சென்னை,ஜூன் 4: கோடை விடுமுறை முடிந்து புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் காலிப்பணியிடங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார்.சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற புதிய கல்வியாண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

பள்ளிகளில் நிலவி வரும் ஆசிரியர் மற்றும் இதர பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்கள் குறித்துப் பேசிய அமைச்சர் “ஏற்கனவே நான் குறிப்பிட்டதைப்போல எந்தெந்தப் பகுதிகளில் எப்போது பணியிடங்களை நிரப்ப முடியுமோ அங்கெல்லாம் துறை சார்ந்த நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சில விவகாரங்கள் தற்பொழுது நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளன.எவ்வாறாயினும் சில சிக்கல்களைச் சட்டப்பூர்வமாகவும் சிலவற்றை மனிதாபிமான அடிப்படையிலும் அணுக வேண்டியுள்ளது.இவை அனைத்தையும் விரிவாகக் கலந்து ஆலோசித்து முறைப்படி கலந்தாய்வு (Counselling) மற்றும் கூட்டங்கள் நடத்தப்பட்டு அனைத்து காலிப்பணியிடங்களும் தகுந்த முறையில் நிரப்பப்படும்” என்று உறுதியளித்தார்.
ALso : சென்னை மின்வாரிய தலைமையகத்தில் ரகசிய ஆவண ஹார்டு டிஸ்க்குகள் மாயம்!
காங்கிரஸ் பினாமியாக த.வெ.க.செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகப் பொருட்கள் திருடப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்குப் பதிலளித்த அமைச்சர் “பள்ளிகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் அந்தந்தக் குழந்தைகளுக்குச் சொந்தமானவை.இதில் எந்தவொரு சமரசத்திற்கும் இடமில்லை.பள்ள வளாகங்களில் திருட்டோ அல்லது அசம்பாவிதங்களோ நடைபெறக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதேனும் புகார்கள் அல்லது குறைபாடுகள் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டால் உடனடியாகச் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்தும் அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான கருத்துக்களைப் பதிவு செய்தார்.”தனியார் பள்ளி நிர்வாகங்கள் தாங்கள் வசூலிக்கும் கட்டண விவரங்களை (Fee Structure) தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மிக வெளிப்படையாகப் பதிவேற்ற வேண்டும்.இதனைப் பள்ளிகள் முறையாகப் பின்பற்றுகின்றனவா என்பதை நான் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவேன்.இது இந்த மாநிலத்தின் மண்ணின் மைந்தர்களுடைய எதிர்காலம் மற்றும் வாழ்க்கை சார்ந்தது என்பதைப் தனியார் கல்வி நிறுவனங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.கட்டண விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று நான் உத்தரவிட்டுள்ளதால் அதனை அவர்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்த கேள்விக்கு விளக்கமளித்த அவர் “கடந்த காலங்களில் சில இடங்களில் தெரிந்தோ அல்லது தெரியாமலோ மூன்றாம் தரப்பினரின் (Third Party) தலையீடுகள் இருந்திருக்கலாம்.லஞ்ச லாவண்யங்கள் காரணமாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் தற்போதைய அரசு ஒற்றைச் சாளர முறையை (Single Window System) நோக்கித் துரிதமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.இந்த ஆட்சியில் எவ்வித அரசியல் தலையீடுகளும் தேவையற்ற லஞ்ச ஊழல்களும் இருக்காது.நாங்கள் வெளிப்படையான நிர்வாகத்தில் கவனம் செலுத்துவது போல எங்களின் பங்குதாரர்களாக இருக்கும் தனியார் பள்ளிகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்கும் போது கல்வி நிறுவனங்கள் மீதான மக்களின் மதிப்பும் மாணவர் சேர்க்கையும் மேலும் அதிகரிக்கும்” என்றார்.
பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும் மாணவர்களின் (School Dropouts) எண்ணிக்கையைக் குறைப்பதற்கான அரசின் திட்டங்கள் குறித்தும் அமைச்சர் விவரித்தார்.”எந்தெந்தப் பள்ளிகளில் மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்துகிறார்கள் அதற்கான சமூக பொருளாதார அல்லது குடும்பப் பின்னணி காரணங்கள் என்ன என்பது குறித்துக் கணக்கெடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.அதிகாரிகள் நேரடியாக மாணவர்களின் வீடுகளுக்கேச் சென்று அவர்களின் குடும்பத்தினரிடம் பேசி பொருளாதார ரீதியாகவோ அல்லது சமூகம் சார்ந்தோ இருக்கும் அத்தனைப் பிரச்சினைகளையும் கண்டறிந்து சரிசெய்வார்கள்.முந்தைய ஆண்டுகளை விடத் தற்போது இடைநிற்றல் பெருமளவு குறைந்துள்ளது.இன்னும் மீதமுள்ள சிறிய இடைவெளியையும் (Gap) அரசு முழுமையாகச் சரிசெய்யும்” என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.








