
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பமாக, தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போதைய ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு துருவ அரசியலையும் உலுக்கிப் போட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் TVKதலைவர் விஜய் தாம் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்று, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
சென்னையின் முக்கியப் பகுதியான பெரம்பூர் தொகுதியில் ஏற்கனவே தனது வெற்றியைப் பதிவு செய்திருந்த விஜய், தற்போது மத்திய தமிழகத்தின் மையப்புள்ளியான திருச்சி கிழக்கு தொகுதியிலும் களம் கண்டு அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளார். திருச்சி கிழக்கில் பதிவான வாக்குகளில் விஜய் 88,305 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் முக்கிய முகமான இனிகோ இருதயராஜ் 61,464 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் 26,841 வாக்குகள் என்ற கணிசமான வித்தியாசத்தில் விஜய் தனது இரட்டை வெற்றியை உறுதி செய்துள்ளார். ஆரம்பத்தில் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டபோது, அது அரசியல் முதிர்ச்சியற்ற முடிவு என்று விமர்சித்த பல அரசியல் விமர்சகர்களின் கணிப்புகளை தவிடுபொடியாக்கி, இந்த நகர்வு தற்போது மாபெரும் வெற்றியாக மாறியுள்ளது.
தலைவரின் இந்த இரட்டை வெற்றி ஒருபுறமிருக்க, ஒட்டுமொத்த தேர்தல் களத்திலும் தமிழக வெற்றிக் கழகம் தற்போதைய நிலவரப்படி 108 இடங்களில் முன்னிலை பெற்று, ஆட்சி அமைப்பதற்கான மேஜிக் நம்பரான 118-ஐ நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. மறுபுறம், ஆளுங்கட்சியான திமுக 74 இடங்களில் மட்டுமே முன்னிலையில் நீடித்து வருகிறது.
இழுபறியில் பல தொகுதிகள்:இந்தத் தேர்தலின் சுவாரசியமே, பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருப்பதும், ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் முன்னிலை நிலவரம் மாறிக்கொண்டே இருப்பதும்தான். 500 முதல் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் பல இடங்களில் கடும் போட்டி நிலவுகிறது.
குறிப்பாக, திண்டிவனம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வன்னியரசு, அதிமுக வேட்பாளர் அர்ஜுனனை விட வெறும் 349 வாக்குகள் மட்டுமே முன்னிலை பெற்று தத்தளித்துக் கொண்டிருக்கிறார். இதேபோல், வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அங்கு திமுக வேட்பாளர் சீனிவாசன் 326 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போதைக்கு முன்னிலையில் உள்ளார். இந்தத் தொகுதிகளில் இறுதிப் பட்டியல் வெளியாகும் வரை முடிவை கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
மதுரையில் முக்கிய அமைச்சர்கள் அதிர்ச்சி தோல்வி
இந்தத் தேர்தல் முடிவுகளின் ஆகப்பெரும் அதிர்ச்சித் தரவுகள் தென் தமிழகத்தின் அரசியல் தலைநகரமான மதுரையிலிருந்துதான் வெளியாகியுள்ளன. திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட மதுரையில், அக்கட்சியின் மிக முக்கிய முகங்களான அமைச்சர்கள் இருவர் மண்ணைக் கவ்வியுள்ளனர்.
மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய அமைச்சர் மூர்த்தி, TVKவேட்பாளர் கார்த்திகேயனிடம் மிக மோசமான தோல்வியைத் தழுவினார். TVK-கார்த்திகேயன் 1,87,779 வாக்குகள் பெற்று இமாலய வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் உற்றுநோக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 44,286 வாக்குகள் மட்டுமே பெற்று அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட TVKவேட்பாளர் 63,410 வாக்குகள் பெற்று வெற்றிப் வாகை சூடியுள்ளார். இதே தொகுதியில் களம் கண்ட அதிமுக வேட்பாளர் சுந்தர்சியும் தோல்வியைத் தழுவினார்.
மதுரையின் பிற பகுதிகளான திருமங்கலம் உள்ளிட்ட தொகுதிகளிலும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு ஆகியோர் பின்னடைவைச் சந்தித்து தோல்வியடைந்துள்ளனர். மதுரையில் திராவிடக் கட்சிகளின் இந்த ஒட்டுமொத்த வீழ்ச்சியும், TVK எழுச்சியும் தமிழகத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றி அமைக்கும் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் அலை வீசுவது மட்டும் தற்போதைய நிலவரங்களின்படி தெளிவாக தெரிகிறது .









