காஞ்சிபுரம் ,ஜூன் 19 : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தியின் 56-வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அருள்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் நகர காங்கிரஸ் தலைவர் நாதன் ஆகியோர் முன்னிலை வகித்து விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். விழாவின் தொடக்கமாக காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாவட்டத் தலைவர் அருள்நாதன் தலைமையில் திரண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து தங்களது மரியாதையைச் செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடங்கின.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக காந்தி சாலைப் பகுதியில் பிரம்மாண்ட அன்னதான முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சுமார் 100 கிலோ எடையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட சிக்கன் பிரியாணி 1000-க்கும் மேற்பட்ட நபர்களுக்குத் தட்டுகளில் பரிமாறப்பட்டது. ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட இந்த அசைவ அன்னதான நிகழ்வு உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
also : நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள்: 17 பேர் அதிரடி கைது
சமீபகால அரசியல் சூழலில் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து தற்போதைய ஆட்சியில் காங்கிரஸ் கட்சி பங்கேற்றுள்ள நிலையில் இந்த ஆண்டின் பிறந்தநாள் விழா அரசியல் வட்டாரத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை காஞ்சிபுரத்தில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சியினரால் மிகவும் எழுச்சியுடனும் விமரிசையாகவும் கொண்டாடப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கட்சிப் பாகுபாடின்றி பெருந்திரளாகத் திரண்டு வந்து இந்த விழாவில் கலந்துகொண்டனர்





