நெல்லை அருகே அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதை தம்பி கண்டித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அக்கா அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சுத்தமல்லி போலீசார், தலைமறைவாக இருந்த தம்பியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அடுத்த மேல கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து பராமரித்து வருகிறார். இவருக்கு கண்ணகி என்ற மனைவியும், ராமலட்சுமி (23) என்ற மகளும், ராகுல் (22), முத்துகிருஷ்ணன் (21) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இவர்களில் ராமலட்சுமி கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் சோலார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மூத்த மகன் ராகுல் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றிலும், இளைய மகன் முத்துகிருஷ்ணன் நாங்குநேரியில் உள்ள ஒரு உணவகத்திலும் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
Also : கவின் ஆணவக்கொலை வழக்கு: தாய் கிருஷ்ணகுமாரியின் ஜாமீன் மனு ஜூன் 12-க்கு ஒத்திவைப்பு
நெல்லை: வழித்தடம் மாறிய 11 மினி பேருந்துகள் பறிமுதல் – ஆர்.டி.ஓ நடவடிக்கை
நேற்று இரவு ஆறுமுகமும் அவரது மனைவி கண்ணகியும் வீட்டின் பின்புறம் உள்ள தொழுவத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வீட்டில் இருந்த ராமலட்சுமி நீண்ட நேரமாக செல்போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அவரது தம்பி முத்துகிருஷ்ணன் நள்ளிரவு நேரத்தில் தொடர்ந்து செல்போன் பார்ப்பதை நிறுத்துமாறு அக்காவைக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வார்த்தை முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முத்துகிருஷ்ணன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து, எதிர்பாராத விதமாக தனது அக்கா ராமலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராமலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு தொழுவத்தில் இருந்த பெற்றோர்கள் ஓடிவந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுத்தமல்லி போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராமலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ராமலட்சுமி மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து ராமலட்சுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரக் கொலை சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய முத்துகிருஷ்ணனை உடனடியாகக் கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில், ராமலட்சுமி அடிக்கடி செல்போன் பார்ப்பதை அவரது தம்பி கண்டித்ததும், அதனால் ஏற்பட்ட வாய் தகராறு எல்லை மீறி கொலையில் முடிந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








