டுமல்ல அவை மாணவர்களின் உயிரோடும் அவர்களின் பல ஆண்டுகால உழைப்போடும் விளையாடும் ஆபத்தான நகர்வுகள் என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களின் மனதில் எழுந்துள்ள இந்த அஞ்சாத பயத்திற்கும் எதிர்காலம் குறித்த பாதுகாப்பற்ற தன்மைக்கும் உரியத் தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் நிர்வாக அமைப்புகள் உள்ளன என்பதை இந்த இளம் உயிரிழப்பு மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியுள்ளது.








