சிறப்பு மருத்துவ தொகுப்பு : மனிதகுலத்தின் ஆயுளை நீட்டிக்கும் நோக்கில் நவீன அறிவியல் தீவிரமாக வளர்ந்து வரும் அதே வேளையில், இந்திய சமூகத்தின், குறிப்பாக தமிழகத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பு மிக மோசமான அச்சுறுத்தலைச் சந்தித்து வருவதாகப் பிரபல சித்த மருத்துவர் கு. சிவராமன் கவலை தெரிவித்துள்ளார். தற்கால மனிதர்களின் மன உளைச்சல், தவறான உணவுப் பழக்கம் மற்றும் அதிகரித்து வரும் மதுப் பழக்கம் ஆகியவை எதிர்காலத் தலைமுறையினரைத் தீராத நோய்க் கூட்டங்களுக்குள் தள்ளி வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மருத்துவக் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர், சர்வதேச மருத்துவ இதழான ‘தி லான்செட்’ (The Lancet) வெளியிட்ட சமீபத்திய தரவுகளைச் சுட்டிக்காட்டி அதிர்ச்சியூட்டும் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “தொழில்நுட்ப ரீதியாக உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். 2045-ஆம் ஆண்டிற்குப் பிறகு மனிதர்கள் இயற்கையாக மரணிப்பதே அரிதாகிவிடும் என்றும், தாங்களாகவே விரும்பி ஒரு இயந்திரத்தின் உதவியோடுதான் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலை வரும் என்றும் கணிக்கப்படுகிறது. ஆனால், இந்த அதீத தொழில்நுட்ப வசதிகள் யாவும் பில் கேட்ஸ் போன்ற உலகப் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும். நம்மைப் போல அன்றாட வாழ்வில் முன்னேற ஓடிக் கொண்டிருக்கும் சாமானிய மக்களுக்கு, ஆரோக்கியம் என்பது இனிவரும் காலங்களில் மிக விலையுயர்ந்த ஒன்றாகவே மாறிவிடும்” என்று அவர் குறிப்பிட்டார்.
also read : மதிய உணவில் நாம் செய்யும் தவறுகள் என்ன? – மருத்துவர் சிவராமன் விளக்கம்
இந்தியாவில் தொற்றுநோயில்லா வாழ்வியல் நோய்களின் (Non-Communicable Diseases) பெருக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாகப் புற்றுநோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகள் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகின்றன. ஒரு காலத்தில் புற்றுநோய் என்பது இந்தியாவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், நமது பாரம்பரிய உணவுகளில் சேர்க்கப்படும் நறுமண மூட்டிகள் (Spices) அதற்குப் பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றும் நம்பப்பட்டது. ஆனால், தற்போது குடல் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. இதுகுறித்துப் புற்றுநோய் நிபுணர்களிடம் ஆலோசித்ததைச் சுட்டிக்காட்டிய மருத்துவர் சிவராமன், “முன்பெல்லாம் ஒரு நாளைக்கு 10 முதல் 12 நோயாளிகளை மட்டுமே சந்தித்து வந்த புற்றுநோய் மருத்துவர்கள், இன்று நாளொன்றுக்கு 150 முதல் 200 நோயாளிகள் வரை பரிசோதிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தேவையைப் புரிந்துகொண்டுதான், தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகள் புற்றுநோய் சிகிச்சை மையங்களையும் (Regional Cancer Centers), டயாலிசிஸ் மையங்களையும் அமைப்பதற்கான இடங்களை வாங்கி குவித்து வருகின்றன. எதிர்காலத்தில் தெருவுக்குத் தெரு ஏடிஎம் இயந்திரங்கள் இருப்பதைப் போல, டயாலிசிஸ் இயந்திரங்கள் வைக்கப்பட்டு, மனிதர்கள் தங்களை இணைத்துக் கொண்டு சிகிச்சை பெறும் கொடூரமான சூழலை நாம் நம் வாழ்நாளிலேயே காணப் போகிறோம்” என்று வேதனை தெரிவித்தார்.
இந்தப் பேரழிவிலிருந்து தப்பிக்க, மக்கள் தங்களின் உணவு முறைகளில் உடனடியாக மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிடம் இல்லாத அளவுக்கு, ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் மட்டுமே இயற்கை அள்ளித் தந்த சிறுதானியப் பெருக்கம் உள்ளது. இங்கிருந்துதான் அவை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், நம் நாட்டு மக்கள் சிறுதானியங்களை உணவில் சேர்க்கத் தவறி வருகிறார்கள். சிறுதானிய உணவுகள் என்றாலே பலரும் கஞ்சி காய்ச்சிக் கொடுப்பதைக் கடமையாகக் கொண்டுள்ளனர். அது நோயாளிகளுக்கான உணவு போன்ற பிம்பத்தை உருவாக்குவதால், இளந்தலைமுறையினர் அதனை வெறுக்கிறார்கள். எனவே, கஞ்சியாகக் கொடுக்காமல், பணியாரம், கொழுக்கட்டை போன்ற புதிய மற்றும் சுவையான வடிவங்களில் சிறுதானியங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இதனுடன், இஞ்சி, பூண்டு, கருஞ்சீரகம், சீரகம் போன்ற நறுமண மூட்டிகளைத் தினசரி உணவில் ஏதோ ஒரு வகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவைதான் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.
உடல்நலப் பாதிப்புகளுக்கு இணையாக, தற்காலச் சமூகத்தில் மனநலப் பாதிப்புகளும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் கடுமையான மன அழுத்தத்தினால் (Depression) பாதிக்கப்பட்டுள்ளனர். மன நோய் என்றால் சட்டையைக் கிழித்துக் கொண்டு வீதியில் அலைபவர்கள் மட்டும்தான் என்ற தவறான புரிதல் மக்களிடம் உள்ளது. ஆனால், காலையில் எழும்போது எந்தவித உற்சாகமும் இன்றி, ‘இன்னொரு நாளா’ என்ற சலிப்புடன் எழுபவர்களே இங்கு 60 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறார்கள். தடையற்ற, நிம்மதியான உறக்கம் பலருக்குக் கனவாகிவிட்டது. இரவில் படுத்த முதல் ஐந்து நிமிடங்களில் விருப்பமானவர்களின் நினைவுகளுடன் தூங்கி, இடைப்பட்ட ஆறரை முதல் ஏழு மணி நேரம் எந்தப் சிந்தனையும் இன்றி மரணித்தது போல் ஆழமாகத் தூங்கி எழ வேண்டும். விடியற்காலையில் மட்டுமே வங்கிய கணக்குகள் அல்லது அன்றாடக் கடமைகள் நினைவுக்கு வர வேண்டும். ஆனால், இந்த இயல்பான தூக்க சுழற்சி இல்லாதவர்களுக்கு எதிர்காலத்தில் தீவிரமான உளவியல் சிக்கல்கள் தோன்றும்.
இந்த உளவியல் ரீதியான மற்றும் வாழ்வியல் ரீதியான நோய்கள் பெருகும்போது, 60 வயதைக் கடந்து வாழும் முதியவர்களின் வாழ்க்கை நரகமாக மாறிவிடும். முதிய வயதில் பிள்ளைகளின் ஆதரவோ அல்லது தகுந்த உறவுகளின் கரிசனமோ இல்லாத சூழலில், தினமும் எந்தெந்த வண்ண மாத்திரைகளை விழுங்க வேண்டும் என்ற சிந்தனையோடு மட்டுமே தனிமையில் வாழ வேண்டியிருக்கும். மறைந்த எழுத்தாளர் சுஜாதா தனது வயோதிக காலத்தில் எழுதியதைச் சுட்டிக்காட்டிய சிவராமன், “எந்திரன் சினிமா உள்ளிட்ட பல நவீனக் கனவுகளைப் பற்றி எழுதிய சுஜாதா, தனது 67-ஆவது வயதில், ‘வயோதிகத்தில் மிக அவசியமான விஷயம் காலையில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மலம் கழிப்பதுதான், அது ஒழுங்காக நடந்தால் போதும்’ என்று எழுதினார். அதுதான் யதார்த்தம். அத்தகைய நிம்மதியான முதுமை வேண்டும் எனில், உணவிலும் வாழ்வியலிலும் இப்போதே அக்கறை செலுத்த வேண்டும்” என்றார்.
இறுதியாக, தற்கால வணிகச் சமூகத்தையும் உழைக்கும் வர்க்கத்தையும் சீரழித்து வரும் மதுப் பழக்கம் குறித்துப் மிகக் கடுமையான எச்சரிக்கையை அவர் விடுத்தார். வார இறுதி நாட்களில் மட்டும் அருந்துவது (Social Drinking) அல்லது குறைந்த அளவு ஆல்கஹால் கொண்ட பீர்களை அருந்துவதால் பாதிப்பில்லை என்று கூறுவது முற்றிலும் சுய ஏமாற்று வேலை என்று சாடினார். “உடலுக்குள் செல்லும் முதல் சொட்டு மதுவிலிருந்தே ஆபத்து தொடங்குகிறது. மதுவினால் கல்லீரல் சுருங்கி, ‘சிரோசிஸ்’ (Cirosis of Liver) பாதிப்புக்குள்ளான 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், சென்னையில் 40 லட்சம் ரூபாய் கடன்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குக் காத்திருக்கும் அவலத்தை நான் நேரில் அறிவேன். இதயம் பாதிக்கப்பட்டால் கூட ஒரு லட்சம் ரூபாயில் ஸ்டென்ட் வைத்து 15 ஆண்டுகள் வாழ முடியும். ஆனால், கல்லீரல் செயலிழந்தால் மாற்று உறுப்பு கிடைப்பது குதிரைக் கொம்பு. அப்படியே 50 லட்சம் ரூபாய் செலவழித்து கல்லீரல் மாற்றினாலும், உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறு 25 சதவீதத்திற்கும் குறைவுதான்” என்று புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்.
எனவே, சாமானிய மக்களின் வாழ்வை உறிஞ்சும் மதுப் பழக்கத்தை ஆண்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும், பெண்கள் தங்கள் வாழ்வில் மது அருந்துபவர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் பொதுமக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.













