
சென்னை, May 22 தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கே.ஏ. செங்கோட்டையன், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். வரவிருக்கும் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் அவர் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் சூழல்களுக்குப் பிறகு, இத்துறைக்கான புதிய அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர் மேற்கொள்ளும் முதல் கட்ட முக்கிய ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை : இன்று காலை எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்திற்கு வந்த அமைச்சர் செங்கோட்டையனை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, மையத்தின் செயல்பாடுகள், பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் விதம் மற்றும் நவீன கட்டுப்பாட்டு அறையின் தொழில்நுட்ப வசதிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
Also Read : தேவகோட்டையில் பாலியல் புகார் அலட்சியம்: 5 போலீசார் சஸ்பெண்ட்
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆய்வுக் கூட்டத்தில், பருவமழைக் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை அமைச்சர் முன்வைத்தார். குறிப்பாக, கடந்த காலங்களில் பெய்த பெருமழையின் போது சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன, அப்போது மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் எந்த அளவிற்குத் தொய்வின்றி நடந்தன என்பது குறித்து அதிகாரிகளிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
கடந்த மழைக் காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உள்கட்டமைப்புச் சேதங்கள் மற்றும் பயிர்ச் சேதங்கள் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகளின் விபரங்களையும் அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும், பேரிடர்களால் அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்புகள் மற்றும் வருவாய் இழப்பீடுகள் தொடர்பான கோப்புகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.
கடந்த காலப் பிழைகள் மற்றும் சவால்களைக் கற்றுக்கொண்டு, வரவிருக்கும் பேரிடர் காலங்களில் எவ்விதத் தொய்வும் இன்றி, சுதாரிப்புடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
பேரிடர் கால மீட்புப் பணிகளுக்குத் தேவையான அதிநவீன உபகரணங்கள், படகுகள், மரங்கள் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களின் இருப்பு நிலை குறித்து அமைச்சர் விவாதித்தார். அவசரக் காலங்களில் களத்தில் இறங்கிப் பணியாற்றக் கூடிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பேரிடர் மீட்புப் படையினரின் தற்போதைய எண்ணிக்கை, அவர்களின் தயார்நிலை குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
புதிய சவால்களும் அரசியல் முக்கியத்துவமும் : கடந்த ஆட்சிக் காலத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கையாண்டிருந்தார். பேரிடர் மேலாண்மையில் நீண்ட அனுபவம் கொண்ட அவரிடமிருந்து, தற்போதைய அரசியல் சூழலில் இத்துறை புதிய அமைச்சரின் கைக்கு மாறியுள்ளது.
மழைக்காலம் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வரவிருக்கும் சவாலான பேரிடர் காலத்தை புதிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. நிர்வாக ரீதியாகத் துறை அதிகாரிகளைத் தன்வசப்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொய்வின்றித் தொடங்குவதற்கான முதற்படியாகவே இந்த அவசர கால செயல்பாட்டு மைய ஆய்வு பார்க்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை பணிகளில் எவ்விதத் தொய்வும் இருக்கக் கூடாது என்றும், மாவட்ட வாரியாகக் கட்டுப்பாட்டு அறைகளை இப்போதே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இந்த ஆய்வின் போது உத்தரவிட்டுள்ளார்.





