சிவகங்கை , ஏப்ரல் 10 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாநிலம் தழுவிய தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெறவுள்ள அவரது பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை 37 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. சட்டம்-ஒழுங்கைப் பேணவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் இந்த முன்கூட்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காரைக்குடி மட்டுமின்றி மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் தன் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக விஜய் இந்த முறை தீவிரப் பயணத் திட்டத்தை வகுத்துள்ளார்.
சமீப காலங்களாகப் பெரிய அரசியல் கூட்டங்களில் எதிர்பாராமல் நடக்கும் கூட்ட நெரிசல் விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்களைக் கவனத்தில் கொண்டு, இந்த முறை காவல்துறை கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, காரைக்குடி பொதுக்கூட்டத் திடலில் லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரள்வார்கள் என்பதால் மைதானத்தைச் சுற்றி வலுவான தடுப்புகள் (barricades) அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மின் கம்பங்கள், உயரமான கட்டிடங்கள், பலவீனமான சுவர்கள் மற்றும் ஆபத்தான வடிகால் அமைப்புகள் உள்ள இடங்களுக்குப் பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு முழுமையாகப் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட உள்ளது.
ALso Read : தேர்தல் பரபரப்பு: சிவகங்கையில் விஜய்யின் வாகனத்தில் அதிரடி சோதனை… அதிகாரிகள் கண்டது என்ன?
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், மைதானத்திற்குள் மக்கள் எளிதாக வந்து செல்லவும் தனித்தனிப் பாதைகளை உருவாக்கத் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிக்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் நேரடியாகக் களமிறக்கப்பட உள்ளனர். மேலும், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பாதைகளில் தற்காலிகப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. பிரச்சார வாகனங்கள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வரும் தொண்டர்களின் வாகனங்கள் குறிப்பிட்ட பாதைகள் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





