மகளிர் இலவச பேருந்து திட்டம்: முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை

சென்னை , ஜூன் 17: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மகளிரும் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது மற்றும் போக்குவரத்துத் துறையின் எதிர்கால தொலைநோக்குத் திட்டங்கள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கிய அம்சமாக அறிவிக்கப்பட்ட இந்த மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தை ,எவ்வித சுணக்கமும் இன்றி முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் சுமுகமாகச் செயல்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

Chief Minister Vijay chairs high-level review meeting on Tamil Nadu's free bus travel scheme for women to assess implementation, service quality, and future improvements.

போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் ,தமிழகத்தில் தற்போதிருக்கும் போக்குவரத்து கட்டமைப்பு குறித்து முதலமைச்சரிடம் விரிவான புள்ளிவிவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதன்படி ,தமிழகத்தில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் 8 அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக மொத்தம் 21,527 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 2.05 கோடி பயணிகள் தங்களின் அன்றாடப் பயணங்களை மேற்கொள்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக ,தற்போது பயணிக்கும் மொத்த பயணிகளில் 64 சதவீத மக்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏற்கனவே கட்டணமில்லா சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ,தமிழகத்தில் 1,000 நபர்களுக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமப்புறப் பகுதிகளில் 98.40 சதவீதம் என்ற அளவில் அரசு பேருந்து சேவை மிகச்சிறப்பாக எட்டியுள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பில் முதலமைச்சரிடம் விளக்கப்பட்டது.

also : தூத்துக்குடி தொழில் புரட்சி தொடக்கம்! ரூ.38,000 கோடி முதலீடு – 15,000 நேரடி வேலைவாய்ப்பு !  அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட சூப்பர் அப்டேட்

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தால் இரும்புக்கரம்: நெல்லை எஸ்.பி. எச்சரிக்கை

போக்குவரத்துக் கழகங்களை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஓராண்டு ,மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு கால அடிப்படையிலான நீண்டகாலச் செயல்திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் விரிவாக ஆலோசனை நடத்தினார். 8 போக்குவரத்துக் கழகங்கள் ,சாலை போக்குவரத்து நிறுவனம் ,தமிழ்நாடு பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு இயக்குநரகம் ஆகியவற்றின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

பொதுமக்களின் பயண அனுபவத்தை எளிதாக்கும் வகையில் ,நவீன தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கு இக்கூட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பயணிகளின் நலனுக்காகப் புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கி ,அதன் மூலம் பேருந்துகளின் புறப்பாடு ,வருகை நேரம் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் போன்றவற்றை ஜிபிஎஸ் (GPS) கருவி மூலம் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை முக்கிய பேருந்து நிலையங்களில் அமைக்கவும் ,அதனை 8 போக்குவரத்து கழகங்களின் தலைமையகக் கட்டுப்பாட்டு மையங்களுடனும் ,சென்னையில் அமையவிருக்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துடனும் இணைத்துக் கண்காணிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ,இனிவரும் காலங்களில் போக்குவரத்துக் கழகங்களால் புதிதாகக் கொள்முதல் செய்யப்படும் பேருந்துகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளாக (AC Electric Buses) இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தினார். பயணிகள் சில்லறைத் தட்டுப்பாடின்றி ,பணமில்லா பரிவர்த்தனை மூலம் எளிதாகப் பயணிக்கும் வகையில் ‘ஸ்மார்ட் கார்டு’ (Smart Card) முறையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் ,நகர்ப்புறப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு பேருந்துகளுக்கு என்று தனியாகப் பிரத்யேக வழித்தடங்களை அமைக்கும் ‘பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம்’ (Bus Rapid Transit System) திட்டத்தை அடுத்தகட்டத்திற்குத் துரிதமாகக் கொண்டு செல்வதற்கான மேல் நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இவற்றுடன் ,போக்குவரத்துத் துறையின் முதுகெலும்பாகத் திகழும் போக்குவரத்து தொழிலாளர்களின் நலன்கள் ,அவர்களின் கோரிக்கைகள் மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தகுந்த தீர்வு காண்பது குறித்தும் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் முதலமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார் ,நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மு.அ. சித்திக் ,போக்குவரத்துத் துறை செயலாளர் முனைவர் மா. வள்ளலார் ,போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர் இரா. லில்லி ,மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மரு. த. பிரபுசங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். தேர்தல் வாக்குறுதியைச் செயல்படுத்துவதற்கான முறையான திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதல்களை இறுதி செய்யும் நோக்கில் இந்த ஆலோசனை நடைபெற்றிருப்பதால் ,விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »