நெல்லை , ஜூன் 20 : நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அதிகாலை நேரத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மதுரையிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலக்கருங்குளத்தைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகரப் பகுதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க தனிப்படை போலீசாரும் அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதார்கான், சிறப்பு உதவி ஆய்வாளர் சுடலைகண்ணு மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று (ஜூன் 19) அதிகாலை 5 மணி அளவில் மேலப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை தடுப்பு தொடர்பாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மேலப்பாளையம் குலவணிகர்புரம் பேருந்து நிறுத்தம் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு நீல நிற பிளாஸ்டிக் பை ஒன்றுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த நபர் ஒருவரைக் கண்டனர்.
அதிகாலை நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்றிருந்த அந்த நபரை நோக்கி போலீசார் நெருங்கியபோது போலீசாரைக் கண்டதும் அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை விடாமல் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையின்போது அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் கூறியுள்ளார். முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவரிடம் போலீசார் தங்களது பாணியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் மேலக்கருங்குளம் முத்துராமலிங்கம் தேவர் தெருவைச் சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் வேம்பையா என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் கையில் வைத்திருந்த நீல நிற பிளாஸ்டிக் பையை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்தப் பையினுள் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வேம்பையாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் நடத்திய விரிவான விசாரணையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை குறித்த பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. அவர் மதுரையைச் சேர்ந்த ஒரு மர்ம நபரிடம் இருந்து கஞ்சாவை மொத்தமாக விலைக்கு வாங்கி நெல்லைக்குக் கடத்தி வந்துள்ளார். பின்னர் அந்த கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாகப் பிரித்து, மேலப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தனி நபர்களுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதற்காகத் தன் வசம் வைத்திருந்ததை வேம்பையா ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து வேம்பையாவை முறைப்படி கைது செய்த மேலப்பாளையம் போலீசார் அவரிடமிருந்த 1.100 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா வியாபாரத்திற்கு அவர் பயன்படுத்தி வந்த செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலப்பாளையம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். வேம்பையாவுக்கு கஞ்சா சப்ளை செய்த மதுரையைச் சேர்ந்த மர்ம நபர் யார் இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





