நெல்லை, ஜூன் 5: நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பெய்து வந்த தென்மேற்குப் பருவமழை நேற்று இரவு முதல் சற்று தணிந்துள்ளது. எனினும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து வரும் தொடர் நீர்வரத்து காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது 61 அடியைக் கடந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கொட்டிய கனமழையால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று வினாடிக்கு 5,140 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 9.5 அடி உயர்ந்து 58.80 அடியை எட்டியிருந்தது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு குறைந்ததைத் தொடர்ந்து அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,402 கன அடியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து வரும் தண்ணீரால் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 61.40 அடியாகப் பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடியாறு அணைப் பகுதியில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Also read : நெல்லையில் ரூ.30 லட்சம் வீட்டு மனை மோசடி: 4 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு
இதேபோல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும் மழையின் வேகம் குறைந்துள்ளது. மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு ஆகிய எஸ்டேட் பகுதிகளில் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையகப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு இன்னும் கட்டுக்குள் வராததால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி இன்று இரண்டாவது நாளாகக் குளிப்பதற்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அருவியின் அழகைக் கண்டு ரசிப்பதற்குக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரை நிலைமை சற்று வேறாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் அதனை ஒட்டியுள்ள செங்கோட்டை, தென்காசி, அச்சன்புதூர், ஆய்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து நீடிக்கிறது. இன்று காலை முதலே பண்பொழி மற்றும் செங்கோட்டை பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாரத்தின் இறுதி நாளான இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மழை நீடிப்பதால் தென்காசி மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. கடனா அணை நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 36 அடியைக் கடந்துள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 2.5 அடி உயர்ந்து 33.5 அடியைத் தாண்டியுள்ளது. இதேபோல், கருப்பாநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 39 அடியாகவும் குண்டாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 25 அடியாகவும் உள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான அடவிநயினார் அணையின் நீர்மட்டமும் இன்று 1 அடி உயர்ந்து 48 அடியை எட்டியுள்ளது.
மறுபுறம் புகழ்பெற்ற குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. லேசான சாரல் மழையுடன் இதமான குளிர்ந்த காற்று வீசி வருவதால், இன்று வார இறுதி நாளான சனிக்கிழமையொட்டி ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. சீசனை அனுபவிக்க அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.








