நெல்லை , ஜூன் 15 : நெல்லை சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அரவிந்த் கண் மருத்துவமனை நர்சிங் கல்லூரியில் , கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் , கடந்த மாதம் இதே கல்லூரியில் படித்து வந்த தங்களது மகனும் இதேபோல் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறி , அதற்கு உரிய நீதி வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட பெற்றோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த ஆரோக்கியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி அன்னசெல்வி. இந்த தம்பதியினரின் 19 வயது மகன் மோசஸ் சாம் நெல்சன் , நெல்லை சந்திப்பில் அமைந்துள்ள அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்து வந்துள்ளார். இந்த ஆண்டு மே மாதத்துடன் அவரது படிப்பு நிறைவடைந்த நிலையில் , நடப்பு ஜூன் மாதம் முதல் பணியில் சேருவதற்காக அவர் காத்திருந்துள்ளார்.
நெல்லை தனியார் கண் மருத்துவமனை செவிலியர் தற்கொலை: உறவினர்கள் போராட்டம்
இப்படியான சூழலில் , கடந்த மே மாதம் 24ஆம் தேதி இரவன்று அவர் தங்கியிருந்த கல்லூரி விடுதியில் விஷ மருந்து அருந்தியதாகக் கூறி அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை ரமேஷ் , உடனடியாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து வந்துள்ளார். ஆனால் , அங்கு வந்த பின்னரே தனது மகன் ஏற்கனவே இறந்துவிட்ட செய்தி அவருக்குத் தெரியவந்துள்ளது. மேலும் , மாணவர் மோசஸ் சாம் நெல்சன் கல்லூரி விடுதியிலேயே தற்கொலை செய்துகொண்டதாக மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது மகன் உயிரிழப்பதற்கு எந்தவொரு முகாந்திரமும் காரணமும் இல்லை என்பதால் , அவனது மரணத்தில் உள்ள மர்மம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி , தந்தை ரமேஷ் மற்றும் தாய் அன்னசெல்வி ஆகியோர் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்துக் கண்ணீர்மல்க மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவனின் பெற்றோர் , கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் இதே அரவிந்த் கண் மருத்துவமனையில் சண்முகப்பிரியா என்ற நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியானதைச் சுட்டிக்காட்டினர்.
தொடர்ந்து பேசிய அவர்கள் , கடந்த மே மாதம் 24ஆம் தேதி தங்களது மகனும் இதேபோன்றுதான் மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாகத் தங்களுக்குத் தகவல் சொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டனர். ஆனால் , அதன் பின்னர் தாங்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது , அவன் தூக்கு மாட்டி இறந்துவிட்டதாக மாற்றிப் பேசினர் என்று குற்றம்சாட்டினர்.
நிர்வாகத் தரப்பின் முன்னுக்குப் பின் முரணான இந்தத் தகவல்களால் தங்களது மகனின் இறப்பில் கடுமையான மர்மம் நீடிப்பதாகப் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே , அடுத்தடுத்து நடக்கும் இந்த மாணவர்களின் மரணங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி , தங்களது மகனின் மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கண்ணீருடன் வலியுறுத்தியுள்ளனர். ஒரே நர்சிங் கல்லூரியில் அடுத்தடுத்த மாதங்களில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் விவகாரம் தற்போது மாவட்டத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.








