

திருநெல்வேலி,மே 21: திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் பெண் ஒருவர், தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட கணவரை மீட்டு தரக் கோரி காவல்துறை உயரதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். தனது கணவருக்கு ஆணவக் கொலை ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
திருநெல்வேலி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சாருமதி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மருதநாயகம் என்பவரை காதலித்து, கடந்த மார்ச் மாதம் தென்காசி மாவட்டம் திருமலை குமாரசுவாமி கோவிலில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் திருநெல்வேலி அண்ணாநகரில் உள்ள சாருமதியின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
மருதநாயகம் வேலை நிமித்தமாக வெளியூரில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சாருமதியின் தாயார் உயிரிழந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து இறுதிச்சடங்கில் பங்கேற்க மருதநாயகம் திருநெல்வேலி வந்துள்ளார். குடும்ப சூழ்நிலையால் திருமண பதிவு செய்யும் பணியும் தாமதமானதாக மனுவில் கூறியிருந்தார்.
இதற்கிடையில் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக மருதநாயகம் கடந்த 23ஆம் தேதி தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் அகரம் பகுதிக்கு சென்றுள்ளார். வாக்களித்த பின்னர் நண்பரின் வீட்டில் தங்கியிருப்பதாக அவர் சாருமதியிடம் கூறியுள்ளார் . ஆனால் மறுநாள், மருதநாயகத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது நண்பரின் வீட்டுக்கு வந்து அவரை தாக்கி அழைத்துச் சென்றதாக சாருமதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி மருதநாயகம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனக்கு ஆபத்து இருப்பதாகவும் உதவி செய்யும்படியும் கூறியதாக சாருமதி தெரிவித்துள்ளார். இதையடுத்து மாநகர காவல்துறையின் உதவியுடன் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Also Read : தென் மண்டலத்தில் ‘ஆபரேஷன் ஷீல்டுநெட்’- ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி அதிரடி
இந்த புகாரின் அடிப்படையில் முறப்பநாடு காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறிய சாருமதி, பின்னர் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் தனியாக மனு அளித்துள்ளார்.
இந்த நிலையில், காவல்துறையினர் மருதநாயகம் தற்போது ஒரு தனியார் பவுண்டேஷனில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, சாருமதியை அங்கு அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார் . அப்போது இருவரும் சில நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டதாகவும், நீண்ட நேரம் உரையாட அனுமதி வழங்கப்படாமல் மீண்டும் அவரை அழைத்துச் சென்றதாகவும் சாருமதி தெரிவித்துள்ளார்.
மேலும், முறப்பநாடு காவல் நிலையத்தில் மருதநாயகம் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை முதல் தகவல் அறிக்கை நகல் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து தனது கணவரை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்த சாருமதி, மீண்டும் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதோடு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் இதுவரை பயனில்லை என அவர் கூறியுள்ளார்.
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதாலேயே தனது கணவர் தன்னிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஆணவக் கொலை ஆபத்து இருப்பதாகவும் சாருமதி பதட்டதுடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும், மருதநாயகத்தின் உறவினர்கள் தமக்கு தொடர்ந்து தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் சாருமதி குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, காவல்துறையினர் எந்த தகவலும் தெரிவிக்காமல் தனது கணவரை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டதாக கூறியிருப்பது தன்னை மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தந்தையை இழந்த நிலையில், இந்த ஆண்டு திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தாயாரையும் இழந்துவிட்டதாக கூறிய சாருமதி, தற்போது தனிமையில் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனது கணவர் கடும் நெருக்கடியில் இருப்பதாக கூறிய அவர், அவரை மீட்டு தன்னுடன் பாதுகாப்பாக சேர்க்க காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.













