செங்கல்பட்டு , ஏப்ரல் 14: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே ராணுவ பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தும் துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தில், வெடிக்காத நிலையில் கிடந்த குண்டு (Shell) திடீரென வெடித்துச் சிதறியதில் எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற சக மாணவர்கள் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
பெங்களூருவில் உள்ள விமானப்படை குடியிருப்பில் பணிபுரியும் ரமேஷ் சிங் என்பவரின் மகன் எமன்சு யாதவ் (21). இவர் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணுவியல் (EEE) பிரிவில் இறுதி ஆண்டு படித்து வந்தார். திங்கள்கிழமை மாலை எமன்சு யாதவ் மற்றும் அவரது கல்லூரி நண்பர்களான விஷால் வேணுகோபால், ஆர்யன் சர்மா, கிருஷ்ணா சிராஜ் மகாஜன், நிஷ்காஸ் நிராஜ், விராட் சஞ்சய் குமார் ஆகிய ஆறு பேர் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்துள்ள அனுமந்தபுரம் மலைப்பகுதிக்கு மலையேற்றம் (Trekking) சென்றுள்ளனர்.
Also read : விஜயின் திருப்பூர் ரோடு ஷோவுக்கு புதிய பிளான்… தொழிலாளர்களை குறிவைக்கும் அதிரடி அறிவிப்பு?
நீலாங்கரையில் சுவர் ஏறி மரக்கிளையை பிடித்துக்கொண்டு ரசிகர்களை சந்தித்த விஜய்,
அனுமந்தபுரம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இலக்கு வைத்து துப்பாக்கி சுடும் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசிப் பழகும் பயிற்சித் தளம் (Firing range) அமைந்துள்ளது. மாணவர்கள் ஆறு பேரும் மாலை 5.30 மணியளவில் அனுமந்தபுரம் மலை உச்சியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு கைவிடப்பட்ட நிலையில் கிடந்த விசித்திரமான இரும்புப் பொருள் ஒன்றை கவனித்துள்ளனர். அது ராணுவ பயிற்சியின் போது வெடிக்காமல் மீதமிருந்த குண்டு (Unexploded ordnance) என்பதை அறியாத மாணவர்கள், விளையாட்டாக அதை ஆராய முயன்றதாகத் தெரிகிறது.
அப்போது மாணவர்களில் ஒருவர் அந்த இரும்புப் பொருளைத் தனது காலால் தட்டியுள்ளார். இதில் உருண்டு சென்ற அந்தப் பொருள் அருகிலிருந்த பாறாங்கல்லில் பலமாக மோதிய கணத்தில், காதைப்பிளக்கும் சத்தத்துடன் பயங்கரமாக வெடித்துச் சிதறியது. குண்டு வெடித்த வேகத்தில் அதன் கூர்மையான இரும்புத் துகள்கள் எமன்சு யாதவின் மார்பு, தோள் மற்றும் கைகளில் பலமாகத் தாக்கின. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அருகில் நின்றிருந்த விஷால் வேணுகோபாலுக்கு இடது கை மற்றும் விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆர்யன் சர்மா, கிருஷ்ணா சிராஜ் மகாஜன், நிஷ்காஸ் நிராஜ் ஆகிய மூவரும் உடல் முழுவதும் சிறு காயங்களுடன் தப்பினர். அதிர்ஷ்டவசமாக விராட் சஞ்சய் குமார் என்ற மாணவர் எந்தவொரு காயமும் இன்றி உயிர் தப்பினார்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் சிங்கப்பெருமாள்கோவில் காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்த நான்கு மாணவர்களையும் மீட்ட போலீசார், அவர்களை சிகிச்சைக்காக பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எமன்சு யாதவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து சிங்கப்பெருமாள்கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணுவப் பயிற்சித் தளத்தில் வெடிக்காமல் ஆபத்தான முறையில் கிடந்த குண்டு, பொதுமக்களும் மாணவர்களும் நடமாடும் பகுதியில் எப்படி பாதுகாப்பின்றி எஞ்சியிருந்தது என்பது குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ராணுவப் பயிற்சிப் பகுதிக்குள் மாணவர்கள் எவ்வாறு நுழைந்தார்கள் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்





