தூத்துக்குடி , ஜூலை 1 : தொடர் மதுபோதையால் பெற்றோரையும் குடும்பத்தினரையும் சித்திரவதை செய்து வந்த மகனை நள்ளிரவில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது தந்தை மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையைச் செய்த தந்தை காவல் நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்தார்.

தூத்துக்குடி மடத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் தாளமுத்து. இவருக்கு ஒரு மகளும் அருள்ராஜ் (வயது 27) என்ற மகனும் இருந்தனர். மகளுக்குத் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வரும் நிலையில் தாளமுத்து தனது மனைவி மற்றும் மகன் அருள்ராஜுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த அருள்ராஜ் வேலைக்குச் சரியாகச் செல்லாமல் ஊதாரியாகச் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது.
மதுப் பழக்கத்திற்கு முற்றிலும் அடிமையான அருள்ராஜ் தினமும் அதிகளவில் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் உள்ள பெற்றோரிடம் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். வீட்டில் மட்டுமல்லாது தான் வசிக்கும் பகுதி மக்களிடமும் அடிக்கடி போதையில் வம்புக்குச் சென்று வந்துள்ளார். போதை தலைக்கேறும்போது தனது தந்தை தாளமுத்து மற்றும் தாயை மிகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்துவதையும் அவர் தொடர்ச்சியாகச் செய்து வந்துள்ளார்.
Also: குற்றாலத்தை மிஞ்சும் குண்டாறு அணை! படகு சவாரிக்காக கேரளாவிலிருந்தும் குவியும் மக்கள்
அருள்ராஜின் இந்த மதுப் பழக்கத்தை மாற்றுவதற்காகக் குடும்பத்தினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர். கடந்த 2021ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அருள்ராஜ் சேர்க்கப்பட்டார். அங்கு சுமார் மூன்று மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சையும் பெற்றார். ஆனால் மறுவாழ்வு மையத்தில் இருந்து வெளியே வந்த சில நாட்களிலேயே அவர் மீண்டும் பழையபடி மது அருந்தத் தொடங்கினார். நாளுக்கு நாள் அவரது அத்துமீறல்கள் எல்லை கடந்து சென்றன.
அண்மையில் விடுமுறைக்காகத் தனது தாய் வீட்டிற்கு வந்திருந்த அருள்ராஜின் தங்கையையும், அவரது குழந்தையையும் கொலை செய்துவிடுவதாக போதை மயக்கத்தில் அருள்ராஜ் மிரட்டியுள்ளார். பெற்ற பிள்ளையின் இந்த விபரீதப் போக்கால் தாளமுத்துவின் குடும்பம் கடுமையான நிம்மதியிழப்புக்கும் அச்சத்துக்கும் ஆளானது.
இந்தச் சூழ்நிலையில் நேற்று இரவும் வழக்கம் போல மிகக் கடுமையான போதையில் அருள்ராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். வந்த உடனே தந்தை தாளமுத்துவிடமும், தாயிடமும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டார். அருள்ராஜின் அத்துமீறல் பொறுக்க முடியாத அளவுக்குச் சென்றதால் ஆத்திரமடைந்த தந்தை தாளமுத்து, அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு உறங்கச் சென்றார். இதனால் வீட்டின் முன் பக்கமுள்ள திண்ணைப் பகுதியில் போதை மயக்கத்திலேயே அருள்ராஜ் படுத்துத் தூங்கிவிட்டார்.
அதிகாலை வேளையில் எழுந்த தாளமுத்து, தினமும் போதையால் ஏற்படும் குடும்ப அவமானங்களுக்கும், உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கத் துணிந்தார். வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்துக்கொண்டு வெளியே வந்த அவர், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகன் அருள்ராஜின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்தார்.
உடலில் தீப்பற்றி எரிந்ததும் அருள்ராஜ் அலறியடித்தபடி துடித்தார். அதிகாலை நேரம் என்பதால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அருள்ராஜ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மகன் இறந்ததை உறுதி செய்த தாளமுத்து, அங்கிருந்து நேராக தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்குச் சென்று, தன் மகனைக் கொலை செய்த விபரத்தைக் கூறி சரணடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் காவல் துறையினர் அருள்ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சரணடைந்த தாளமுத்துவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறில் பெற்ற மகனைத் தந்தையே தீவைத்து எரித்துக் கொன்ற சம்பவம் மடத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





