நெல்லை , ஜூன் 14 : நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனையில் ,செவிலியராகப் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஒருவர் தங்கியிருந்த அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி ,அவரது பெற்றோரும் உறவினர்களும் மருத்துவமனை முன்பாகத் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நெல்லை சந்திப்பு பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள ஊர்மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்த சண்முகப்பிரியா (20) என்ற பெண் ,நெல்லை சந்திப்பில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இதற்காக அவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தங்கும் விடுதி அறையிலேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ,நேற்று சண்முகப்பிரியா தான் தங்கியிருந்த அறையில் திடீரென தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு காவல் நிலைய போலீசார் ,உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்முகப்பிரியாவின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் அவரது உடல் உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து ,இந்த மரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலையில் வைகாசி அமாவாசை: அண்ணாமலையாருக்கு பிரம்மாண்ட அபிஷேகம்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சண்முகப்பிரியாவின் தற்கொலைக்கான காரணம் குறித்துப் பல முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சண்முகப்பிரியாவும் ,தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் பள்ளிப் பருவம் முதற்கொண்டே ஒன்றாகப் படித்து வளர்ந்தவர்கள் ஆவர். பள்ளிப் படிப்பு முடிவடைந்த பின்னரும் ,அவர்கள் இருவரும் இந்த நெல்லை தனியார் கண் மருத்துவமனையிலேயே ஒன்றாகச் சேர்ந்து செவிலியராகப் பணிபுரிந்து வந்துள்ளனர். தோழிகளான இருவரும் விடுதி அறையிலும் மிகவும் நெருக்கமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ,கடந்த சில நாட்களாக சண்முகப்பிரியாவிடம் அந்தத் தோழி சரியாகப் பேசாமல் தவிர்த்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் கடந்த சில தினங்களாகவே சண்முகப்பிரியா கடுமையான மன வருத்தத்தில் இருந்துள்ளார். “நீ என்னிடம் பேசவில்லை என்றால் நான் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்று சண்முகப்பிரியா தனது தோழியிடம் அடிக்கடி கூறி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சண்முகப்பிரியாவின் இந்த மாறுபட்ட மனநிலை மற்றும் மன உளைச்சல் குறித்து ,கடந்த ஜூன் 1-ஆம் தேதியே மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சக தோழிகள் தரப்பிலிருந்து அவரது பெற்றோருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ,சண்முகப்பிரியா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாகத் தனது தோழியை நோக்கிக் கையால் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் ,”நான் உன்னை என் உயிராக மதித்தேன். நீ என்னிடம் பேச வேண்டும் என்பதற்காகவே எப்போதும் காத்திருந்தேன். ஆனால் நீ என்னிடம் பேசவே இல்லை. என் மீது உனக்கு பாசம் இல்லை என்பது புரிந்துவிட்டது. அதனால் நான் உன் மீது சத்தியம் செய்து இந்த முடிவை எடுக்கிறேன். எனக்காக ஒரு சொட்டு கண்ணீராவது விடு” என்று சண்முகப்பிரியா தனது தோழிக்கு மிக உருக்கமாக எழுதி வைத்துள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ,இன்று காலை சண்முகப்பிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ,அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையப் பகுதியில் திடீரெனத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது பற்றித் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ,அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ,தற்போதைய விசாரணை நிலவரங்களை எடுத்துக்கூறி அவர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.
இருப்பினும் சமாதானமடையாத சண்முகப்பிரியாவின் பெற்றோரும் உறவினர்களும் ,நெல்லை சந்திப்பில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று முற்றுகையிட்டனர். தங்களது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி மருத்துவமனை நுழைவாயில் முன்பாக அமர்ந்து அவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களும் நோயாளிகளும் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தொடர்ந்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதோடு ,இந்த தற்கொலைச் சம்பவம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.








