சென்னை , ஜூன் 23: தமிழகத்தில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின்கட்டணம் உயருமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்த நிலையில் தற்போதைய சூழலில் கட்டணம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) நிர்வாகக் கட்டமைப்பு காலியாக இருப்பதும் மின்வாரியம் தரப்பில் இதுவரை புதிய கட்டண உயர்வுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படாததுமே இதற்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.

பொதுவாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளின்படி ஆண்டுதோறும் மின்கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி மின்கட்டண உயர்வு என்பது அதிகபட்சமாக ஆறு சதவீதத்தை தாண்டக் கூடாது அல்லது ஏப்ரல் மாத நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (CPI) அடிப்படையிலான சதவீதம் கணக்கிடப்பட வேண்டும். இந்த இரண்டில் எது குறைவாக இருக்கிறதோ அதன் அடிப்படையிலேயே கட்டண உயர்வு இறுதி செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும். கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் மின்கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. கடந்த 2025ஆம் ஆண்டில் ஏப்ரல் மாத நுகர்வோர் குறியீட்டு எண் 3.16 சதவீதமாக இருந்ததன் காரணமாக அந்த அளவிற்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. எனினும், தேர்தல் கால சூழலில் பொதுமக்கள் மீதான சுமையைக் குறைக்கும் பொருட்டு வீடுகளுக்கான இந்த கூடுதல் கட்டண உயர்வு சுவையை அரசே ஏற்பதாக அறிவித்ததால் பொதுமக்களுக்கு நேரடிப் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
தற்போதைய 2026ஆம் ஆண்டிற்கான ஏப்ரல் மாத நுகர்வோர் குறியீட்டு எண் 3.48 சதவீதமாகக் கணக்கிடப்பட்டிருப்பதாக மின்சார ஒழுங்குமுறை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் ஜூலை முதல் கட்டணம் உயரும் என்ற பேச்சு எழுந்தாலும், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அது தள்ளிப்போகவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக மின்வாரிய மூத்த அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நிர்வாகப் பணியிடங்கள் தற்போது காலியாகவே நீடிக்கின்றன. இதன் காரணமாக மின்கட்டண உயர்வு போன்ற கொள்கை ரீதியிலான முக்கிய முடிவுகளை எடுப்பதில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான கட்டண உயர்வுத் திட்டத்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் இன்னும் முறைப்படி சமர்ப்பிக்கவில்லை. நிர்வாகப் பொறுப்புகள் காலியாக இருப்பதால் ஆணையமும் தாமாக முன்வந்து கட்டணத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
மின்கட்டண மாறுதல்கள் தொடர்பாக பொதுமக்களிடம் ஏற்கனவே மின்சார வாரியம் கருத்துக்களைக் கேட்டறிந்த போதிலும் புதிய கட்டண விகிதங்கள் தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஜூன் மாத இறுதி வார நெருங்கிய நிலையிலும் வெளியாகவில்லை. ஒருவேளை இந்த மாத இறுதிக்குள்ளோ அல்லது வரும் நாட்களிலோ ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் மட்டுமே அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியாவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே மத்திய அரசின் ‘உதய்’ (UDAY) மின் திட்டத்தின் கீழ் போடப்பட்ட ஐந்து ஆண்டுகால ஒப்பந்தம் இந்த ஆண்டோடு நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. இதனால், வரும் 2027 முதல் 2031 வரையிலான அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான மின்கட்டணத்தை மாற்றியமைப்பது மற்றும் திருத்தி அமைப்பது தொடர்பான முதற்கட்ட வரைவறிக்கை (Draft) தயாரிக்கும் பணிகளில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் பட்சத்தில் இந்த ஐந்தாண்டு கால புதிய வரைவுத் திட்டத்தை அவர்கள் எவ்வாறு கையாளுவார்கள் மற்றும் செயல்படுத்துவார்கள் என்ற விவாதமும் மின்வாரிய வட்டாரத்தில் தற்போது எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நிர்வாகப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு புதிய வரைவுத் திட்டம் இறுதி செய்யப்பட சில காலம் எடுக்கும் என்பதால் வரும் ஜூலை 1 முதல் மின் கட்டண உயர்வு இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.





