நெல்லை வன்முறை: நெட்டூரில் தனி காவல் நிலையம் அமைக்கப் பரிந்துரை; பாதிக்கப்பட்டோருக்கு அரசு என்றும் துணை நிற்கும் – சமூக நலத்துறை அமைச்சர் உறுதி

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியில் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட சாதிய வன்முறைத் தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய பதற்றங்களைத் தணிக்க காவல்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட இளைஞர்களை முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இனி சாதி கலவரங்கள் நடக்காது! புதிய போலீஸ் Force குறித்து அமைச்சர் வன்னியரசு பரபரப்பு அறிவிப்பு
இனி சாதி கலவரங்கள் நடக்காது! புதிய போலீஸ் Force குறித்து அமைச்சர் வன்னியரசு பரபரப்பு அறிவிப்பு

பாதிக்கப்பட்டவர்களின் வலியையும் வேதனையையும் இந்த அரசு உணர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்ட அமைச்சர் நள்ளிரவில் தெருக்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக வெட்டியதில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் மிக மோசமான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினார். வெளியூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய தம்பி ஒருவர் இனிமேல் தம்மால் வேலை செய்ய முடியுமா என்ற அச்சத்திலும் வாழ்வாதாரப் பாதுகாப்பற்ற சூழலிலும் மருத்துவமனையில் கண்ணீருடன் பேசியதை அவர் சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்ட மக்களின் அச்சத்தைப் போக்கி முழுமையான பாதுகாப்பு வழங்குவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடனும் காவல் துறை அதிகாரிகளுடனும் விரிவாகப் பேசப்பட்டிருப்பதாக அவர் உறுதி அளித்தார்.

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடராமல் இருக்க ஆலங்குளம் அருகிலுள்ள நெட்டூர் பகுதியில் பிரத்யேகமாக ஒரு புதிய காவல் நிலையத்தை அமைக்க வேண்டும் என்றும் அங்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அவர்களது தெருவிலேயே புதிய ரேஷன் கடை அமைப்பதற்கான நடவடிக்கைகள் துறை ரீதியாக மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Also read : பாஜகவில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல் ஏன் : வெளியான புதிய தகவல்

பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பதே இந்த அரசின் கொள்கை என்று குறிப்பிட்ட அவர் இதில் எந்தவித பாகுபாடும் காட்டப்படாது என்றார். வன்முறையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ராம்குமார் என்ற இளைஞரின் குடும்பத்திற்கு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் முதற்கட்ட நிவாரணமாக 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மற்ற நபர்கள் தலித் கிறித்தவர்கள் என்பதால் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அவர்களுக்கும் தேவையான அனைத்து அரசு உதவிகளும், வேலைவாய்ப்புகளும் கிடைக்க அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஆண்டுக்கணக்கில் இத்தகைய சாதிய வன்முறைகள் தொடர்கதையாகவே இருக்கின்றன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இப்பகுதிகளை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்பது தங்களது கட்சியின் நீண்டகாலக் கோரிக்கை என்றார். இது மிகவும் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து, அதிகாரிகளுடன் பேசி இதற்கான நிரந்தரத் தீர்வு குறித்து அவசரமாக முடிவெடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். தெருக்களில் செல்பவர்களை எல்லாம் குறிவைத்துத் தாக்கும் ஒரு புதிய வன்முறை கலாச்சாரம் பரவி வருவதாக எழுந்துள்ள அச்சம் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குத் தீவிரமாகக் கொண்டு செல்லப்படும் என்றும் இது ஏதோ தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல கடந்த ஜனவரி முதலே இப்பகுதியில் பதற்றம் நிலவி வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

சாதியக் கலவரங்களைத் தடுக்கத் தனிப்படை அமைப்பது குறித்தும் சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவது குறித்தும் அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. வெறும் சாதிய வன்மத்தைத் தூண்டிவிட்டு குளிர் காய நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது. நள்ளிரவில் மதுபோதையில் இத்தகைய வன்முறைகள் அரங்கேற்றப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளதால் கோயில்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றுவது போல இதுபோன்ற பதற்றமான கிராமங்களின் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளையும் அகற்றுவது குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே 217 கடைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் வன்முறைக்குக் காரணமான இந்த டாஸ்மாக் கடையும் அகற்றப்படும் என்றார்.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் நீதிமன்றப் பிணையில் எளிதில் வெளிவர முடியாதபடி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்றும் அமைச்சர் எச்சரித்தார். தங்களுக்குப் பதவி அதிகாரத்தை விட சமூக நீதியும் சமூக நல்லிணக்கமுமே முதன்மையானது எனக் குறிப்பிட்ட அவர் ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான தனிச் சட்டம் கொண்டு வர நீதி அரசர் கே.என்.பாட்ஷா தலைமையிலான குழுவின் அறிக்கை விரைவில் பரிசீலிக்கப்பட்டு வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அதற்கான சட்டமுன்வடிவு கொண்டு வரப்படும் என்றார்.

மேலும் சாதிய மோதல்களில் 16, 17 வயதுடைய இளம் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் போதை பழக்கத்தாலும், பள்ளி இடைநிற்றலாலும் (Dropouts) அதிகளவில் ஈடுபடுவது கவலையளிப்பதாகக் கூறினார். இன்று காலையில்தான் சமூக நீதித்துறை சார்பில் இதற்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பது, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குவது, கல்வி உதவித்தொகையை உயர்த்துவது ஆகியவற்றின் மூலம் மாணவர்களின் கவனத்தை நல்வழிப்படுத்தவும், இடைநிற்றல் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும் அரசு முழு மூச்சோடு செயல்பட்டு வருவதாகக் கூறி விடைபெற்றார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1069

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »