ஆன்மீக சிறப்பு தொகுப்பு , May 28 : முருகப்பெருமானின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகத் திருநாள், ஆன்மீக உலகில் மிக முக்கிய வழிபாட்டு நாளாகக் கருதப்படுகிறது. முருகனின் எல்லையற்ற அருளைப் பெறவும், வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி நலம் பெறவும் இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். நடப்பு 2026 ஆம் ஆண்டு வைகாசி விசாகத் திருநாள் மே 30 ஆம் தேதி (30.05.2026) சனிக்கிழமை அன்று அமைகிறது. இந்த ஆண்டு பௌர்ணமியும் விசாக நட்சத்திரமும் இணைந்து வரும் சுப வேளையில், முருகப்பெருமானை எவ்வாறு வழிபட வேண்டும், அதற்கான உகந்த நேரங்கள் என்ன என்பது குறித்த விரிவான ஆன்மீகத் தகவல்களை ஆன்மீக சொற்பொழிவாளர் தேசமங்கியற்கரசி பகிர்ந்துள்ளார்.

திதி மற்றும் நட்சத்திர நேரங்கள் : பொதுவாக வைகாசி மாத பௌர்ணமியும் விசாக நட்சத்திரமும் முழு நாளும் இணைந்து வருவது அரிது. சில ஆண்டுகளில் இவை அடுத்தடுத்த நாட்களில் அமையக்கூடும். ஆனால், இந்த ஆண்டு மதியப் பொழுது வரை இரண்டுமே இணைந்து வருவது வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது.
- விசாக நட்சத்திரம்: மே 29 ஆம் தேதி (29.05.2026) வெள்ளிக்கிழமை மதியம் 12:04 மணிக்குத் தொடங்கி, மே 30 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2:18 மணி வரை நீடிக்கிறது.
- பௌர்ணமி திதி: மே 30 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 12:55 மணிக்குத் தொடங்கி, மே 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:45 மணி வரை அமைந்திருக்கிறது.
வழிபாட்டிற்குரிய உகந்த நேரங்கள்
வைகாசி விசாகத்தன்று இல்லங்களிலும் கோவில்களிலும் வழிபாடு செய்வதற்குக் கால அட்டவணைப்படி சில குறிப்பிட்ட சுப நேரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் பணிச் சூழலுக்கு ஏற்ப இந்த நேரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
- காலை நேர வழிபாடு: காலை 06:00 மணி முதல் 07:00 மணி வரை. (அதிகாலையிலேயே வழிபாடு செய்ய விரும்பும் உத்தியோகஸ்தர்கள் காலை 4:00 அல்லது 5:00 மணிக்கும் தாராளமாக பூஜையைத் தொடங்கலாம்).
- முற்பகல் நேர வழிபாடு: காலை 07:35 மணி முதல் 08:45 மணி வரை.
- மதிய நேர வழிபாடு: காலை 10:35 மணி முதல் மதியம் 01:20 மணி வரை.
also read : 108 திவ்ய தேசம் : முதல் திவ்ய தேசம் ஸ்ரீரங்கம்- ரங்கநாதரின் அதிசயங்கள் என்ன?
பால்குட வழிபாடும் அபிஷேக முறைகளும் :
வைகாசி விசாகத் திருநாளில் அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் பால்குடம் எடுத்தல், காவடி சுமத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் முதன்மையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன.
கோவில்களுக்குச் சென்று பால்குடம் எடுக்க இயலாதவர்கள், உள்ளூர் முருகன் கோவில்களுக்குப் பால் வாங்கித் தந்து அபிஷேகத்திற்கு உதவலாம். வெளிநாடுகளிலோ அல்லது முருகன் கோவில் இல்லாத பிற மாநிலங்களிலோ வசிப்பவர்கள், தங்கள் இல்லங்களில் முருகனின் விக்கிரகம் (சிலை) இருந்தால், தங்களின் சொந்தக் கரங்களால் பாலாபிஷேகம் செய்து வழிபடலாம். விக்கிரகம் இல்லாதவர்கள், முருகனின் திருவுருவப் படத்திற்குப் பாலை நெய்வேத்தியமாகப் படைக்கலாம். இந்த நாளில் முருகனுக்குச் செய்யப்படும் பாலாபிஷேகமும் பால் நெய்வேத்தியமும் மிக உயரிய பலன்களைத் தரும் எனக் கூறினார் .
நெய்வேத்தியமும் விரதப் பலன்களும்
விசாகத் திருநாளில் முருகப்பெருமானுக்குப் படைக்கப்படும் நெய்வேத்தியங்கள் எளிமையானவையாகவும் பக்திப் பூர்வமானவையாகவும் இருப்பது அவசியம்.
- நெய்வேத்திய வகைகள்: காய்ச்சிய பாலில் தேன் அல்லது சர்க்கரை கலந்து படைக்கலாம். மேலும் சர்க்கரைப் பொங்கல், பாயசம், தேனும் தினை மாவும் போன்றவற்றைத் தங்களின் வசதிக்கேற்ப நிவேதனம் செய்யலாம்.
- விரதத்தின் பலன்கள்: குழந்தை வரம் வேண்டித் தவமிருக்கும் தம்பதியினர் இந்த நாளில் விரதம் இருப்பது நற்பலனைத் தரும். அதேபோல், தகுந்த வரன் அமைய வேண்டும் என்று விரும்புபவர்களும் வைகாசி விசாக விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். எவ்விதக் கோரிக்கைகளும் இன்றி, உடல் ஆரோக்கியத்திற்காகவும் மன அமைதிக்காகவும்கூட இந்த விரதத்தை மேற்கொண்டு முருகனை வழிபடலாம்.
பதிகங்கள் பாராயணம் மற்றும் ஆன்மீகப் பின்னணி
வைகாசி விசாகம் என்பது கோடைக் காலத்தில் முருகப்பெருமானைக் குளிர்விக்கும் ஒரு வசந்த உற்சவமாக, விடையாற்றியாகக் கொண்டாடப்படுகிறது. இறைவனின் திருமேனியை அபிஷேகங்களால் குளிர்விப்பது போல, பக்தர்களின் தூய அன்பினாலும் கண்ணீரினாலும் அவனது உள்ளத்தைக் குளிர்விக்க வேண்டும்.
“அஞ்சுமுகந் தோன்றில் ஆறுமுகந் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சேல்என வேல் தோன்றும் – நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்”
என்ற நக்கீரரின் வாக்குப்படி, ‘முருகா’ என்று உருகி ஒருமுறை அழைத்தாலே மனதில் உள்ள அனைத்து அச்சங்களும் நீங்கும். வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைப் பேறு போன்ற வாழ்வியல் பயங்களை நீக்க முருகனின் ஆறுமுகங்களை தரிசிப்பதுடன் உறுதிப்பாட்டோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இந்த நாளில் திருப்புகழ், வேல்மாறல், மயில் விருத்தம் மற்றும் முருகப்பெருமானுக்குரிய முக்கிய எட்டுப் பதிகங்களைப் பாராயணம் செய்வது வழிபாட்டிற்கு மேலும் வலிமை சேர்க்கும். வழிபாட்டின் எளிமையை விட அதில் உள்ள பக்தித் தீவிரமே வேண்டுதல்களை விரைந்து நிறைவேற்றும் என்று ஆன்மீகச் சொற்பொழிவாளர் தேசமங்கியற்கரசி பகிர்ந்துள்ளார்.








