
Tamilnadu , May 12 : VLTD சாதனம் கட்டாயம் காரணமாக தமிழகத்தின் 1.10 லட்சம் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களின் Permit Renewal முடங்கியது. பல மாநிலங்களில் வாகனங்கள் சிக்கியுள்ளன.
தமிழகத்தில் லாரி மற்றும் கனரக வாகன உரிமையாளர்களை கடுமையாக பாதிக்கும் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. இந்தியா முழுவதும் செல்லும் தமிழக பதிவு பெற்ற லாரிகள் மற்றும் கனரக வாகனங்களின் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் Permit Renewal சேவை திடீரென முடக்கப்பட்டதால், தற்போது 1 லட்சத்து 10 ஆயிரத்து 504 வாகனங்கள் பல மாநிலங்களில் சிக்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தற்போது தமிழக போக்குவரத்து துறையிலும், லாரி உரிமையாளர்கள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக VLTD எனப்படும் Vehicle Location Tracking Device பொருத்தப்படாத வாகனங்களுக்கு Permit Renewal வழங்க முடியாது என்ற நிலைப்பாடு கடுமையான சர்ச்சையை கிளப்பியுள்ளது.
VLTD சாதனம் என்ன.. ஏன் கட்டாயமாக்கப்பட்டது?
டெல்லியில் நடந்த நிர்பயா வழக்கிற்கு பின்னர், பெண்கள் பாதுகாப்பு மற்றும் வாகன கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் செல்லும் வணிக வாகனங்களில் Vehicle Location Tracking Device பொருத்துவது கட்டாயம் என மத்திய அரசு 2019ஆம் ஆண்டு அறிவித்தது.
இதன்படி, இந்தியா முழுவதும் இயக்கப்படும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களில் GPS அடிப்படையிலான கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த சாதனம் பொருத்தப்பட்டாலே ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் All India Permit Renewal வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் தமிழகத்தில் இந்த சாதனத்தை பொருத்தும் நடைமுறையில் பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
தமிழகத்தில் VLTD சாதன விலை அதிகம் என்ற குற்றச்சாட்டு
தமிழக லாரி உரிமையாளர்கள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் கூறுவதாவது, அருகிலுள்ள கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் VLTD சாதனங்கள் ரூ.7,500 முதல் ரூ.9,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் மட்டும் அதே சாதனம் ரூ.18,000 வரை விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், முழு தொகைக்கு முறையான பில் வழங்கப்படவில்லை என்றும், ரூ.9,000க்கு மட்டும் பில் தருவதாக சில நிறுவனங்கள் கூறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மத்திய அரசு அனுமதி அளித்த நிறுவனங்களை தவிர்த்து, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள 37 நிறுவனங்களின் சாதனங்களையே பொருத்த வேண்டும் என்ற கட்டுப்பாடும் லாரி உரிமையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல லாரி உரிமையாளர்கள் VLTD சாதனங்களை பொருத்த தயக்கம் காட்டி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Permit Renewal இணையதளம் திடீர் முடக்கம்
இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி மதியம் 12 மணி முதல் தமிழகத்தில் இருந்து இந்தியா முழுவதும் செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான Permit Renewal சேவை தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உரிமம் புதுப்பிக்கும் இணையதளம் தற்போது செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும், VLTD சாதனம் பொருத்தப்படாத வாகனங்களுக்கு புதுப்பிப்பு வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1,100 கட்டணத்தை செலுத்திய பின்னரும், VLTD சாதன கட்டணமாக ரூ.16,500 வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து பொருட்களை ஏற்றி வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நூற்றுக்கணக்கான லாரிகள் தற்போது இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், ஏற்கனவே வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ள தமிழக வாகனங்களும் மீண்டும் தமிழகத்திற்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
E-வாகன் சேவை அமைப்பின் அதிர்ச்சி குற்றச்சாட்டு
இந்த விவகாரம் குறித்து E-வாகன் சேவை அமைப்பின் தலைவர் கணேஸ்குமார், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பல முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் Permit Renewal இணையதளம் முடக்கப்பட்டிருப்பது லாரி உரிமையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் VLTD சாதனங்களின் விலை இருமடங்கு அதிகமாக இருப்பதாகவும், முறையான பில் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். கடந்த ஆட்சியிலேயே பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முன்பு ஆன்லைன் மூலமாக Permit Renewal செய்யப்பட்ட நிலையில், தற்போது வாகனத்தை நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றால் மட்டுமே Renewal செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். அதோடு, VLTD சாதன விற்பனையில் தமிழகத்தில் ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் அவர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
1.10 லட்சம் வாகனங்கள் பாதிப்பு.. அபராத அச்சம்
இந்திய அளவில் செல்ல உரிமம் பெற்ற தமிழக பதிவு கொண்ட 1,10,504 லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் தற்போது Permit Renewal செய்ய முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையும் மீறி வாகனங்களை இயக்கும் பட்சத்தில், பிற மாநிலங்களில் இருமடங்கு அபராதம் விதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் லாரி உரிமையாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த நிலை நீடித்தால் தமிழகத்தின் சரக்கு போக்குவரத்து சங்கிலி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து துறையினர் கருதுகின்றனர்.
மோட்டார் வாகன அலுவலர்கள் விளக்கம்
இதுகுறித்து மோட்டார் வாகன அலுவலர்களிடம் கேட்கப்பட்டபோது, இம்மாதம் முதல் VLTD சாதனம் பொருத்தப்படாத வாகனங்களின் Permit Renewal செய்ய முடியாது என்று மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ளதாக தெரிவித்தனர்.
தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள 37 நிறுவனங்களில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட VLTD சாதனத்தை பொருத்திய பின்னர், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வாகனத்தை கொண்டு சென்று Permit Renewal செய்து கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.








