மதுரை, May 25 : “நான் தேர்தலில் போட்டியிட்டபோது, ‘தோற்றுப்போய் கடனாளியாக நடுத்தெருவில் நிற்பார்’ என சிலர் ஏளனம் பேசினர். ஆனால், அவர்கள் மத்தியில்தான் இன்று அமைச்சராக உங்கள் முன் நிற்கிறேன்,” என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விசுவநாதன் உருக்கமாகப் பேசியுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் திமுக கூட்டணியின் கீழ் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு பெ. விசுவநாதன் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, அவர் தமிழக அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சர் பதவி ஏற்ற பிறகு, தனது தொகுதிப் பக்கமாக முதன்முறையாக வருகை தந்த அவர், கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளபட்டி கிராமத்தில் இருந்து தனது வாக்காளர் நன்றி அறிவிப்புப் பயணத்தைத் தொடங்கினார்.
முன்னதாக மேலூர் தொகுதிக்கு வருகை தந்த அமைச்சருக்கு, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கிரேன் மூலம் ஆளுயர ராட்சத மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும் தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Also Read : திருக்குறுங்குடி அருகே கஞ்சா, போதை சாக்லேட் பதுக்கி வைத்திருந்த நபர் கைது
தொடர்ந்து பள்ளபட்டி கிராமத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் விசுவநாதன், தனது அரசியல் நகர்வுகள் குறித்தும், தனக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்தும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
“சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற உடனேயே தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல வர வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், என் மனதிற்குள் ஏதோ ஒரு நல்ல அறிகுறி தோன்றியது. அதன்படியே, இன்று வெறும் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமில்லாமல், தமிழகத்தின் அமைச்சராக உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். கடந்த மே 20-ஆம் தேதி எனது பிறந்தநாளின் போது, எனக்கு வாழ்த்துத் தெரிவித்த தமிழக முதலமைச்சர், காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ஒப்புதலோடு, எனக்கு இந்த அமைச்சர் பதவியைப் பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார். முதலமைச்சரின் அனுமதியோடுதான் இந்த நன்றி அறிவிப்புப் பயணத்தை இன்று நான் மேற்கொண்டு வருகிறேன்.” — பெ. விசுவநாதன், உயர்கல்வித்துறை அமைச்சர்.
தேர்தல் களத்தில் தான் எதிர்கொண்ட சவால்களையும், தனிநபர் விமர்சனங்களையும் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், “நான் தேர்தலில் தோற்றுப் போய்விடுவேன் என்றும், கடனாளியாக நடுத்தெருவில் நிற்கப் போகிறேன் என்றும் சிலர் ஏளனமாகப் பேசினார்கள். ஆனால், மக்களின் பேராதரவோடு அந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து, இன்று அமைச்சராகப் பொறுப்பேற்று உங்கள் கிராமத்திற்கே வந்து இந்த நன்றியைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்,” என்றார்.
மேலும், மேலூர் தொகுதி மக்களின் நீண்டகாலத் தேவைகளையும், அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவதே தனது முதல் பணி என்றும் அவர் உறுதியளித்தார்.நிகழ்ச்சியின் போது, கிராம மக்கள் தங்கள் பகுதி சார்ந்த குடிநீர், சாலை வசதி மற்றும் இதர கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அமைச்சரிடம் நேரில் வழங்கினர். பொதுமக்களின் கோரிக்கைகளைக் கனிவோடு கேட்டறிந்த அமைச்சர், அவற்றை உடனடியாகத் தனது குறிப்பேட்டில் பதிவு செய்து கொண்டார். “மனுக்களில் உள்ள கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுக்கு உறுதியாகத் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று பொதுமக்களுக்குப் உறுதியளித்தார்.








