மதுரை , ஜூன் 18 : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் மதுரை, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளரும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், தற்போதைய அரசின் அறிவிப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு மற்றும் அதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
Also Read : கோவில்பட்டி அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை, மகள் பலி
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது எங்களது கால் நூற்றாண்டு காலப் போராட்டமாகும். கடந்த அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருந்த போதிலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை முறைப்படி நடைமுறைப்படுத்துவதற்கான வரைவுக் குழுவை அமைக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். எங்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவுக் குழுவை தற்போதைய தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்காகத் தமிழக அரசுக்கு எங்களது மனமார்ந்த நன்றியையும், வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
அதே நேரத்தில் தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முழுமையான பென்சன் திட்டம் தங்கு தடையின்றி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்ததை நினைவு கூர்ந்த அவர் அந்த தேர்தல் வாக்குறுதியை எவ்வித சுணக்கமும் இன்றி முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையைத் தற்போதைய முதலமைச்சரிடம் வைப்பதாகக் குறிப்பிட்டார்.
அரசு அமைத்துள்ள வரைவுக் குழுவின் அறிவிப்பில் உள்ள சில முக்கிய குறைபாடுகள் தங்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக இரா.தாஸ் தெரிவித்தார். “தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவுக் குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஓய்வூதியப் பலன்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் இறுதி முன்பணமும் (Final Advance), பணிக்கொடையும் (Gratuity) இடம் பெறாமல் விடுபட்டிருப்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் இது ஒரு இடைக்கால நிலைப்பாடாகவோ அல்லது தற்காலிகப் படிவமாகவோ அரசுத் தரப்பில் கருதப்பட்டாலும் இதில் உள்ள குறைபாடுகளை முழுமையாகக் களைந்து இறுதி முன்பணமும் பணிக்கொடையும் உள்ளடங்கிய ஒரு முழுமையான திட்டமாக இதனை மாற்றித் தர வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரை நாங்கள் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் நீடித்து வரும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினை குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது. “ஆசிரியர்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையான இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை அரசு உடனடியாகக் களைய வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம வேலைக்குச் சம ஊதியம் என்ற அடிப்படையில் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்ற எங்களது பிரதான கோரிக்கையையும் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம்” என்று அவர் கூறினார்.
பள்ளிக் கல்வித்துறையில் உள்ள பிற கோரிக்கைகள் குறித்துப் பேசிய அவர், அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து ஆசிரியர்களின் பல்வேறு பணி சார்ந்த கோரிக்கைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான சிக்கல்கள் குறித்துப் மனு அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார். ஜாக்டோ-ஜியோ மற்றும் ஆசிரியர் கூட்டணிகள் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ள இந்த நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசும், பள்ளிக் கல்வித்துறையும் கனிவோடு பரிசீலித்து விரைவில் நல்லதொரு முடிவை அறிவிக்கும் என்று தாங்கள் முழுமையாக நம்புவதாகவும் இரா.தாஸ் தனது பேட்டியில் தெரிவித்தார்.







