கோவில்பட்டி , ஜூன் 18 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட கோர விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மற்றும் அவரது ஒன்பது வயது மகள் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஆசிரியையின் கணவர் தீவிர சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முக சிகாமணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (44). இவருடைய மனைவி வளர்மதி (37). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர்களது ஒன்பது வயது மகள் அஷ்விகா அதே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
வழக்கம் போல் இன்று மாலை பள்ளி வேலை நேரம் முடிந்ததும் ரமேஷ் தனது மனைவி வளர்மதி மற்றும் மகள் அஷ்விகா ஆகிய இருவரையும் பள்ளியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டுள்ளார். இவர்களது வாகனம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த அரசு பேருந்து இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த பேருந்து கோவில்பட்டியிலிருந்து முடுக்கலான்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
அரசு பேருந்து மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் துரதிர்ஷ்டவசமாக வளர்மதி மற்றும் அவரது மகள் அஷ்விகா ஆகிய இருவர் மீதும் அரசு பேருந்தின் சக்கரங்கள் ஏறியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த ரமேஷை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






