சென்னை, ஜூன் 4: தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்தியாவின் முன்னணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் குழுமமான லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனம் மாநிலத்தில் ரூ.18,600 கோடி முதலீட்டில் மூன்று பெரும் திட்டங்களைச் செயல்படுத்த முன்வந்துள்ளது.இதன் மூலம் 8,200 நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 4, 2026) நடைபெற்ற நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாயின.
புதிய அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு தொழில் துறையில் மேற்கொள்ளப்படும் மிக முக்கிய முதலீட்டு ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
also read : Googleக்கு பிரிட்டன் கட்டுப்பாடு…Microsoft வெளியிட்ட AI சர்ப்ரைஸ் என்ன?
மின்சார வாரிய தலைமை அலுவலக Hard Disk திருட்டின் பின்னணியில் உள்ளவர்கள் யார்?
முதலமைச்சர் – L&T தலைவர் சந்திப்பு முன்னதாக லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான திரு.எஸ்.என்.சுப்ரமண்யன், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாட்டில் L&T நிறுவனம் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொண்டு வலுவான தடம் பதித்து வருவதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் தற்போது பல்வேறு துறைகளில் பரவலாக முதலீடு செய்ய முன்வந்திருப்பதற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.மேலும் தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து மாநில அரசு உதவிகளும் முழுமையான ஒத்துழைப்பும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.
மூன்று பெரும் திட்டங்களின் விவரங்கள் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களின் தொழில் தேவைக்கேற்ப பின்வரும் மூன்று முக்கியத் திட்டங்களை L&T நிறுவனம் செயல்படுத்தவுள்ளது:
- காஞ்சிபுரம் தகவல் தரவு மைய விரிவாக்கம்: டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் தகவல் தரவு மைய விரிவாக்கத் திட்டம் (Data Centre Expansion) அமையவுள்ளது.இத்திட்டத்தின் மூலம் 500 நபர்களுக்கு உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- கோயம்புத்தூர் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி: தொழில் நகரமான கோயம்புத்தூரில் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம் (Electronics Manufacturing) மேற்கொள்ளப்படவுள்ளது.இதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த 2,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படவுள்ளது.
- திருவள்ளூர் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும்தள விரிவாக்கம்: திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற காட்டுப்பள்ளி L&T கப்பல் கட்டும்தளத்தை 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் மிக அதிக அளவாக 5,700 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
1.5 டிரில்லியன் டாலர் இலக்கை நோக்கியப் பயணம் வரும் 2036-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற இலட்சிய இலக்கை முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் நிர்ணயித்துள்ளார்.இந்த இலக்கை எய்துவதற்கான முக்கிய மைல்கல்லாக இம்முதலீடுகள் பார்க்கப்படுகின்றன.பல்துறை சார்ந்த இந்த உள்கட்டமைப்புத் திட்டங்களின் மூலம் மாநிலத்தில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுச் (AI) செயல்பாடுகள் கணிசமான வளர்ச்சி பெறும்.
அதேபோல் கோயம்புத்தூர் திட்டத்தின் மூலம் மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பு (Electronics Ecosystem) மேம்படும்.திருவள்ளூரின் காட்டுப்பள்ளி திட்ட விரிவாக்கமானது வளர்ந்து வரும் கடலோர காற்றாலை கட்டுருவாக்கத் தொழிலுக்கு (Offshore Wind Component Manufacturing) உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைத் தமிழ்நாட்டிற்குப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தத் திட்டங்களின் முழுமையான செயலாக்கம் மூலம் தமிழக இளைஞர்களுக்குப் பெரிய அளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன் மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் புதிய வேகத்தைப் பெறும்.
அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்பு செய்தி வெளியீடு எண் 167-ன் படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் செல்வி எஸ்.கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார் இ.ஆ.ப., தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச.விஜயகுமார் இ.ஆ.ப.ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் பு.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., எல் & டி நிறுவனத்தின் முன்முயற்சிகள் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் திரு.கே.ஜி.சத்யநாராயணன் மற்றும் அரசின் உயர் அலுவலர்கள் பலரும் இந்த உடன்படிக்கை நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.








