
சினிமா அப்டேட் : தமிழ் சினிமா மற்றும் தற்போதைய அரசியல் சூழலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘டிஎன் 2026’ (TN 2026) திரைப்படம் ,போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பெரிய அளவிலான விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது .குறிப்பாக ,இத்திரைப்படம் தமிழக அரசியல் களத்தில் இருக்கும் நடிகர் விஜய்யை மறைமுகமாகக் குறிவைத்து எடுக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன .
ஒரு அரசியல் நகைச்சுவை மற்றும் நையாண்டிப் படமாக (Political satire) உருவாகி வரும் ‘டிஎன் 2026’ திரைப்படத்தில் ,பிரபல நடிகர் நட்டி என்ற நடராஜன் சுப்பிரமணியம் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .அவர் சினிமாவில் இருந்து அரசியலுக்குள் நுழையும் ஒரு முக்கியத் தலைவரின் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் .டீசரில் இடம்பெற்றுள்ள நட்டியின் தோற்றம் ,நடை ,உடை மற்றும் உடல்மொழி ஆகியவை நடிகர் விஜய்யை அச்சு அசலாக ஒத்திருப்பதாகக் கூறி ,அவரது ரசிகர்கள் இணையத்தில் தங்களது கண்டனங்களையும் விவாதங்களையும் பதிவு செய்யத் தொடங்கினர் .இதனால் படத்தின் மீதான சர்ச்சை தீவிரமடைந்தது.
இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள படத்தின் இயக்குநர் உமாபதி ராமையா ,எழும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது விளக்கத்தை அளித்துள்ளார் .”இந்தத் திரைப்படம் எந்தவொரு தனி நபரையும் அல்லது குறிப்பிட்ட தலைவரையும் குறிவைத்து எடுக்கப்படவில்லை; இது முற்றிலும் ஒரு அரசியல் பின்னணியைக் கொண்ட ஒரு கற்பனையான சினிமா கதை மட்டுமே” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார் .மேலும் ,”போஸ்டரில் உள்ள ஒரே ஒரு தோற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தப் படத்தையும் ரசிகர்கள் இப்போதே தீர்மானிக்க வேண்டாம் என்றும் ,கதையின் போக்கில் நட்டிக்கு பலதரப்பட்ட கெட்டப்புகள் உள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் ,இத்திரைப்படம் மூலமாக நடிகர் விஜய்க்கு எதிராக திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகிறதா என்ற கேள்விக்கு இயக்குநர் உமாபதி ராமையா அளித்த பதில் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது .”விஜய் ஒரு சிங்கம் போன்றவர் .ஒரு சிங்கத்தை யாராலும் அவ்வளவு எளிதாக அவமதிக்கவோ அல்லது சிறுமைப்படுத்தவோ முடியாது .அவர் எப்போதும் சிங்கமாகவே இருப்பார்” என்று நடிகர் விஜய்க்கு ஆதரவாகத் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் நாயகனாக நடித்துள்ள நடிகர் நட்டியும் இயக்குநரின் இதே கருத்தை வழிமொழிந்துள்ளார் .படம் முழுவதும் சமகால அரசியல் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் நையாண்டிகள் மட்டுமே இடம்பெற்றிருப்பதாகவும் ,எந்தவொரு தனிப்பட்ட நடிகரையோ அல்லது குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ தாங்கள் நேரடியாகக் குறிவைக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார் .





