சென்னை , ஜூன் 25: சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தற்போதைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நிலவி வரும் விவாதங்கள் மற்றும் அரசியல் சூழல்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார்.

சட்டமன்றத்தின் மாண்பு மற்றும் அவையின் அடக்கம் குறித்துப் பேசிய அவர், தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தோழர் ராஜ்மோகன் உட்பட அனைவரும் முதல் நாளில் இருந்தே மாண்பைக் கடைப்பிடித்து வருவதாகக் குறிப்பிட்டார். அரசியல் மேடைகளில் பேசும் பேச்சுக்கள் தனி என்றும் அவைக்குள் தங்களது திட்டங்களையும் கருத்துகளையும் கொள்கைகளையும் மட்டும்தான் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் சட்டமன்றப் பதிவுகளை நேரலையாகக் கொண்டு வந்தது தங்களது தலைவர் என்று குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா இதற்கு முன்பு ஆளும் தரப்பின் முதலமைச்சர் பேசுவதை மட்டுமே ஊடகங்களுக்கு வழங்கிவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதை வெளியிட்டதே இல்லை என்றார். எதிர்க்கட்சிகள் பேசுவதை வெளியே காட்டக் கூடாது என்ற பாதுகாப்பற்ற உணர்வு ஆளும் தரப்பிற்கு எப்போதும் இருக்கும் என்றும் ஆனால் தற்போதைய அரசு எதிர்க்கட்சிகள் பேசுவதையும் நேரலையில் கொண்டு வந்து வெளிப்படைத் தன்மையுடன் நிர்வாகத்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
அரசியல் கட்சியாகப் பொது இடங்களில் மேடைகளில் பேசினாலும் சட்டமன்றத்தில் ஒவ்வொரு கொள்கையும் பட்ஜெட் கூட்டத்தொடரும் மானியக் கோரிக்கைகளும் மக்களின் நலன் சார்ந்தவை என்று அவர் விளக்கினார். மக்களுக்கு எதிரான அல்லது மக்கள் சார்ந்த பிரச்சனைகளை எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பும்போது அதற்கு ஆளும் தரப்பு எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது என்பதை மக்கள் பார்க்கிறார்கள் என்றார். எதிர்க்கட்சி என்பது ஆளும் கட்சியைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் பணி செய்ய வைக்கவும் உதவும் முக்கிய கடமையில் இருக்கிறது என்பதைத் தாங்கள் உணர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார். அவையைத் தான் முதல் நாளில் இருந்தே கவனித்து வருவதாகவும் ஆளுநர் உரைக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசுவதுதான் பொதுவான நடைமுறை என்றும் கூறினார். இதில் அமைச்சர்களாகிய தாங்களே முன்னின்று பேச வேண்டிய அவசியம் இல்லை, அது மரபும் அல்ல என்று அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்திருக்கிறார் என்றும் அவரையும் மீறி அவையில் சொல்லப்படும் வார்த்தைகள், கேலிகள், நையாண்டிகள் மற்றும் ஒருமையில் பேசப்படும் பேச்சுக்களை மக்கள் நேரலையில் பார்த்திருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். முதலமைச்சர் ஒவ்வொரு அவையிலும் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அமைதியாகப் பொறுமையுடன் குறிப்புகளை எடுத்துக்கொண்டு கவனித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆளுநரின் உரை மீதான தீர்மானத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசும்போது தாங்கள் குறுக்கிடுவதில்லை என்றும் ஆனால் தங்களது கொள்கைக்கு எதிராகப் பேசும்போது மட்டுமே எழுந்து பதில் அளிப்பதாகவும் அவர் கூறினார். உதாரணமாக தாங்கள் ஆளுநருடன் சமரசம் செய்துகொண்டதாக உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கொள்கை ரீதியாகத் தாங்கள் சமரசம் செய்துகொள்ளவில்லை என்று எழுந்து பதில் அளித்ததாகக் குறிப்பிட்டார். மேலும் சோபா மாடல் அரசு என்றும், குதிரைப் பேரம் என்றும், மக்களால் தோற்கடிக்கப்பட்டு மெஜாரிட்டி இல்லை என்றும் தவறான தகவல்களையும் கருத்துகளையும் அவையில் முன்வைக்கும்போது தாங்கள் அமைதியாகப் பதில் கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். பெண்கள் பாதுகாப்புப் பிரச்சனை குறித்துச் சிலர் பொய் உரைக்கும்போது தாங்கள் மாண்புடனும் மரபுடனும் எழுந்து பேசுவதாக அவர் கூறினார்.
முதல் நாளில் இருந்தே திமுக உறுப்பினர்கள் முதலமைச்சர் பேச மாட்டாரா அவர் அமைதியாக இருப்பாரா அல்லது ஊமையா என்று கேள்வி எழுப்பி வருவதாக ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார். முதலமைச்சர் தலையில் இடியே விழுந்தாலும் அவர் பேச மாட்டாரா என்று கேட்கப்படும் கேள்விகள் அவையில் இருக்கும் செய்தியாளர்களுக்கும் மக்களுக்கும் தெரியும் என்றார். அவையில் கொறடா யாருக்கு அனுமதி வழங்குகிறாரோ அவர்களே பேச முடியும் என்றும் அதிமுகவில் கொறடா என்ன சொல்கிறாரோ அதன்படியே பேச முடியும் என்பதால் எல்லாரும் எழுந்து பேச முடியாது என்றும் அவர் விளக்கினார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களின் உரைக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றுவார் என்றும் அதன் பின்னர் முதலமைச்சர் அனைவருக்கும் பதில் அளிப்பார் என்பதும்தான் மரபு என்று அவர் கூறினார். இந்த மரபைத் தமிழக வெற்றி கழகமோ முதலமைச்சரோ மீறவில்லை என்றும் நான்கு நாட்களும் ஒவ்வொருவருக்கும் எழுந்து பதில் சொல்ல வேண்டிய கடமையோ மரபோ முதலமைச்சருக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். நேரலையில் ஒளிபரப்பாவதைப் பயன்படுத்தி முதலமைச்சருக்கு எதிராக ஒரு தவறான தோற்றத்தை உருவாக்க திமுக முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார். முதலமைச்சர் பேச மாட்டார், ராஜ்மோகன், செங்கோட்டையன் அல்லது ஆதவ் அர்ஜுனா மட்டும்தான் பேசுவார்களா என்று போலியான பிரச்சாரத்தைச் சட்டமன்றத்தில் உருவாக்கும்போது உண்மை அல்லாதவற்றை மறுப்பது தங்களது கடமை என்று அவர் கூறினார். சோபா மாடல் அரசு என்று சொன்னபோது கூட அது பொய் என்பதால் தாங்கள் அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை என்றார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது கூட பெரிய அளவில் குறுக்கீடுகள் செய்யவில்லை என்றும் தவறான தகவல்கள் வரும்போது மட்டுமே தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துவிட்டு விடுகிறோம் என்றும் அவர் கூறினார். அவைச் சுருக்கத்திலிருந்து நீக்கினாலும் அச்சுப் பதிவில் மட்டுமே நீக்க முடியும் என்றும், நேரலையில் அது ஏற்கனவே மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். 75 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வகையில் மக்கள் நேரடியாகச் சட்டமன்றத்தைக் கவனிக்கும் புதிய சூழல் உருவாகி உள்ளதால் சபாநாயகர் அவைத் குறிப்பிலிருந்து நீக்கச் சொன்னாலும் நேரலையின் மூலம் உண்மை வெளிவந்துவிடுகிறது என்பதால் தாங்கள் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பதாக அவர் கூறினார்.
கடந்த காலங்களில் திமுகவிற்கு ஆதரவளிக்கும் பத்திரிகையாளர்கள் யாரும் ஐந்து வருடங்களாக ஏன் சட்டமன்றத்தை நேரலை செய்யவில்லை என்று கேள்வி எழுப்பவில்லை என்று அவர் விமர்சித்தார். உதயநிதி ஸ்டாலினையோ அல்லது மு.க.ஸ்டாலினையோ பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்காததற்குக் காரணம் அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதுதான் என்றார். தங்களது முதலமைச்சர் நேரலையை ஒளிபரப்புங்கள் என்று சொன்னதே, அவர் தன் மீதும் தனது அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையையும் தைரியத்தையும் காட்டுகிறது என்றார். அரசு வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையுடனும் இருந்தால் மட்டுமே இத்தகைய தைரியம் வரும் என்றும் அந்தத் தைரியத்தை தங்களது தலைவர் செய்து காட்டியிருப்பது மிகப்பெரிய வரலாறு என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இதைச் செய்தியாளர்களோ மக்களோ மறுக்க முடியாது என்றார்.
தற்போது ஐந்து கோடிக்கும் அதிகமான பெண்களும் இளைஞர்களும் சட்டமன்றத்தையும் அரசியலையும் உற்று நோக்கத் தொடங்கியுள்ளனர் என்று ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார். இந்த அரசு தவறு செய்கிறதா, தவறு செய்தால் என்ன பதில் சொல்கிறார்கள் என்பதை மக்கள் கவனிக்கும் ஒரு வெளிப்படைத் தன்மை உருவாகியுள்ளது என்றார். ஒவ்வொரு அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் இன்று மக்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளனர் என்றும் இதுவே மிகப்பெரிய வெற்றி என்றும் அவர் கூறினார். நான்கு நாட்களாக முதலவரைப் பார்த்துத் தலையில் இடியே விழுந்தாலும் பேச மாட்டாரா என்று எள்ளி நகையாடிய திமுகவைப் பார்த்து ஏன் யாரும் மரபு குறித்துக் கேள்வி எழுப்பவில்லை என்றும் அவர் வினவினார்.





