மேகதாது அணை சர்ச்சை: தமிழகத்திற்கு காவிரி நீர் ஏன் உயிர்நாடி? கர்நாடகா பிடிவாதம் என்ன?

கர்நாடகா , ஜூன் 14 : மேகதாது அணை விவகாரம் காவிரி நதிநீர் பகிர்வில் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் ஒரு நீண்ட கால அரசியல் மற்றும் நீர்வளப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழக முதலமைச்சர் ,பிரதமரைச் சந்தித்துப் பல்வேறு மாநிலக் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் ,அதில் மேகதாது அணை குறித்த நேரடிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை. ஆனால் ,அதே சமயம் கர்நாடக முதலமைச்சர் பிரதமர் ,மத்திய நிதியமைச்சர் மற்றும் ஜல்சக்தி துறை அமைச்சர் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்து மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றுவதற்கான தங்களின் அழுத்தமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இந்த இருவேறு அணுகுமுறைகள் காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே நிலவும் தற்போதைய அரசியல் சூழலை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

Mekedatu Dam Dispute Explained: Why Cauvery Water Is Tamil Nadu's Lifeline and Why Karnataka Remains Firm

தமிழகத்தின் ஒட்டுமொத்த நீர்த்தேவையில் சுமார் 35 முதல் 40 சதவீதம் வரையிலான தேவையை காவிரி நதி ஒன்று மட்டுமே பூர்த்தி செய்கிறது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தலைக்காவிரி என்ற இடத்தில் உற்பத்தியாகும் இந்த நதி ,சுமார் 750 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதில் கர்நாடகாவில் 320 கிலோமீட்டரும் ,தமிழகத்தில் 416 கிலோமீட்டரும் பாய்ந்து ,இறுதியில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் வழியாக வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. காவிரி நதியில் ஆண்டுக்குச் சராசரியாக 740 முதல் 800 டிஎம்சி வரை தண்ணீர் பாய்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பகிர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின்படி ,கர்நாடகா 270 டிஎம்சி தண்ணீரைத் தன் தேவைக்கென எடுத்துக் கொண்டு ,எஞ்சிய தண்ணீரில் 177.25 டிஎம்சி தண்ணீரை பிலிக்குண்டலு சோதனைச் சாவடி வழியாகத் தமிழகத்திற்குத் திறந்து விட வேண்டும். மேலும் ,அண்டை மாநிலங்களான கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும் ,தமிழக எல்லையிலிருந்து புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பது சட்டபூர்வ விதியாகும்.

Also read: சீனாவிற்கு இணையாகப் பட்டாசு ஏற்றுமதி: சிவகாசிக்கான புதிய பாலிசி குறித்து அமைச்சர் கீர்த்தனா தகவல்

இருப்பினும் இந்த நீரின் அளவு ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்தே மாறுபடுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திறந்து விடப்படும் காவிரி நீரின் மூலம்தான் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் நேரடிப் பாசன வசதியைப் பெறுகின்றன. சுருக்கமாகக் கூறின் தமிழகத்தில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்களின் அன்றாடக் குடிநீர் மற்றும் வாழ்வாதாரத் தேவை காவிரியை மட்டுமே நம்பியுள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவிரியின் குறுக்கே ஏற்கனவே மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையும் ,மைசூர் மாவட்டத்தில் கபினி அணையும் உள்ள நிலையில் ,தற்போது மேகதாது பகுதியில் மற்றுமொரு பிரம்மாண்ட அணையைத் திட்டமிடுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தமிழக எல்லையிலிருந்து வெறும் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராமநகரா மாவட்டத்தில் அமைந்துள்ள மேகதாது என்ற இடத்தையே கர்நாடகம் தன் புதிய அணைத் திட்டத்திற்குத் தேர்வு செய்துள்ளது. ‘மேகதாது’ என்றால் தமிழில் ‘ஆடு தாண்டுதல்’ என்று பொருளாகும். பரந்து விரிந்து பாயும் காவிரி நதியானது ,இப்பகுதிக்கு வரும்போது மிகவும் குறுகிய மற்றும் ஆழமான பாறை இடுக்குகளின் வழியே குறைந்த வேகத்தில் பாய்கிறது. ஆடுகள் எளிதாகத் தாண்டிவிடக் கூடிய அளவில் குறுகிய பாதையைக் கொண்டிருப்பதால் இப்பெயர் பெற்றது. இந்தத் தனித்துவமான புவியியல் அமைப்பின் காரணமாக ,ஆற்றின் வேகத்தை மிக எளிதாகக் கட்டுப்படுத்தி அணையை எழுப்ப முடியும் என்பதால் கர்நாடக அரசு இவ்விடத்தைத் தேர்வு செய்துள்ளது. சுமார் 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்த அணையின் மூலம் 67 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அணை பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக நகரங்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாயத்திற்காகக் கட்டப்படுவதாக அம்மாநில அரசு தரப்பில் கூறப்பட்டாலும் ,பாசனப் பரப்பளவை ஒப்பிடுகையில் அங்கு விளைநிலங்களின் அளவு தமிழகத்தை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சராசரியாக 29 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் காவிரியால் பாசன வசதி பெறும் நிலையில் ,கர்நாடகாவில் அதன் பாதியளவாக 14 லட்சம் ஏக்கர் மட்டுமே விளைநிலங்கள் உள்ளன. இத்தகைய புள்ளிவிவரச் சூழலிலும் ,தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வரும் வேளையில் ,மேகதாதுவில் புதிய அணை அமைந்தால் அது தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாய உரிமையையும் டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்தையும் மிகக் கடுமையாக அச்சுறுத்தும் என்ற கவலை தமிழகத் தரப்பில் எழுந்துள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1371

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »