மதுரை ,ஜூன் 19: மதுரை மாவட்டம் சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ,சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள முக்கிய கடைவீதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கரந்தமலை பகுதியில் உற்பத்தியாகும் பாலாறு ,வடகிழக்கு பருவமழை காலங்களில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஆறு மதுரை மாவட்டத்தின் சூரப்பட்டி ,சிவகங்கை மாவட்டத்தின் அணைக்கரைப்பட்டி ,சிங்கம்புணரி வழியாகப் பாய்ந்து திருப்பத்தூர் வரை செல்கிறது. அதன் பின்னர் விருச்சுழி ஆறு என்ற பெயரில் உருவெடுத்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வங்கக்கடலில் கலக்கிறது. சிவகங்கை ,ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த பாலாற்றின் நீரை நம்பியே அமைந்துள்ளன.
நெல்லை கார் பருவ நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ₹4000 மானியம்: வேளாண் துறை
இந்தச் சூழ்நிலையில் கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் பள்ளப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டப்பட்ட பகுதியிலிருந்து மேல்நோக்கி சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரப்பட்டி என்ற இடத்தில் ,தற்போது மேலும் ஒரு புதிய பெரிய தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறை சார்பில் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 அடி உயரத்தில் இந்தத் தடுப்பணை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ள நிலையில் ,மிகக் குறுகிய இடைவெளியில் மற்றொரு பெரிய தடுப்பணை கட்டப்பட்டால் ,ஆற்றின் கீழ்மடைப் பகுதிகளுக்கு வரும் நீரின் அளவு பெருமளவில் குறையும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வடகிழக்கு பருவமழையை மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கும் சிங்கம்புணரி ஒன்றியம் மற்றும் திருப்பத்தூர் ஒன்றியப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தப் புதிய தடுப்பணை திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பாக ,கீழ்மடைப் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் எவ்விதக் கருத்துக்கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி ,பாலாறு பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி ,மதுரை மாவட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் மதுரை பெரியார் வைகை உபரி கோட்ட நீர்வளத்துறை தலைமை கண்காணிப்புப் பொறியாளர் ,கண்காணிப்புப் பொறியாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளிடம் திட்டத்தை நிறுத்தக் கோரி ஏற்கனவே விரிவான மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ,விவசாயிகள் மற்றும் வணிகர்கள் தங்களின் அடுத்தகட்டப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாகச் சிங்கம்புணரி வணிகர் நலச்சங்கம் விடுத்த அழைப்பின் பேரில் இன்று காலை முதல் வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிங்கம்புணரி நகரம் உட்பட கிருங்காகோட்டை ,பிரான்மலை ,காளாப்பூர் ,சதுர்வேதமங்கலம் மற்றும் மருதிப்பட்டி ஆகிய ஆறு முக்கிய ஊர்களில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் ,மருந்தகங்கள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வணிகர்களின் இந்த ஏகோபித்த ஆதரவால் ஒட்டுமொத்த வர்த்தகப் பகுதிகளும் முடங்கியுள்ளன.
கடையடைப்பு போராட்டத்தை தொடர்ந்து ,புதிய தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்திச் சிங்கம்புணரி பகுதியில் இன்று காலை 11 மணியளவில் பாலாறு பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உரிய தலையீடு செய்ய வேண்டும் என்பதே கீழ்மடைப் பகுதி விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.





